நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார்.

ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த தேநீரை, ஏற்கனவே நிறைந்திருந்த கோப்பையில் ஊற்றினார். கோப்பையிலிருந்து தேநீர் வெளியே வழிய ஆரம்பித்தது. வந்தவர் பதறிப்போய் ‘நிறுத்துங்கள், நிறைந்த கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!’ என்றார்.

துறவி சிரித்துக் கொண்டே, ‘காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியும். இல்லையா? நீங்கள் உங்கள் தலையில் இருப்பதை வெளியில் கொட்டி விட்டு வாருங்கள். அப்போதுதான் நான் பேசுவது உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.

இந்தக் கதை சொல்வது என்ன?

எந்த ஒரு புதிய விஷயம் ஆனாலும் மனதை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். திறந்திருக்கும் மனதில் தான் புதிய எண்ணங்கள் நுழைய முடியும், இல்லையா?

கருவுற்றிருக்கும் இளம்பெண்களும் முதலில் மனதளவில் தயார் ஆக வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை தி.மு., தி.பி. என்று பிரிக்கலாம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று.

திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை கு.பி.மு. (குழந்தை பிறப்பதற்கு முன்), கு. பி. பி. (குழந்தை பிறந்த பின்) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

 

தி.மு – இருந்த வாழ்க்கையே தி.பி. தொடராது. இதை எல்லா பெண்களுமே அனுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோலத்தான் கு.பி.மு இருக்கும் நிலை வேறு, கு.பி.பி. இருக்கப் போகும் நிலை வேறு.

உங்கள் குழந்தையை பாலூட்டி, சீராட்டி வளர்ப்பது மட்டுமல்ல அவளுக்கு ஒரு நல்ல ரோல் மாடல் அம்மாவாகவும் இருக்கப் போகிறீர்கள். உங்களது குழந்தைத்தனம் மாறி ஒரு தாயாராக உருவாக வேண்டும். மிகப் பெரிய மாற்றம் இல்லையா?

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறீர்கள். நாளை முதல் தினம். ஒரு வாரத்திற்கு முன்பே ஷாப்பிங் செய்து புது டிரெஸ், புது கைப்பை, புது ஸ்லிப்பர்ஸ் என்று எல்லாமே புதிது – வாங்கியாயிற்று. வெளி விஷயங்கள் எல்லாம் ரெடி. மனம்?

பள்ளிக்கூடம் போலல்ல கல்லூரி. பள்ளியில் ஆசிரியர்கள் ஸ்பூனால் படிப்பை ஊட்டி விடுவார்கள். கல்லூரியில் நீங்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். பாடங்களும் அதிகம். உங்கள் உழைப்பும் அதிகம் தேவைப்படும்.

அதே போலத்தான் குழந்தை பிறப்பதும். எல்லாமே புதிராக இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல; குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. இத்தனை நாட்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்துவிட்டு திடீரென வெளிச்சமான ஒரு உலகம்; நாமே சாப்பிடவேண்டும்; நாமே வெளியேற்ற வேண்டும். பசித்தால் அழ வேண்டும். அம்மாவின் தயவில் சுகமாக நடந்து வந்தது எல்லாம் இப்போது குழந்தை தன் முயற்சியில் தானே செய்து கொள்ளவேண்டும்.

அம்மாவின் அரவணைப்பு அதிகம் தேவைப்படும் குழந்தைக்கு. அம்மாவின் வயிற்றில் கதகதப்பாக இருந்த குழந்தை அதை வெளியிலும் தேடும்.

பிறந்த குழந்தைக்கு கழுத்து உறுதியாக இருக்காது. அதனால் மிகவும் பத்திரமாக அதை கையில் எடுக்கவேண்டும்.

குழந்தை படுக்கையில் படுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.

முதலில் இடது கையை நன்றாக விரித்து, விரல்களை அகலமாக்கிக் கொள்ளுங்கள். கையை குழந்தையின் தலைக்கும் கழுத்துக்கும் அடியில் கொடுங்கள்.

வலது கையை குழந்தையின் பிருஷ்ட பாகத்தில் வைத்து குழந்தையை மெதுவாக உங்கள் பக்கம் கொஞ்சமாக ஒருக்களித்துக் (நிதானம்…. நிதானம்…..) கொள்ளுங்கள்

குழந்தையின் தலை, கழுத்து, கொஞ்சம் முதுகுப் பகுதி எல்லாம் உங்கள் விரிந்த இடது கையில் இருக்கட்டும். கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் தூக்கவும். உங்கள் பிடி கெட்டியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் குழந்தைக்கு எந்தவிதமான அழுத்தமும் தெரியக் கூடாது.

நிதானமாக குழந்தையை உங்கள் மார்பின் மேல் சாய்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது குழந்தையின் தலை உங்கள் முழங்கை பகுதிக்கு வரும்படி மெதுவாக உங்கள் இடது கையை குழந்தையின் தலையிலிருந்து பிருஷ்ட பாகத்திற்கு கொண்டு வாருங்கள். வலது கையை எடுத்து விடலாம்.

பிறந்த குழந்தை உங்கள் ஒரு கை அளவுதான் இருக்கும்.

சுமார் மூன்று மாதங்கள் வரை குழந்தையை இந்த முறைப்படியே தூக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு 6 மாதங்கள் கூட தலை சற்று தள்ளாடியபடியே இருக்கும். அதனால் அதிக கவனம் தேவை.

குழந்தையின் தலை உங்கள் கைகளிலோ அல்லது முழங்கையிலோ (நீங்கள் கையை மடக்கும் போது மேல் கைக்கும், முழங்கைக்கும் நடுவில் வரும் ‘எல்’ போன்ற அமைப்பிலோ) பதிந்து இருக்க வேண்டும்.

இத்தனை எழுதுவதால் எப்படி இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் சில நாட்கள் பழகியவுடன் சரியாகிவிடும்.

குழந்தையுடன் நிறைய பேசுங்கள். அதை பார்த்து சிரியுங்கள். குழந்தையின் பார்வை முதல் சில மாதங்களில் நிலைபெற்றிருக்காது. சில சமயம் நடிகை ரம்பாவின் பார்வை பார்க்கும்! அதையும் ரசியுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book