‘அடுத்த வாரம் குழந்தைகளுக்காக வேலையை விட்ட அம்மாக்கள்’ என்று முடித்திருந்ததைப் படித்துவிட்டு ஒரு வாசகி ‘வேலையை விடுவதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே!’ என்று கருத்துரை இட்டிருந்தார்.

நிறையப் பெண்கள் இவரைப்போலத்தான் நினைக்கிறார்கள். வேலையையாவது, நானாவது விடுவதாவது, நெவர்!

‘குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ளுவாள். அம்மாவுக்கு உதவியாக – குழந்தையை தூக்கிக் கொள்ள, வேடிக்கை காட்ட, விளையாட ஒரு சின்னப் பெண் – மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு ஆள். காலையில் சமையல் டிபன் வேலையை நான் பார்த்துக் கொண்டுவிடுவேன். காலையில் 9 மணிக்குப் போனால் மாலை 6 மணிக்கு வந்துவிடுவேன். ஸோ, வேலையை விட வேண்டிய அவசியம் இல்லை.’ பல இளம் பெண்கள் குழந்தை பிறந்தவுடன் இப்படி ஒரு இனிமையான கனவில் மூழ்குகிறார்கள்.

ஆனால் பல சமயங்களில் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை.

ஷாலினி கொல்கத்தாவிலிருந்து திருமணம் ஆகி எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வந்தவள். மென்பொருள் பொறியியலாளர். காலை 9 மணிக்குப் போய்விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடலாம். சௌகரியமான வேலை நேரம். கைநிறைய சம்பளம்.

முதல் குழந்தை பிறந்தவுடன் அம்மாவை வரவழைத்துக் கொண்டாள். கூடவே சுமார் 10 வயசுப்பெண், குழந்தையைப் பார்த்துக் கொள்ள. ஒரே ஒரு விஷயத்தை ஷாலினி யோசிக்க மறந்தாள். அவள் அம்மா ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவர். நகர வாழ்க்கைக்கு ரொம்பவும் புதிது. அவள் அம்மாவிற்கோ, அந்தப் பெண்ணிற்கோ இந்த ஊர் மொழி பேச வரவில்லை. ஆங்கிலமும் வரவில்லை. அதனால் எல்லாவற்றிற்கும் ஷாலினியே வர வேண்டியிருந்தது. குழந்தையை மருத்துவரிடம் அழைத்துப் போவதிலிருந்து, சமையலுக்கு வேண்டிய சாமான்கள், காய்கறிகள், பழங்கள், பால், தயிர் வாங்கி வருவது வரை எல்லாமே ஷாலினியின் பொறுப்பு. குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் உதவிக்கு வந்த பெண் ‘பெரியவள்’ ஆகிவிட்டாள். அவளை ஊருக்கு அனுப்பிவிட்டால் குழந்தையை யார் தூக்கி வைத்துக் கொள்வார்கள்?

அதனால் ஷாலினிக்கு இப்போது கூடுதல் பொறுப்பு. அந்தப் பெண்ணையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருநாள் ஷாலினியை அவள் அம்மாவுடனும் குழந்தையுடனும் காய்கறி கடையில் பார்த்தேன்.

அவள் அம்மாவிற்கும் எனக்கும் நடுவில் புன்னகை தான் மொழி.

‘என்ன ஷாலினி, வாழ்க்கை எப்படி இருக்கிறது?’

‘வேலையை விட்டுவிடலாம் என்றிருக்கிறேன், ஆன்டி…’

எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யம். கூடவே அதிர்ச்சி. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் ஷாலினி வாடிப் போயிருந்தாள். ‘என்னம்மா ஆயிற்று?’

‘வீட்டிலும் பார்த்துக் கொண்டு வெளியிலும் போய்விட்டு வருவது என் மன நிலையை ரொம்பவும் பாதிக்கிறது ஆன்டி. நான் ரொம்பவும் சிடுசிடுவென்று ஆகிவிட்டதாக என் அம்மா சொல்லுகிறாள். ‘நாள் முழுக்க குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன். சாயங்காலமாவது நீ வந்து என்னை வெளியில் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா என்கிறாள். நாள் முழுவதும் அலுவலகத்தில் கணணி முன் உட்கார்ந்து வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து ஓய்வு எடுத்தால் தேவலை போல இருக்கிறது. அம்மாவிற்கு இது புரிந்தாலும், இங்கே கட்டிப் போட்டாற்போல இருக்கிறது. சொந்த ஊரில் என்றால் அம்மாவுக்கு வெளியே போவது பிரச்னையே இல்லை. தெரிந்த ஊர். தெரிந்த மனிதர்கள். தெரிந்த பாஷை.

