‘முதன்முதலில் குதிரை ஏற்றம் கற்றுக் கொள்ளுபவனின் மனநிலை எப்படி இருக்கும்? குதிரையின் மேல் உட்கார்ந்தாகி விட்டது. என்ன ஆகுமோ என்னவோ என்ற பயம்; உடலை இறுக்கி வைத்துக் கொண்டு குதிரையின் கடிவாளத்தை கை சிவக்கும் அளவிற்கு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு…..குதிரைக்கும் கஷ்டம். கற்றுக் கொள்ளுபவருக்கும் கஷ்டம். அனுபவசாலி என்ன செய்வார்? குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்தவுடன், உடலைத் தளர்த்திக் கொண்டு குதிரையின் அசைவுகளுக்கேற்ப தன் உடலை இயக்க, குதிரையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்று எல்லாவற்றிற்கும் மனத்தளவில் தயாராகி இருப்பார். குதிரை ஏற்றத்திற்கும் குழந்தை வளர்ப்புக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?

 

டாக்டர் ஸ்பாக் தனது குழந்தை வளர்ப்பு புத்தகத்தில் ஓரிடத்தில் இப்படிச் சொல்லி விட்டு ‘குழந்தை வளர்ப்பை குதிரை ஏற்றத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் செய்தி ஒன்றுதான்: நீங்கள் எவ்வளவுகெவ்வளவு ரிலாக்ஸ்டாக இருக்கிறீர்களோ அவ்வளவுகவ்வளவு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என்கிறார்.

 

நம்மூரில் ஒரு சொலவடை உண்டு : மூத்தது மோழை; இளையது காளை என்று. முதல் குழந்தை கொஞ்சம் அசடாகத்தான் இருக்கும்; சின்னது பாய்ந்து செல்லும் என்று பொருள். ஏன் இப்படி என்பதுதான் இன்று நமது பேசுப் போகிற விஷயம்.

 

முதல் குழந்தையின் மேல் நாம் காண்பிக்கும் அதீத அக்கறை தான் இதற்குக் காரணம் என்று டாக்டர் ஸ்பாக் சொல்லுகிறார். குழந்தைக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை என்றால் பெற்றோர்கள் அதன் அருகிலேயே இருந்து ‘கொஞ்சம் இருமித்து; கொஞ்சம் மூக்கு அடைச்சிண்டு இருக்கு’ என்று குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பது. குழந்தையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது, அதுவாகவே விளையாடட்டும் என்று விடாமல் இப்படி விளையாடு, அப்படி விளையாடு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பது; குழந்தை நடந்தால், ‘ரொம்ப நடக்காதே, கால் வலிக்கும்; மாடிப்படி கிட்ட போகாதே, விழுந்துடுவ; ரொம்ப சிரிக்காத வயித்த வலிக்கும்’ இது போல குழந்தையை தானாக அதன் போக்கில் இயங்கவே விட மறுப்பது. விளையாட்டில் மட்டுமல்ல; ஏதாவது விஷமம் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டு அறிவுரைக்கு மேல் அறிவுரை சொல்லி குழந்தையை உண்டு இல்லை என்று செய்துவிடுவது.

 

இதைபோல பெற்றோர்கள் இருப்பது இரண்டு வகைகளில் குழந்தையை பாதிக்கும். முதலாவது தான் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கிறோம்; எல்லோருக்கும் தன்னைப் பிடிக்கும்; தன் பெற்றோரை போலவே இந்த உலகம் முழுவதும் தன்னை நடத்தும் என்று நினைத்துக் கொள்வது. இரண்டாவதாக தானாகவே எதையும் செய்யக் கற்றுக் கொள்ளுவதில்லை. புதிதாக எதையும் செய்ய முயலுவதும் இல்லை.

 

இப்படி வளரும் குழந்தை மற்றவர்களுடன் பழகுவதில் சற்று பின்தங்கியே இருக்கிறது. எப்போதும் எல்லாவிடங்களிலும் தன்னை வழி நடத்த பெற்றோர்களை எதிர்பார்க்கிறது குழந்தை. எது தப்பு, எது சரி என்று குழந்தையால் சொந்தமாக முடிவு செய்ய முடிவதில்லை. என்ன செய்யலாம்?

 

சில விஷயங்களில் குழந்தைக்கு சுதந்திரம் கொடுங்கள். ஓடட்டும்; ஓடி விழுந்தால் தானாகவே எழுந்து வரட்டும். நீங்கள் பதறாதீர்கள் அளவுக்கு அதிகமாக. கீழே விழுந்து அழும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்துங்கள்; இதெல்லாம் சகஜம் என்று புரிய வையுங்கள். ‘ஓடாதேன்னு சொன்னா கேட்க மாட்டாய்; இப்போ பாரு விழுந்துட்டு அழற’ என்று சொல்லாதீர்கள். கோபப்படாதீர்கள். திட்டாதீர்கள்.

