எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவர் திரு சேதன் பகத். ‘நண்பன்’ படத்தின் அசல் கதையான ‘3 idiots’ கதையின் ஆசிரியர். இவரது கதைகளில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லோராலும் பாராட்டப்படுபவை.

இந்திய பெண்மணிகளைப் பற்றி இவர் சொல்வதைக் கேளுங்கள்:

‘உலகிலேயே – நான் ஒரு தலையாகப் பேசுகிறேன் என்று வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் – மிகவும் அழகியர்கள் என்றால் நம் இந்தியப் பெண்மணிகள் தான்! தாயாக, சகோதரியாக, மகளாக, அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பெண்ணாக, மனைவியாக, பெண் தோழியாக – பெண்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா உங்களால்?

ஆனால் நான் இப்போது சொல்லப்போவது நிச்சயம் நல்ல செய்தியல்ல. சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகத்திலேயே மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாவது நம் இந்தியப் பெண்கள் தான் : 87% இந்தியப் பெண்கள் எப்போதுமே ஏதோ ஒருவகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்! இதுவே என் கலக்கத்திற்குக் காரணம். வொர்கஹாலிக் என்று கருதப்படும் அமெரிக்கப் பெண்களில் கூட 53% பெண்கள் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம்.

இந்தியப் பெண்களுக்கு 5 யோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

முதல் யோசனை: உங்களுக்கு சக்தி, அதிகாரம் இல்லையென்று ஒருபோதும் எண்ணவேண்டாம். உங்கள் மாமியார் உங்களை அதிகாரம் செலுத்துகிறாரா? உங்கள் அதிகாரத்தை அவர் மேல் செலுத்துங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். அவரது எதிர்பார்ப்பிற்குத்தக்க நீங்கள் மாறத் தேவையில்லை. அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா? அது அவர் பிரச்னை! நீங்கள் அதைக் குறித்துக் கவலைப் பட வேண்டாம்.

இரண்டாவது: அலவலகத்தில் கடுமையாக, திறமையாக உழைத்தும் உங்களின் மதிப்பு உங்கள் மேலதிகாரிக்குத் தெரியவில்லையெனில் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்; இல்லையென்றால் வேலையை விட்டுவிடுங்கள்! திறமையான, கடும் உழைப்பாளிகளுக்கு பெரும் வரவேற்பு வெளி உலகில் நிச்சயம் உண்டு.

மூன்றாவது: உங்கள் கல்வியறிவை பெருக்கிக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளி உலக தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகளைக் கண்டறியுங்கள். பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக இருங்கள். அடுத்தமுறை உங்கள் கணவர் நீங்கள் ஒரு நல்ல மனைவியாக, அம்மாவாக, மருமகளாக இல்லை என்று சொல்லும்போது, ‘போதும்! இடத்தைக் காலி செய்யுங்கள்’ என்று சொல்லுங்கள்.

நான்காவது: இரட்டை சவாரி செய்கிறோம் என்று மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். குடும்பம், வேலை என்ற இரட்டை சவாரி கடினம் தான் ஆனால் செய்ய முடியாதது அல்ல. முக்கியமாக ஒன்றை நினைவில் வையுங்கள்.

வாழ்வின் எல்லா அம்சங்களிலும் A+ வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். வாழ்க்கை என்பது பரீட்சை அல்ல; எல்லா துறைகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க. பொறியியல் கல்லூரியில் மட்டுமே முடிந்த ஒன்று இது. மதிய சாப்பாட்டிற்கு நான்குவிதமான பொரியல் தினமும் செய்ய முடியவில்லை என்றால் பரவாயில்லை. வயிறு நிரம்புவதற்கு ஒரு பொரியல் போதுமானது.

நள்ளிரவு வரை அலுவல வேலை செய்யமுடியவில்லை என்றால் பரவாயில்லை; அப்படிச் செய்தால்தான் பதவி உயர்வு கிடைக்கும் என்றால் அது தேவையில்லை.

தனது பதவியின் பெயர் யாருக்கும் இறக்கும் தருவாயில் நினைவுக்கு வருவதில்லை!

ஐந்தாவது மிக மிக முக்கியமானது: இன்னொரு பெண்ணுடன் போட்டி போடாதீர்கள். உங்களின் சிறு வயதில் உங்கள் வகுப்புத் தோழி மிகச் சிறப்பாக ஒரு பள்ளிக்கூட ப்ராஜெக்ட் செய்து அசத்தியிருக்கலாம்; உங்கள் தோழி சரியான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, உங்களைவிட அதிக எடை குறைந்திருக்கலாம். பக்கத்து வீட்டுப் பெண்மணி ஆறு டப்பாக்கள் உள்ள டிபன் பாக்ஸில் கணவனுக்கு மதிய உணவு தினமும் கொடுத்தனுப்பலாம். இதெல்லாம் உங்களால் முடியவில்லை என்றால் குடி முழ்கிப் போய்விடாது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.

எந்த வேலையானாலும் உங்களால் முடிந்த அளவிற்கு நன்றாகச் செய்யுங்கள். எல்லாவற்றிற்கும் சான்றிதழ் எதிர்பார்க்க வேண்டாம். முக்கியமாக எங்கும் எதிலும் முதல் ராங்க் வர வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். இலட்சிய பெண்மணி என்று யாரும் கிடையாது. நீங்கள் அப்படி ஆக வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு மிஞ்சுவது மன அழுத்தம் தான்!

