நேற்று என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அக்காவிற்கு அழகழகான இரண்டு பேத்திகள். நேற்று வீட்டில் பேத்திகளுக்குள் சண்டை. அக்கா இருவரையும் ‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியிருக்கிறாள். சின்னவள் சொல்லுகிறாளாம்: ‘ஐயம் அப்செட் வித் யு, பாட்டி’ என்று. இதை சொல்லிவிட்டு அக்கா சிரித்துக்கொண்டே சொன்னாள்: ‘ மூணரை வயதில் என்ன பேச்சு பேசுகிறது, பாரு..!’ எனக்கும் சிரிப்புதான். எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதோ இப்போது உங்களிடமும் சொல்லிவிட்டேன்.

 

குழந்தைகளின் பேச்சு எந்த நிலையிலும் நம்மை ரசிக்க வைக்கும். போனவாரம் சொன்னதுபோல சில குழந்தைகள் மெதுவாகப் பேச ஆரம்பிக்கும். ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

 

நாம் பேசுவதைக் கேட்டுக்கேட்டுத்தான் குழந்தைகள் பேசக் கற்கிறார்கள். அதனால் குழந்தையுடன் அதிகம் பேசுங்கள். சின்ன சின்ன விஷயங்களைக் கூட அதனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘இன்னிக்கு என்ன சமையல் செய்யலாம்?’ ‘உனக்கு புடலங்காய் பிடிக்குமா?’ ‘அம்மாவுக்கு இந்தப் புடவை/சூடிதார் நன்னா இருக்கா?’ ‘ இன்னிக்கு அம்மாவுக்கு சமையல் செய்யவே பிடிக்கல, ராத்திரி அப்பா வந்தவுடன் 1947 (உணவகம்) போகலாமா?’ என்று நீங்கள் மனதில் நினைப்பதையெல்லாம் குழந்தையிடத்தில் சொல்லுங்கள்.

 

பெற்றோர் எப்போது தங்கள் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றி கவலை கொள்ள வேண்டும்? பொதுவாக குழந்தைகளின் பேச்சுத் திறனில் சில மைல்கல்களை அறிந்து கொள்வது நல்லது.

 

மூன்றாம் மாதம்:

சத்தங்களைக் கேட்டால் மிரண்டு, தூக்கிவாரிப் போடும்; அழும். கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாயால் பேசி சமாதானப்படுத்தினால் அழுகை நிற்கும். அழும்போது தொண்டையில் எச்சில் சேர்ந்து ‘களகள’ சத்தம் உண்டாக்கும். ‘குர் குர்’ என்று மெல்லிய சத்தம் உண்டாக்கும்.

 

ஆறாம் மாதம்:

நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்….ங்…’ என்று குரல் எழுப்பும்.

 

ஒரு வயது:

பொதுவான சில வார்த்தைகளை புரிந்து கொள்ளும். ‘வா..’ , ‘உட்காரு…’ ‘டாட்டா…’ சொல்லு போன்றவைகளைப் புரிந்து கொண்டு அதேபோல செய்யும். ‘மா….மா….. த்தை…..ப்பா’ போன்ற இரண்டெழுத்துச் சொற்களைச் சொல்லும்.

 

ஒருவயது கடந்த பின்:

பல்வேறு வகையான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். ‘பாப்பாவோட கண்ணு எங்கே? பாப்பாவோட சின்ன மூக்கு எங்கே?’ என்ற கொள்விகளைப் புரிந்து கொள்ண்டு காண்பிக்க ஆரம்பிக்கும். தானாகப் பேசுவதை விட அதிக வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். புத்தகங்களில் பார்க்கும் பொருட்களை நேரில் பார்த்தால் சந்தோஷத்துடன் காண்பிக்கும். ஒரு விரல், அல்லது தலை ஆட்டுவதன் மூலம் சொல்லவந்ததை நமக்குப் புரிய வைக்கும்.

 

இரண்டு வயதுக்கு மேல்:

‘பாப்பாவோட சீப்பு கொண்டா’, பாப்பாவோட ஷர்ட் கொண்டா’ என்றெல்லாம் சொன்னால் புரிந்து கொண்டு, எடுத்துக் கொண்டு வரும். இரண்டு வயதுக் குழந்தையின் அகராதியில் 300 சொற்கள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

 

மூன்று வயது:

‘குளிக்கலாமா?’ என்றால் ‘வேண்டாம்’ தலையை ஆட்டிக்கொண்டு வாயால் சொல்லும். சைகையும் செயலும் ஒன்றுபடும் நேரமிது. குழந்தையின் அகராதியில் இப்போது 900 வார்த்தைகள் சேர்ந்திருக்கும். குழந்தையால் 200 வார்த்தைகளை பயன்படுத்தி பேசமுடியும்.

 

நான்கு வயது:

நீளமான சொற்றொடர் புரியும். ‘குளிச்சுட்டு, புது சொக்கா போட்டுண்டு வெளில போலாமா?’ என்றால் குஷியாகக் குளிக்கப் போகும்.

 

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

மேற்சொன்ன மைல்கற்கள் எல்லாம் முன்னேபின்னே நடந்தால் கவலைப்பட வேண்டாம். ஒரு சின்ன விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறன் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

• இரண்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே சத்தங்களை தெரிந்து கொள்ளுகிறதா என்று பரிசோதனை செய்யுங்கள்.

• உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பேச்சு சரியாக வரவில்லை என்றால் அதை குழந்தை பிறக்கும் முன்பே மருத்துவரிடம் சொல்லுங்கள்.

• அதேபோல காது சரியாக கேட்காத குறை யாருக்காவது இருந்தால் அதையும் மருத்துவரிடம் சொல்லுங்கள்.

• குழந்தை பிறந்தவுடனே குழந்தையின் கேட்கும் திறனை சோதிக்க தற்போது நிறைய பரிசோதனைகள் இருக்கின்றன. அவற்றை செய்வதன் மூலம் குழந்தையின் பேசும் திறனை அதிகரிக்கலாம்.

 

ஒருவேளை பரிசோதனையில் குழந்தைக்கு காது கேட்காத குறை இருந்தாலும் கவலைப்படவேண்டாம். தற்சமயம் மருத்துவத் துறையில் நிறைய முன்னேற்றங்கள். எந்தக் குறையானாலும் நிவர்த்தி செய்யலாம்.

 

காது கேட்கும் திறனும், பேச்சுத் திறனும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. சத்தங்களைக் கேட்டு குழந்தை அழும்போது நீங்கள் சமாதானப்படுத்தினால், அதான் அழுகை நின்றால், உங்கள் பேச்சு அதற்குக் கேட்கிறது என்று அர்த்தம். சற்றுத் தொலைவில் நின்று கொண்டு கிலுகிலுப்பையை சத்தம் செய்யுங்கள். குழந்தை சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்த்தால் காது கேட்கிறது என்று பொருள்.

 

குழந்தை பேச முயற்சிக்கும்போது நீங்கள் குறுக்கே விழுந்து வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்காதீர்கள். குழந்தையை சுதந்திரமாகப் பேச விடுங்கள். சில வார்த்தைகள் வரவில்லை என்றால் கேலி செய்யாதீர்கள். அதுபோலவே குழந்தை மழலையில் பேசட்டும். நீங்களும் அப்படியே பேசாதீர்கள். நீங்கள் சரியான உச்சரிப்பில் பேசினால் குழந்தையும் சரியாக பேசும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book