இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.

புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight!

எழுதியவர் ருஜுதா திவாகர் (Rujuta Diwekar)

கரீனா கபூரின் zero size – க்கு இவரே காரணம் என்று பாலிவுட் முழுக்க சொல்லுகிறது. ஆனால் இவர் சொல்லுவது: ‘ஜீரோ சைஸ் என்பதெல்லாம் சும்மா; இரண்டே வகையான உடம்புதான் – ஆரோக்கியமான உடல்; ஆரோக்கியமில்லாத உடல்’.

புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? நம்மில் எத்தனை பேர் எப்படி நம் எடையை குறைப்பது என்று, சொல்லுவார் பேச்சையெல்லாம் கேட்டு, ஏதேதோ செய்து, மன நிம்மதியை இழக்கிறோம்; ஆனால் எடையை இழக்க முடிவதில்லை.

மன நிம்மதியை இழக்காமல் உடல் எடையை மட்டும் குறைக்கலாம் என்கிறார் ருஜுதா.

பல புத்தகங்களைப் படித்து குழம்பிபோயிருந்த எனக்கு இவரது புத்தகம் நாம் உட்கொள்ளும் ஆகாரத்தைப் பற்றிய ஒரு வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எந்த உணவும் எடையைக் கூட்டாது; நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். முழு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் எடை ஏறும். அதனால் மாம்பழம் எடையை அதிகரிக்கும் என்பது சரியல்ல; சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மாம்பழத்தை தனியான ஒரு உணவாக சாப்பிடுங்கள் எடை ஏறாது என்கிறார் இவர்.

இவரது இரண்டாவது புத்தகம் : Women and the Weightloss Tamasha

நாம் ஏன் இளைக்க வேண்டும்?

திருமணத்திற்கு ‘பார்த்து’க் கொண்டிருக்கிறார்கள்;

அடுத்த மாதம் முதல் திருமண நாள் – அதற்குள் இளைக்க வேண்டும்;

இன்னும் இரண்டு மாதத்தில் தங்கை/தம்பி க்குக் கல்யாணம் அதற்குள் கொஞ்சம் இளைத்தால் நன்றாக இருக்கும்;

இதையெல்லாம் தான் ருஜுதா தமாஷ் என்கிறார்.

நான் ஆரோக்கியமாக இருக்க நான் இளைக்க வேண்டும் என்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். மற்ற காரணங்கள் நிலையானவை அல்ல; மேற்சொன்ன காரணங்கள் நிறைவேறியவுடன் மறுபடி எடை கூடலாமா?

இவர் தனது இரண்டாவது புத்தகத்தில் பெண்களின் வளர்ச்சியை – பதின்வயது, திருமணத்திற்கு தயாராகுதல், திருமணம், திருமணத்திற்குப் பின், பிரசவத்திற்கு தயாராவது, பிரசவம், பிரசவத்திற்குப் பின், மெனோபாஸ் என்று ஒவ்வொரு நிலையாக சொல்லிக் கொண்டு போகிறார். ஒவ்வொரு நிலையிலும் ஆகார நியமங்கள், உடற்பயிற்சி (Use it or Lose it!) – எந்த உடல் உறுப்பை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அதை நீங்கள் இழக்கிறீர்கள் – என்று மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

இவைதவிர, நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத PCOD, PCOS, HYPOTHYROID, DIABETES இவை பற்றியும் பேசுகிறார்.

கருத்தரிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே உடலளவிலும், மனதளவிலும் தயாராக வேண்டும் என்கிறார் இவர். இதைப் படித்தவுடன் எனக்கு யூதர்களைப் பற்றி நான் எழுதிய ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை நினைவுக்கு வந்தது.

Jews என்றழைக்கப்படும் யூதர்கள் எப்படி இத்தனை சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்று இஸ்ரேல் நாட்டில் டாக்டராக இருந்த திரு ஸ்டீபன் கர் லியான் என்பவர் தனது 8 வருட ஆய்வுக்குப் பின் எழுதிய கட்டுரை இது.

அதில் அவர், கருவுற்றிருக்கும் யூதப் பெண் தன் குழந்தை சிறந்து விளங்க – உணவு, இசை, கடினமான கணக்குப் புதிர்களை விடுவிப்பது என்று – எப்படியெல்லாம் தன்னை தயார் செய்து கொள்கிறாள் என்று வியந்து எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

ஏன் யூதர்கள் அதி சாமார்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?

சரி, இப்போது நம் விஷயத்திற்கு வருவோம்.

பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு நல்ல போஷாக்கான உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். முதலிலிருந்தே தன் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துவரும் பெண்களுக்கு பால் சுரப்பதற்கு தடை ஏதும் இருக்காது. இருந்தாலும் நம் நாட்டில் சில உணவுகளை சிறப்பு உணவுகளாக தாய்பால் ஊட்டும் பெண்களுக்கு சிபாரிசு செய்கிறோம்.

சில வீடுகளில் பூண்டு நிறைய சேர்த்து சமையல் செய்து கொடுப்பார்கள். பூண்டை பாலில் நன்கு வேகவைத்துக் கொடுக்கலாம். உங்களுக்கு எப்படி சாப்பிட்டால் பிடிக்குமோ அப்படி சாப்பிடுங்கள். சில வீடுகளில் அதிக நீர் கொடுக்க மாட்டார்கள் பால் நீர் ஆகிவிடும் என்று! இதுவும் தமாஷ் தான்!

நான் முன் பகுதி ஒன்றில் சொன்னதுபோல இப்போது பத்திய உணவு வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் செரிமானத்திற்குக் கடினமான உணவுகளை – முக்கியமாக கிழங்கு வகைகளை சிறிது காலத்திற்கு உட்கொள்ள வேண்டாம். எண்ணையில் பொறித்த உணவுகள், நிறைய காரம், மசாலா சேர்த்த பொருட்களும் ஒதுக்கப் படவேண்டியவை.

