சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) ஏன் என்று கேட்பவர்களுக்கு:

ஒரு மிகப் பெரிய வேலையை உங்கள் உடம்பு செய்திருக்கிறது. பிள்ளைப்பேறு என்றால் சும்மாவா? எத்தனை உறுப்புகள் எத்தனை வேலை செய்திருக்கின்றன! எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவை. அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ஓய்வு, நல்ல சாப்பாடு, தூக்கம் இவை மூன்றினால் மட்டுமே உங்கள் உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.

பொதுவாக உடல் அசதியாக இருக்கும்; நோய் எதிர்ப்பு திறனும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதனாலேயே சுகாதாரம் மிக மிக அவசியம்.

பிரசவித்த பெண்ணின் சுகாதாரக் குறைவினால் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியக் குறைவினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது முடியாது போகும். அதனால் கவனம் அதிகம் தேவை.

இயற்கை முறையில் பிரசவம் ஆகியிருந்தால் இரண்டாம் நாளிலிருந்து குளிக்கலாம். மிதமான வெந்நீரில் குளிப்பது உடல்வலியையும் ஆயாசத்தையும் போக்கும். தலைக்கு குளிக்க வேண்டாம். ஜலதோஷம், ஜுரம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குளித்து முடித்து நன்றாக ஈரம் போகத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

தலையை நன்கு வாரிப் பின்னலிட்டுக் கொள்ள வேண்டும். கை கால்களில் நகங்களை வெட்டி விடவும். உங்கள் நகங்களை மட்டுமல்ல; குழந்தையின் கை, கால்களில் இருக்கும் நகங்களையும் வெட்டி விட வேண்டும். அதற்கென்றே நகம் வெட்டிகள் சின்னதாகக் கிடைக்கின்றன. குழந்தையை நீராட்டியவுடன் நகங்கள் மிருதுவாக இருக்கும். அப்போது சுலபமாக வெட்ட வரும். சிலர் கையாலேயே குழந்தையின் நகத்தை பிய்த்துவிடுவோம் என்பார்கள். இது ரொம்பவும் ஆபத்தானது. குழந்தையின் நகத்துடன் சதையும் பிய்ந்துவரும் ஆபத்து இருக்கிறது. குழந்தையினிடத்தில் நம் வீரதீரத்தையெல்லாம் காண்பிக்க வேண்டாம்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: திருமணத்திற்கு முன் நான் ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொண்டு நகம் வளர்ப்பேன். அப்போதெல்லாம் நெயில் பாலிஷ் வாங்கித் தரமாட்டார்கள். அதனால் எங்கிருந்தாவது மருதாணி கொண்டு வந்து நானே அரைத்து இட்டுக் கொள்ளுவேன். எனது விரல் நகங்கள் எப்போதுமே சிவப்பாக இருக்கும்! இடது கைக்கு நானே வைத்துக் கொள்ளுவேன். வலது கைக்கு வைக்கச் சொல்லி அம்மாவை ரொம்பவும் படுத்துவேன். ஒரு முறை அம்மா மிகவும் கோபித்துக் கொண்டு முடியாது என்று சொல்லிவிட்டாள். என்ன செய்வது? ஒரு பேப்பரில் முதலில் குப்பி குப்பியாகப் பண்ணி வைத்துக் கொண்டு அதை விரல்களில் மாட்டிக்கொண்டு இந்தக் கையாலும் அந்தக் கையாலும் சரி செய்து சரி செய்து…எப்படியோ இரண்டு கைகளுக்கும் நானே இட்டுக் கொண்டு விட்டேன். இன்றைக்கும் என் அம்மா இதைச் சொல்லி சொல்லி ஆச்சரியப் படுவாள்.

அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்த்த நகங்களை குழந்தைக்காக வெட்டு என்று எங்கள் மருத்துவர் சொன்ன போது யோசிக்கவே இல்லை; வெட்டிவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை மறுபடி நான் நகம் வளர்க்க ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் மருதாணி ஆசை….தொடருகிறது!

 

சரி, நம் விஷயத்திற்கு வருவோம்.

லூசான உள்ளாடைகள்/வெளியாடைகள் அணியவும். வெயில் காலங்களில் நல்ல பருத்தி ஆடைகள் அவசியம் தேவை. குளிர் காலங்களில் இரண்டு மூன்று ஸ்வெட்டர்கள் வைத்துக் கொண்டு துவைத்துப் பயன்படுத்தவும். ஒரே ஸ்வெட்டர் தினமும் அணியவேண்டாம்.

பிரசவித்த சில நாட்களுக்கு அதிகப்படி சிறுநீர் வெளியேறுவது போல இருக்கும். கருவுற்றிருக்கும் போது உடலில் சேர்ந்திருந்த அதிகப்படியான நீரும் உப்பும் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம்.