‘உதவிக்கு கூட்டி வந்த பெண் பெரியவள் ஆகிவிட்டாள். அவளை வைத்துக் கொள்ள பயமாக இருக்கிறது. நம் குழந்தையை பார்த்துக் கொள்ளவே நேரம் இல்லாத போது இன்னொரு பொறுப்பை எப்படி சுமப்பது?’

‘வேலை நேரம், கை நிறைய சம்பளம் எல்லாம் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே?’

‘நிஜம் தான். குழந்தை பிறந்தபின் வாழ்க்கையே மாறிவிட்டது போல இருக்கிறது, ஆன்டி. பகல் முழுவதும் அம்மா குழந்தையைப் பார்த்துக் கொள்வதால், வேலையிலிருந்து வந்தவுடன் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். அதனால் இரவு தூங்க வெகு நேரம் ஆகிறது. காலையில் சீக்கிரம் எழுந்தால்தான் சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல முடிகிறது. என்றாவது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால் அலுவலகத்திலிருந்து வருவது தாமதமாகிறது. அம்மா ரொம்ப கவலைப் படுகிறாள்.

‘குழந்தை பெரியவன் ஆகிவிட்டான். முன்போல வீட்டிற்குள் வைத்துக் கொள்ள முடிவதில்லை.

‘ஏதாவது குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குப் போகலாமே!’

‘எனக்கு அதில் விருப்பம் இல்லை. நான் வாங்கும் சம்பளம் வேலை ஆட்களுக்குக் கொடுத்தே செலவாகிறது ஆன்டி. இதைவிட நான் வீட்டில் இருந்தால் குழந்தையையும் பார்த்துக் கொள்ளலாம். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டாம். அம்மாவும் சந்தோஷமாக கிராமத்துக்குப் போயிருப்பாள். எல்லாவற்றிற்கும் மேலாக, வயது வந்த பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிலிருந்து விடுதலை!’

‘இப்போதே ஒருவாரமாக விடுப்பில்தான் இருக்கிறேன். முதல் வேலையாக அந்தப் பெண்ணின் தாயாரை வரவழைத்து அவளை ஊருக்கு திரும்ப அனுப்பிவிட்டேன். அதுவே எனக்குப் பெரிய ஆறுதல்.’

‘உனக்கு வேலையை விட்டது வருத்தமாக இல்லையா?’

‘நிச்சயமாக இல்லை. நிறைய யோசித்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். யார் யாருக்கோ பதில் சொல்வதைவிட நமக்கு என்று இருக்கும் கடமைகளைச் செய்யலாமே என்று தோன்றுகிறது.’

 

 

‘கவலைப் படாதே. குழந்தை சற்று பெரியவனானவுடன் மறுபடி நீ வேலைக்குப் போகலாம்’ என்றேன் அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக.

‘என் மாமியாருக்கும், என் கணவருக்கும் இன்னொரு குழந்தை வேண்டுமாம். தனிமரம் தோப்பாகாது என்று ஏதோ சொல்கிறார்கள். அதனால் மறுபடி வேலைக்குப் போவது என்பது சற்று சிரமம் தான்.’

‘உங்களைப்போல இணையத்தில் ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன். உங்களிடமே வருகிறேன், பயிற்சி பெற,’ என்றாள் ஷாலினி சிரித்துக் கொண்டே.

‘நிச்சயம் வா. என்னால் முடிந்ததை சொல்லித் தருகிறேன்.’ என்று சொல்லி விடை பெற்றேன்.

ஷாலினியின் சூழ்நிலை அவளுக்கு சாதகமாக இல்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்தாள். ஆனால் பகுதி நேர வேலை பார்க்கும் என் தோழியின் பெண், உமாவும் வேலையை விட்டுவிட்டதாகச் சொன்னாள்.