இரவில் நேரம் கழித்து சாப்பிட வேண்டாம். அதிக வேலை இல்லாததால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். அதிக சூடு, அதிக குளிர்ச்சியான உணவுகள் வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்கள் வேண்டாம். தாய்க்கு செரிமானக் கோளாறு அல்லது ஜலதோஷம் பிடித்தால் குழந்தைக்குப் பால் கொடுப்பது தடைப்படும்.

சிலர் வெந்தயக் கஞ்சி செய்து கொடுப்பார்கள். இதுவும் உடல் சூட்டை தணித்து பால் சுரக்கவும் உதவும் உணவு.

வெந்தயக் கஞ்சி – (ஒருவேளைக்கு)

தேவையான சாமான்கள்:

புழுங்கல் அரிசி / புழுங்கலரிசி ரவை – ½ கப்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

வேக வைக்க நீர் – 2 கப்

மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – ருசிகேற்ப

புளிக்காத மோர் – 1 கப்

 

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்துக் கொண்டு அதில் அரிசி/ரவையைப் போட்டு கூடவே வெந்தயத்தையும் போட்டு குழைய வேக வைக்கவும். ஆறியவுடன் உப்பு போட்டு, மோர் விட்டு சாப்பிடலாம். முற்பகல் போதில் இந்தக் கஞ்சியை – மதிய உணவுக்கு முன் – கொடுக்கலாம். நன்கு பசி தாங்கும்.

வேண்டுமானால் புழுங்கலரிசியை வெந்தயத்துடன் சேர்த்து ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் சிறிது சீரகமும் போடலாம்.

ஜலதோஷம் பிடித்திருக்கிறது, மோர் சேர்க்க முடியவில்லை என்றால் இந்தக் கஞ்சியில் சிறிது நெய் விட்டு தெளிவான ரசம் சேர்த்து சுடச்சுட சாப்பிடலாம். மிளகு சீரகம் ஜலதோஷத்துக்கும் நல்லது.

ஏற்கனவே ரவைக் கஞ்சி சொல்லியிருந்தேன். இன்னொரு கஞ்சி பயத்தங்கஞ்சி.

இதை பயத்தம்பருப்பிலோ அல்லது முழு பயறிலோ செய்யலாம். முழு பயறு அல்லது பயத்தம் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும். சிலர் இந்தப் பருப்பு வாயு என்பார்கள். அதற்காக சிறிது சுக்கு தட்டிப் போடலாம். இதனுடன் வெல்லம், பால் சேர்த்து சாப்பிடலாம். சூடாகவும் நன்றாக இருக்கும். ஆறினாலும் இந்தக் கஞ்சியுடன் பாலை மட்டும் காய்ச்சி சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

இந்தக் கஞ்சிகளை வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மாற்றி மாற்றி கொடுக்கலாம்.

எங்கள் ஊரில் – கர்நாடகாவில் சப்சிகே (sapsige) சொப்பு (கீரை) என்று கிடைக்கும். அதை பிள்ளை பெற்றவளின் உணவில் தினமும் சேர்த்தால் பால் நன்கு சுரக்கும் என்பார்கள். இது மிகவும் உண்மை. என் பெண்ணிற்கு கொடுத்திருக்கிறேன். நம் உடம்பின் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும். பற்களுக்கும் நல்லது.

இதை வேக வைத்தோ பச்சையாகவோ பயன்படுத்தலாம்.

எங்கள் ஊரில் செய்யும் அரிசி ரொட்டி (அக்கி ரொட்டி), ராகி ரொட்டியில் இதனை கட்டாயம் சேர்ப்பார்கள்.

நாம் பருப்புபொடி, தேங்காய்ப்பொடி செய்வதுபோல இந்தக் கீரையைப் போட்டு சட்னி பொடி செய்வார்கள்.

தேவையான பொருட்கள்

சப்சிகே கீரை – 2 கட்டு

கடலைப்பருப்பு – ½ கப்

உளுத்தம்பருப்பு ¼ கப்

காய்ந்த மிளகாய் – 6 – 7

புளி – கோலிகுண்டு அளவில்

துருவிய கொப்பரை – ½ கப்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு ருசிகேற்ப

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு ½ டீஸ்பூன்

பெருங்காயம் ¼ டீஸ்பூன்

 

செய்முறை:

கீரையை வேர்கள், முற்றிய தண்டுகளை நீக்கி நன்கு அலம்பி வடிய வைக்கவும். பொடிப்பொடியாக நறுக்கி ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியின் மேல் ஈரம் போக நிழல் உலர்த்தவும்.

பெருங்காயம், உ.பருப்பு, க. பருப்பு, மிளகாய் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளியைச் சேர்த்து சற்று வறுக்கவும். கொப்பரையை வறுக்க வேண்டாம்.

வறுத்தபொருட்களை (கொப்பரையைத் தவிர) உப்பு, உலர்ந்த கீரை சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். நைசாகவும் அரைக்கலாம். அரைத்த பொருட்களுடன் கொப்பரையை சேர்த்து நன்றாக ஆற விடவும். இவற்றுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே சுற்று சுற்றுங்கள். அதிகம் அரைக்க வேண்டாம்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, மஞ்சள் பொடி போட்டு, கடுகு வெடித்தவுடன் பொடித்து வைத்திருக்கும் கலவையின் மேல் போட்டு நன்றாக கலக்கவும். பத்திரமாக ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும். சுடச்சுட சாதத்தில் கொஞ்சம் நெய் விட்டு இந்தப் பொடியைப் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book