உடலைத் தளர விட்டு மனதை லேசாக்கி வாழ்க்கையை அனுபவியுங்கள்.

உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள் – நான் அழகானவள்; எனக்கு அமைதியான, மிகச் சிறந்த வாழ்க்கை வாழ எல்லா தகுதிகளும் இருக்கிறது.’ யாராவது உங்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையை பறிக்க விரும்பினால் அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு; உங்கள் தவறு இல்லை. நீங்கள் இந்தப் பூமியில் பிறந்திருப்பது எல்லோரையும் சந்தோஷப்படுத்த அல்ல.

உங்களிடமிருப்பதைக் கொடுத்து அதற்கு பதில் ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதுதான் உங்கள் பிறப்பின் குறிக்கோள்.

அடுத்தமுறை இதுபோல ஒரு ஆய்வறிக்கை வரும்போது இந்தியப் பெண்கள் முதலிடத்தை பிடிக்கக் கூடாது. இந்த உலகத்திலேயே மிக மிக சந்தோஷமான பெண்களாக இவர்கள் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்.

பெண்மையைக் கொண்டாடுவோம்!

இந்த கட்டுரையில் இன்னும் திரு பகத் சொல்லியிருக்கும் இரண்டு விஷயங்கள் எனக்கு உடன்பாடில்லை. மாமியார்களே வேலைக்குப் போகும் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் மருமகள் வேலைக்குப் போவதை எதிர்ப்பது இல்லை. அதிகாரம் செய்வதுமில்லை.

இன்னொன்று கணவன்மார்களும் மனைவியின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

போனவாரம் இந்தப் பகுதியில் கருத்துரையில் நம் வாசகி திருமதி சித்ரா ‘குழந்தையைப் பார்த்துக் கொள்ள எத்தனையோ பேர்களிருந்தும் என் குற்ற உணர்ச்சி குறையவில்லை என்று எழுதி இருந்தார்.

ஒரு விஷயத்தைத் தீர்மானித்த பிறகு தைரியமாகச் செய்யுங்கள். குற்ற உணர்ச்சி எதற்கு? தவறா சரியா என்ற இடைநிலையில் தான் குற்ற உணர்ச்சி ஏற்படும்.

இதுதான் நம் உடல், மன நிலையை ரொம்பவும் பாதிக்கிறது.

பெண்கள் குழந்தை பிறந்த பிறகும் வேலையை தொடர நினைப்பதால் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொண்டு விடுகிறார்கள். நல்லதுதானே, இந்திய ஜனத்தொகை குறையுமே என்றால், அதுதான் இல்லை. இதனால் சமுதாயத்தில் சமநிலை பாதிக்கப் படுகிறது. படித்த, வசதியானவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. இது ஆரோக்கியமானது அல்ல.

குழந்தைகளுக்கும் அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என்ற உறவுகளும் இல்லாமல் போகிறது. விட்டுக் கொடுக்கும், இன்னொருவருடன் பங்கு போட்டுக் கொள்ளும் திறனும் வருவதில்லை.

சரி இந்த விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். இப்போது நான் படித்த கவிதை

எங்கிருக்கிறாய் அம்மா?

எனக்கு உடல் நலம் சரியில்லாதபோது நீ உன் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருக்கிறாய்.

நான் களைத்து இருக்கும்போது நீ உடல் ஆற்றல் கொடுக்கும் பானத்தின் விற்பனையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாய்

நான் பசித்திருக்கும்போது நீ ஐந்து நட்சத்திர உணவகத்தில் யாருடைய தேவையையோ பூர்த்தி செய்து கொண்டிருக்கிறாய்.

கடற்கரையில் மணல் கட்ட நான் ஆசைப்படும் போது நீ அடுக்குமாடியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய்.

நான் மனம் சோர்ந்து, தளர்ந்து இருக்கும்போது நீ மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி என்று உன் வாடிக்கையாளருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

நான் சகவயதினருடன் பிரச்னையில் தவிக்க, எனது கணணி என் மூளையை மழுங்க அடித்துக் கொண்டிருக்க நீ யாருடைய பிரச்சனையையோ சமாளித்துக் கொண்டிருக்கிறாய்.

நான் மன வருத்தப் பட்டு உன் அணைப்புக்கு ஏங்கும்போது நீ முக்கிய சந்திப்பில் இருக்கிறாய்.

நான் குழப்பத்தில் இருக்க, நீ ஒரு கூட்டத்திற்கு விழிப்புணர்வு தந்து கொண்டிருக்கிறாய்.

நான் தனிமையில் உன் துணைக்கு ஏங்க, நீ உன் குழுப் பணிக்கு பாராட்டுப் பத்திரம் பெற்றுக் கொண்டிருக்கிறாய்.

என்னால் செய்ய இயலுமா என்று நான் சந்தேகப்பட்டு, அதைரியப்பட்டுக் கொண்டிருக்கும்போது நீ உன் பதவியில் மேலே மேலே ஏறிக் கொண்டிருக்கிறாய்.

எங்கிருக்கிறாய் அம்மா?

அடுத்த வாரம்: மீண்டும் குழந்தை வளர்ப்பு

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book