 

சில குழந்தைகள் வீட்டிற்குப் புதியவர்கள் வரும்போது அம்மாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும். அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக் கொள்ளும். இதெல்லாம் சாதாரண விஷயங்களே. இவற்றைப் பெரிது படுத்தி வருபவர்களிடமெல்லாம் சொல்லாதீர்கள்.

 

எங்கள் உறவினரின் பேரன் எங்கள் வீட்டிற்குள் வரவே மாட்டான். அவன் அம்மாவும் உள்ளே வரக் கூடாது. தப்பித் தவறி வந்துவிட்டால் அழுது அழுது, வாந்தி எடுத்து….பெரிய ரகளை நடக்கும். நானே அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டேன் உள்ளே வராதே என்று. இதெல்லாம் ஒரு வருடத்திற்கு முன். இப்போது அந்தக் குழந்தை தயக்கமில்லாமல் எங்கள் வீட்டிற்குள் வருகிறான். எல்லா அறைகளையும் போய்ப் பார்க்கிறான். மிகவும் சகஜமாக எல்லோருடனும் பழகுகிறான். இதனை வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

சில வீடுகளில் பெற்றோர்களே வெளியிடங்களில் அதிகம் பழக மாட்டார்கள். அப்படியிருக்கும் பெற்றோரின் குழந்தையும் அதிகம் பழகாது. சில வீடுகளில் குழந்தையின் மூலம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

 

எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு குழந்தை. என்னைப் பார்த்தவுடன் என்னிடம் நிறைய விஷயங்களைப் பேசிற்று. எனக்கே ரொம்பவும் ஆச்சரியம் ஏனெனில் அந்தக் குழந்தையை நான் பார்ப்பது அதுதான் முதல் தடவை. நவராத்திரிக்கு குழந்தையுடன் வருமாறு அந்தப் பெண்ணை அழைத்துவிட்டு வந்தேன். குழந்தையுடன் அந்தப் பெண் வந்தாள். அன்று அத்தனை பேசிய குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்து வாயைத் திறக்கவே மறுத்தது. எல்லோருமே புதியவர்களாக இருக்கும் சூழ்நிலையில் குழந்தையின் இந்த நடத்தை சாதாரணமானதுதான்.

அந்தப் பெண்ணிற்கோ குழந்தையை எப்படியாவது பேச வைத்துவிட வேண்டும் என்று. ‘நீ பேசலைன்னா உன்ன எல்லோரும் ‘அசடு’ என்பார்கள். உனக்கு ஒண்ணும் தெரியாது என்பார்கள்’ என்று ஏதேதோ சொல்லி, அதை பேச வைக்க முயன்று கொண்டிருந்தாள். பாவம், அந்தக் குழந்தை.

‘அடுத்த தடவை வரும்போது நீ நிறைய பேசுவியாம், சரியா?’ என்று சொல்லி அந்தக் குழந்தைக்கு கையில் சாக்கலேட் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

 

எந்தக் காரணம் கொண்டும் குழந்தையை கட்டாயப்படுத்த வேண்டாம், ப்ளீஸ்!

 

குதிரை ஏற்றத்தைப் பற்றி சொல்லும்போது எனக்கு இரண்டு ஜோக்குகள் நினைவிற்கு வரும். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

எங்கள் நண்பர் ஒருவர் மும்பை போயிருந்தபோது கடற்கரையில் குதிரை மேல் உட்கார்ந்திருக்கிறார். சும்மா ஜாலி ரைட் தான். இவருக்கு ஹிந்தி வராது. குதிரை நகர ஆரம்பித்தவடன், குதிரை வாலாவிடம் ‘ஸ்லோ, ஸ்லோ’ என்றிருக்கிறார். அவன் இவர் சொன்னதை ‘சலோ சலோ’ என்று புரிந்து கொண்டு குதிரைக்கு உத்தரவு கொடுக்க, குதிரை பறக்க ஆரம்பித்திருக்கிறது. இவர் அலறிய அலறலில் குதிரையே மிரண்டு போய் நின்று விட்டதாம்!

 

இரண்டாவது ஜோக்:

மன்னர்: இளவரசர் எங்கே?

மந்திரி: குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டிருக்கிறார், மன்னா! இறக்கம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அதனால் குதிரை மேலேயே இருக்கிறார்!

பாவம் என்றைக்கு இறக்கம் கற்றுக் கொண்டு என்றைக்கு அந்த இளவரசன் குதிரையிலிருந்து இறங்குவாரோ!

எல்லோரும் வாய்விட்டு சிரித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்படியே எந்நாளும் எல்லோரும் மனம் நிறைந்து சிரித்தபடியே இருக்க இந்த தீபாவளித் திருநாளில் எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book