சிலருக்கு பிரசவத்தின் போது தையல் போட்டிருந்தால் பிரசவம் ஆன சில நாட்களுக்கு சிறுநீர் மலம் கழிப்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். சுத்தமான நீர் நிறைய குடிப்பது சுலபமாக உடலிலிருந்து நீர் வெளியேற மிகவும் உதவியாக இருக்கும்.

பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய் ஏற்படுவது அதிகம். காரணம் ஆசனவாயும், சிறுநீர் வெளிவரும் துவாரமும் அருகருகே அமைந்திருப்பது தான். சிறுநீர் பாதை தொற்று வராமலிருக்க நிறைய நீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை வந்தாலும் சுகாதாரம் கெடும். நோய்த்தொற்று உண்டாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய், மற்றும் வஜைனா (vagina) என்று சொல்லப்படும் கருப்பையிலிருந்து பிறப்புறுப்புக்குச் செல்லும் பாதையிலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சிலசமயங்களில் குழந்தை பிறக்கும்போது பிறப்புறுப்பின் வாயை அகலமாக்க சற்று கத்தரிப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் அந்த இடத்தை தையல் போட்டு மூடிவிடுவார்கள். இந்த மாதிரி தையல் போட்டிருந்தால் குளிக்கும்போது அந்த இடத்தை நன்றாக நீர் ஊற்றி கழுவி சுத்தமான துணியால் / பேப்பர் நாப்கின்னால் நன்றாகத் துடைக்கவும். மேல்பூச்சாக ஏதாவது ஆயின்மென்ட் கொடுத்திருந்தால் தவறாமல் தடவவும். இது ரணம் சீக்கிரம் ஆற உதவும். தையல்கள் தானாகவே கரைந்து விடும்.

உள்ளுறுப்புகள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உள்ளாடைகள் இறுக்கமில்லாமல் காற்றாட இருக்க வேண்டும். பருத்தியாலான ஆடைகள் அணிவது உத்தமம்.

பிரசவம் ஆன பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை உதிரப் போக்கு இருக்கும். முதலில் சிவப்புக் நிறத்தில் இருக்கும் இந்த திரவம் போகப்போக பழுப்பு நிறமாகி, பின் வெளிர் மஞ்சள் நிறமாகி பின் வெள்ளை நிறமாகி தானாகவே நின்றுவிடும். அப்படியில்லாமல் வலியுடன், கட்டி கட்டியான உதிரப்போக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

இதற்காக பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்பவோ அடிக்கடி மாற்றவும். ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தவுடனும் உள்ளுறுப்புகளை நீரினால் நன்கு கழுவி மெல்ல ஒத்தி ஒத்தித் துடைக்கவும். டாம்பூன்ஸ் பயன்படுத்த வேண்டாம். உள்ளுறுப்புகளிலிருந்து துர்வாசனை வந்தால் மருத்துவரை அணுகவும்.

உள்ளுறுப்புகளை கழுவும்போது முன்னாலிருந்து நீர் விட்டுக் கழுவ வேண்டும். அதனால் மலத்துவாரத்திலிருந்து வரும் தொற்றுகள் சிறுநீர் பாதையை சென்று சேராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்தபின் அடிவயிற்றில் பிசைவதுபோல் ஒரு வலி இருக்கும். இதைப் பற்றி கவலை வேண்டாம். கர்ப்பபை சுருங்குவதால் உண்டாகும் வலி இது. முதல் குழந்தைக்கு அவ்வளவாக இந்த வலி தெரியாது. இரண்டாவது பிரசவம் ஆன பின்பு இது அதிகம் தெரியும். இதனை ‘மண்குத்து வலி’ என்பார்கள்.

உங்கள் உடைகளைப் போலவே குழந்தையின் உடைகளும் தினமும் துவைத்து உலர்த்தி பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோலத்தான் நீங்கள் படுக்கும் கட்டில், படுக்கை, தலையணை எல்லாமே சுகாதாரத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை, உறைகள், போர்வைகள் அடிக்கடி மாற்றப் படவேண்டும்.

குழந்தையை தொட்டிலில் விடுவதாயிருந்தால் அதில் போடும் துணிகள் மீது கவனம் தேவை. குழந்தையின் வாசனைக்கே எறும்புகள் வரும். குழந்தை பிறப்பதற்கு முன்பே வீட்டை துப்புரவு செய்வது அவசியம்.

குழந்தையின் சுகாதாரத்திற்கு என்றே ஒரு அத்தியாயம் எழுதவேண்டும். அடுத்த வாரம்……

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book