‘உங்க பேரு என்ன?’

‘என் பேரா?’

‘ஆமாங்க…’

‘வசந்தி….’

‘என்ன பண்றீங்க வசந்தி?’

‘நானா?’

‘ஆமாங்க நீங்கதான்…..’

‘ஒண்ணுமில்லீங்க, வீட்டுல சும்மா ஹவுஸ்வைஃப் – ஆ இருக்கேன்….!’

நம்ம ஊரு தொலைக்காட்சிகளில் அடிக்கடி கேட்கும் உரையாடல் இது.

இந்த உரையாடலைக் கேட்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். ஹவுஸ்வைஃப் வீட்டுல சும்மாவா இருக்காங்க? அதென்னவோ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைக்குப் போனால்தான் தங்களுக்கு மதிப்பு; அலுவலகம் செல்லும் பெண்களைப் போல நாம இல்லையே என்ற மனக்குறை. அக்கரைப் பச்சை!

அந்தக் காலம் போலல்லாமல், இப்போது பெண்கள் வேலைக்குப் போவது அதிகமாகி வருகிறது. சமையலறையை விட்டு வெளி உலகத்திலும் தங்கள் திறமையைக் காட்ட விரும்ப கிறார்கள். பொறுமை, குழந்தைகளிடத்தில் பாசம் இவை பெண்களுக்கு இயல்பாக அமைந்த குணங்கள். இதன் காரணமாகவே முன்பெல்லாம் ஆசிரியர் வேலை என்றால் பெண்கள் தான். பெண்கள் என்றால் ஆசிரியர் வேலைதான் என்று இருந்தது. ஆனால் இப்போது எல்லாத் துறைகளிலும் பெண்கள் நுழைந்து வியத்தகு முறையில் முன்னேறி வருகிறார்கள். சில பெண்கள் தங்கள் படிப்பை வீணாக்க வேண்டாம் என்று வேலைக்குப் போனாலும், சிலர் நிஜமான பணத் தேவைக்காக வேலைக்குச் செல்லுகிறார்கள். குழந்தை பிறந்துவிட்டால் அதன் தேவைக்காக பணம் சம்பாதிக்கும் கட்டாயம் அதிகரிக்கிறது.

அலுவலகம் செல்லும் பல பெண்களுக்கு நாம் வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் யாரிடம் அதை விட்டுவிட்டுப் போவது என்ற கேள்வி எழும். அதனால் குழந்தை பேற்றையே தள்ளிப் போடும் பெண்களும் இருக்கிறார்கள். தங்களது அலுவலகப் பணியை விடவும் முடியாமல், அதன் காரணமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்

 

எத்தனைதான் பெண்கள் வேலை செல்லுவதை ஏற்றுக் கொண்டாலும், வீட்டுப் பொறுப்பையும் (முக்கியமாக குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு!) அவளே சுமக்க வேண்டும் என்கிற சமுதாய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. என்ன செய்வாள் பெண்? இரட்டைக் குதிரைகளில் பயணம்!

சமாளிக்க சில யோசனைகள்:

முடிந்த அளவு பிரசவ கால விடுமுறையை நீட்டிக்கலாம். பொதுவாக பிரசவ கால விடுமுறை 3 மாதங்கள் கிடைக்கும். அதன் பிறகு மருத்துவ விடுமுறை (sick leave), தற்காலிக விடுப்பு (Casual Leave), ஈட்டிய விடுமுறை (Earned Leave) அரைச் சம்பளத்தில் விடுமுறை, சம்பளமே இல்லாத (உங்கள் வேலைக்கு ஆபத்து இல்லாத) விடுமுறை என்று என்னென்ன விடுமுறைகள் உண்டோ அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைக்கு 6 மாதங்கள் வரை இப்படி சமாளிக்கலாம். வீட்டில் அப்பா, அம்மா, மாமியார், மாமனார் இவர்கள் இருந்தால் கவலை இல்லை. குழந்தையை தைரியமாக இவர்களிடம் விட்டுவிட்டுப் போகலாம்.

தூரத்துச் சொந்தங்கள் யாராவது – அத்தை, சித்தி என்று இருந்தால் அவர்களின் உதவியை நாடலாம்.

வெளியிலிருந்து புதிதாக யாரையாவது குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்து முன் தீர விசாரிக்கவும். இவர்களை முழு நேரப் பணியிலா அல்லது பகுதி நேரப் பாணியிலா (நீங்கள் அலுவலகம் போய்த் திரும்பும் நேரம் வரை) எவ்வாறு வேலைக்கு அமர்த்தப் போகிறீர்கள் என்று முதலில் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். இப்படி வேலைக்கு அமர்த்தும் போது சற்று வயதானவர்களாக பார்ப்பது நல்லது – பேரன் பேத்தி என்று அனுபவம் இருக்கும். வயதானவர்கள் என்றாலும், ஓரளவு ஆரோக்கியமானவர்களாக நோய்நொடி இல்லாதவர்களாக இருக்கட்டும்.