உமாவிற்கு ஓர் கல்லூரியில் பகுதி நேர லெக்சரர் வேலை. உமாவிற்கு இரண்டு குழந்தைகள். மாமனார், மாமியார் என்று கூட்டுக் குடும்பம்.

‘பகுதி நேர வேலை. வாரத்திற்கு நான்கு நாட்கள் போனால் போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, ஏன் வேலையை விட்டுவிட்டாய்?’ என்று உமாவைக் கேட்டேன்.

‘பகுதி நேரம் என்றாலும் முழு நேரம் வேலை செய்யும் ஆசிரியர்களைப் போலவே நானும் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு செமஸ்டரில் 3 முறை உள்தேர்வுகள் இருக்கும். ஒவ்வொருமுறையும் கேள்வித்தாள் தயாரிப்பதிலிருந்து விடைத் தாள்களை திருத்தி மதிப்பெண்கள் கொடுத்து முடிக்கும்வரை முதுகு ஒடிந்து போகிறது.

நான் சொல்லிக் கொடுப்பது பைனான்ஸ் பாடம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய கணித கேள்விகள் இருக்கும். அவற்றை எப்படி விடுவிப்பது என்று சொல்லித் தரவேண்டும்.

இரண்டு மணி நேரம் வகுப்பு என்றால் நான் நான்கு மணிநேரம் செலவழித்துப் படிக்க வேண்டும். நோட்ஸ் தயார் செய்ய வேண்டும். இதெல்லாம் கூட நானும் நிறையக் கற்கிறேன் என்று நினைத்துக் கொண்டு செய்துவிடலாம். ஆனால் கூட வேலை செய்யும் ஆசிரியர்களின் போட்டி பொறாமை எனக்கு வருத்தமளிக்கிறது. நிறைய அரசியல்.

என் கணவர் சின்னதாக ஏதாவது சொன்னால் கூட எனக்குத் தாங்காது. யார் யாரையோ நான் ஏன் திருப்தி செய்ய வேண்டும்?

எல்லாவற்றையும்விட நான் என் குழந்தைகளிடமிருந்து விலகிப் போகிறேனோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டேன்.

‘நான் இன்னிக்கு உங்கிட்ட என்னவோ சொல்லணும்னு நினைச்சேன். நான் வரும்போது நீ இல்லை’ என்று என் குழந்தைகள் ஒருமுறை சொன்னபோது குழந்தைகளை கவனிப்பது இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. என்னிடம் கிடைக்காத அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் வேறோருவரிடத்தில் அவர்கள் தேட ஆரம்பித்தால்?

வேலைக்குப் போவது, சம்பாதிப்பது தவிர ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக எனக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. அவைகளை சரியாகச் செய்தால் போதும் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்காக என் வேலையை தியாகம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனிப்பது என் பொறுப்பு. அவர்களை நல்ல குழந்தைகளாக வளர்ப்பது என் பொறுப்பு. என் ஆரோக்கியமும் முக்கியம். வேலைக்குப் போவது எனது உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனாலேயே வேலையை விட்டுவிட்டேன்’ என்றாள் உமா.

இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வரும் அருமைத் தோழிகளுக்கு இங்கு நான் சொல்லியிருப்பது எல்லாமே நான் சந்தித்த பெண்களின் மனநிலைதான். இப்படிச் சொல்வதால் நான் பெண்கள் வேலைக்குப் போவதை எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

வேலைக்குப் போவது மட்டும் தான் சாதனை என்பதில்லை. வீட்டுப் பொறுப்பும், குழந்தைகள் வளர்ப்பும் கூட வேலைக்குப் போவதற்கு சமமான ஒரு பொறுப்புதான். இரண்டையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்னும் போதுதான் மனம், உடல் இரண்டும் பாதிக்கப் படுகின்றன.

சமீபத்தில் ஒரு கவிதை படித்தேன்: தலைப்பு :Where are you mom? டாக்டர் மாலா டேவிட் என்பவர் எழுதியது.

நான் படித்த இன்னொரு விஷயம் திரு சேதன் பகத்தின் ‘பெண்களுக்கு ஒரு வார்த்தை’

வரும் வாரம் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டு மறுபடி குழந்தை வளர்ப்பை விட்ட இடத்திலிருந்து தொடருவோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book