நான் சொல்லும் இந்த விஷயம் நடந்தது 1979 ஆம் வருடம். எனது உறவினர் ஒருவரை பிரசவத்திற்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள். பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்த அழுத்தம் எகிறிப் போயிருந்தது. அவரது இரத்தவகை நெகடிவ் ஆகவும் கணவரது இரத்தவகை பாசிடிவ் ஆகவும் இருந்தது. அதனால் வேறு பிறக்கும் குழந்தையை வெகு பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று அவரை மருத்துவமனையில் பேறுகாலத்திற்கு முன்பே சேர்த்திருந்தார்கள். மருத்துவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்தார் அந்தப் பெண்மணி.

 

இரண்டு மாதங்கள் கழிந்தன. எப்படியும் சிசேரியன் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். அதனால் மருத்துவர் எங்களிடம் நாளை சிசேரியன் செய்துவிடலாம் என்றவர், ‘நாளைக்கு நாள் நன்றாகத்தானே இருக்கிறது?’ என்று போகிற போக்கில் ஒரு கேள்வியையும் வீசிவிட்டுச் சென்றார். அவ்வளவு தான், எங்கள் இன்னொரு உறவினர், உடனே பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு நாள் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நாளைக்கு காலை 3.33 லிருந்து 3.45 க்குள் நல்ல நேரம், நட்சத்திரமும் நன்றாகயிருக்கிறது, அப்போது சிசேரியன் செய்யுங்கள் என்று மருத்துவர் திரும்ப வந்தபோது சொல்ல, அந்த மருத்துவருக்கு வந்ததே கோபம். ‘போனால் போகிறது என்று ஏதோ சொன்னால், நேரமெல்லாம் குறித்துத்தராதீர்கள். நீங்கள் சொல்லும் நேரம் வரும்வரை நான் கத்தியை வைத்துக் கொண்டு நிற்கவா?’ என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.

 

இப்போதும் காலம் ரொம்ப மாறவில்லை என்பதை சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நிரூபித்தது. பொதிகை தொலைகாட்சியில் ஆரோக்கிய பாரதம் என்று ஒரு நிகழ்ச்சி வருகிறது. இதைப்பற்றி நான் நிறைய தடவை என் கட்டுரைகளில் குறிப்பிடுகிறேன். வாரத்திற்கு 5 நாட்கள் மாலை 7.30 மணியிலிருந்து 8 மணிவரை இந்த நிகழ்ச்சி. இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைப்பில் பல மருத்துவர்கள் பேசுகிறார்கள். சில சமயங்களில் தொலைபேசி மூலம் நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.

 

சென்ற வாரம் திங்கட்கிழமை ஒரு பெண் மருத்துவர் பெண்களின் உடல் நலம் பற்றிப் பேசினார். அவர் சொன்ன சில விஷயங்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். பெண் குழந்தைகள் பிறந்ததிலிருந்து அவர்களை ஆரோக்கியமான வாழ்விற்குத் தயார் செய்ய வேண்டும்; நல்ல போஷாக்கான உணவுகள், சந்தோஷமான மனநிலை இரண்டும் ஒரு பெண்ணை ஆரோக்கியமான தாயாக மாற்றுகிறது; திருமணம் ஆன பின் பார்த்துக்கொள்ளலாம்; கருவுற்றதும் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தவுடன் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். போலிக் ஆசிட் பெண்களுக்கு மிகவும் அவசியம். இது கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது. அடுத்தபடியாக இரும்புச் சத்து. எள், மற்றும் வெல்லம் இவற்றில் இரும்புச்சத்து இருக்கிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டு போனவர் தனது வருத்தம் ஒன்றையும் தெரிவித்தார். அதாவது பிரசவம் பார்க்கும் மருத்துவர்களைப் பற்றி நிலவும் தவறான குற்றச்சாட்டு: வேண்டுமென்றே சிசேரியன் செய்கிறார்கள். அவர் சொன்ன ஒரு நிஜ சம்பவம்: ஒருமுறை ஒரு பெண்ணின் பிரசவ சமயத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். பெண்ணின் அதிர்ஷ்டம் திடீரென பிரசவ வலி அதிகரிக்க சில நிமிடங்களில் நார்மல் பிரசவம் ஆகியது. இது மருத்துவர்களே எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெண்ணின் உறவினர்கள் தங்களுக்குள் பேசிகொண்டார்களாம்: ‘சும்மாவே சிசேரியன் என்று நம்மை ‘சீட்’ பண்ண பார்த்தாங்க டாக்டரம்மா, ஆனா பாரு, நார்மல் டெலிவரியே ஆயிடுச்சு!’ என்று.

‘நல்ல மருத்துவரை நீங்கள் எத்தனை நாள், எத்தனை மருத்துவமனைகளுக்கு வேண்டுமானாலும் சென்று தேடித் தேடி கண்டுபிடியுங்கள். ஒரு தடவை இந்த மருத்துவர் தான் என்று தீர்மானித்தபின் அவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள். எங்களை ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லாதீர்கள். எங்களுக்கும் நார்மல் பிரசவம் என்பது மிகப்பெரிய ஆறுதல். அறுவை சிகிச்சை என்றால் அதிக கவனிப்பு வேண்டும். அனாவசியமாக எந்த மருத்துவரும் அறுவை சிகிச்சை சிபாரிசு செய்யமாட்டார்’ என்றார்.

அவர் கூறிய இன்னொரு விஷயம். கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. ‘கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு பல சிக்கல்கள் இருந்து சிசேரியன் செய்யலாம் – சில சமயங்களில் இது எமர்ஜென்சி ஆகவும் இருக்கும் – என்று முடிவு செய்து நாங்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருப்போம். பெண்ணின் உறவுக்காரர்கள் வந்து இன்னிக்கு நட்சத்திரம் நல்லாயில்ல; அல்லது இன்னிக்கு அமாவாசை, நாளைக்கு அறுவை சிகிச்சை பண்ணி குழந்தையை வெளியே எடுங்க என்று கேட்பார்கள். இப்போது ராகுகாலம், எமகண்டம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு தாய் குழந்தை இருவரையும் காப்பாற்றுவது ஒன்றே குறி. அந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம் சிந்தித்து நடந்துகொள்ளுங்கள்’ என்று அந்தப் பெண் மருத்துவர் சொன்னபோது, நமக்குத் தெரியாத இன்னொரு பக்கமும் தெரிய வந்தது.

அந்த மருத்துவர் கேட்டுக் கொண்டதுபோல மருத்துவரை நம்புவோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book