நீங்கள் வேலைக்கு மறுபடி போக ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் பத்து நாட்கள் முன்பே அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டு வீட்டின் பழக்க வழக்கங்கள், குழந்தைக்குப் பால் கரைப்பது, திட உணவு தயாரிப்பது போன்றவற்றை தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். குழந்தை உணவுகளைத் தயாரிக்கச் சொல்லி மேற்பார்வை பாருங்கள். அவர்கள் சுத்தமாக குளித்துவிட்டு, நல்ல துணிமணிகளை அணிந்து வரவேண்டும் என்பனவற்றை வேலையில் சேரும்போதே சொல்வது நல்லது. நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள், அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சம்பளம், உணவு போன்றவற்றை தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

வீட்டினுள் புதிதாக ஒருவர் வேலைக்கு வந்தால் அதுவும் காலையிலிருந்து மாலை வரை வீட்டிற்குள் இருக்கப் போகிறார் என்றால் வீட்டின் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு.

அங்கங்கே சில்லறைகளைப் போடுவது, செல்போன், வாட்ச், தங்க வளையல்கள் ஆகியவற்றைக் கண்ட இடத்தில் வைப்பது ஆகியவை எத்தனை நல்லவர்கள் ஆனாலும் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும். இதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பு ரொம்பவும் முக்கியம். முதல் நாளிலிருந்தே அவர்களது கடமையை சொல்லிக் கொடுப்பதுடன், அவர்களின் எல்லைக்கோட்டையும் புரிய வைத்துவிடுங்கள். குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும்போது மருந்து கொடுப்பது, உணவுகளை கொடுப்பது போன்றவற்றை சரியான முறையில் பழக்கப் படுத்துங்கள்.

அவர்களிடம் கைபேசி இருப்பது நல்லது. உடல்நலக்குறைவு காரணமாக வர முடியவில்லை என்றால் உடனே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு தான் சொன்னாலும் திடீர் திடீர் என்று வேலைக்கு வராமல் போவது, வந்துவிட்டு பாதி நாளில் ஏதோ காரணம் சொல்லி சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் சகஜமாக நடக்கும். இதையெல்லாம்சமாளிக்க நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.

நீங்கள் எவ்வளவுதான் நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் இவர்களை திருப்தி படுத்துவது என்பது கொஞ்சம் கடினம்தான்.

வெளி ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் இந்தத் தலைவலியே வேண்டாம். வேறு யோசனை சொல்லுங்கள் என்பவர்களுக்கு:

வீட்டிலிருந்தே உங்கள் அலுவலக வேலையை செய்ய முடியுமா என்று பார்க்கலாம். இப்போது இருக்கும் வேலையிலேயே தொடர்ந்து இந்த மாதிரி வாய்ப்புக் கிடைக்குமா என்று குழந்தை பிறப்பதற்கு முன்பே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பல அலுவலகங்களில் இந்த மாதிரிச் செய்வது மேலதிகாரிகளுக்குப் பிடிப்பதில்லை. (பாஸ் தொலைபேசும் போது, குழந்தை அழும் சத்தம் கேட்டால் அவருக்குக் கோபம் வரலாம்) குழந்தைக்கு உடல்நலக்குறைவு காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் வேலையை முடிக்க முடியாமல் போகலாம்.

இரண்டாவது யோசனை:

உங்களுக்கு பொறுப்பு அதிகம்; நிறையப் பேர்களுடன் குழுவாகச் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை; தொலைபேசியில் பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் வீட்டிலிருந்து வேலை செய்வதானாலும் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியாது என்று தோன்றினால் தாற்காலிகமாக சற்று பொறுப்பு குறைவாக உள்ள வேலையை ஒப்புக் கொள்ளலாம். இதையும் குழந்தை பிறப்பதற்கு முன்பே உங்கள் மேலதிகாரியுடன் பேசி முடிவெடுங்கள். உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்க அவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அலுவலக வேலையையும் பார்க்க வேண்டும் என்பதால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். குழந்தை வளர்ப்பு, உங்கள் அலுவலகப்பணி இரண்டையும் செம்மையாக செய்ய முடியாமல் போகலாம்.

குழந்தைக்காக வேலையை விடவேண்டுமா?

இந்தத் தொடரை தொடர்ந்து வாசிக்கும் பெண்மணிகளின் யோசனை என்ன?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book