பொதுவாக குழந்தைக்கு முதலில் வருவது இரண்டு கீழ் நடு பற்கள். இவை ‘வெட்டுப் பற்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் கீழுமாக மொத்தம் 8 கூர்மையான பற்கள் இருக்கும். சில குழந்தைகளுக்கு முதலில் மேல் பற்கள் முதலில் வரும். சில குழந்தைகளுக்கு மேலே நான்கு பற்களும், கீழே இரண்டு பற்களும் வரும். எப்படி இருந்தாலும் இதுவரை இருந்த ‘பொக்கை வாய்’ சிரிப்பு மறைந்து குட்டி குட்டி பற்களுடன் கூடிய சிரிப்பு நம்மை மயக்கும். பொக்கை வாயாக இருக்கும்போதும் அழகு. இப்போது இரண்டே இரண்டு பற்களைக் காட்டிச் சிரிக்கும்போதும் அழகு. அதுதான் குழந்தை!

ஒரு வயது குழந்தைக்கு கீழே இரண்டு பற்களும், மேலே நான்கு பற்களும் இருக்கும். இதற்குப் பிறகு பல மாதங்களுக்கு பற்கள் வராது. கீழே மேலும் இரண்டு பற்கள் தோன்றும். இதற்கு அடுத்தபடியாக நான்கு கடைவாய்ப் பற்கள் வரும். அவை இந்த வெட்டுப் பற்களின் அருகில் வராது. ஈறுகளின் கடைசியில் தோன்றும். நடுவில் வரப்போகும் கோரைப் பற்களுக்கான இடைவெளி இது.

மொத்தப் பற்களும் வர இரண்டு வயதாகலாம். மூன்று வயதில் இன்னும் இரண்டு கடைவாய் பற்கள் வரும். கடைவாய் பற்கள் வரும் சமயத்தில் சில குழந்தைகளுக்கு உடம்பு படுத்தும். இரவில் எழுந்து அழும். பசி இல்லாமல் போகலாம். மறுபடி தூங்குவதற்கு நேரம் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பது, அல்லது அதற்கு விளையாட்டு காட்டுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இல்லையேல் இது ஒரு புதிய பழக்கமாக உருவாகக் கூடும்.

இந்த சமயத்தில் – அதாவது பற்கள் வரும் சமயத்தில் குழந்தை கையில் கிடைத்தவற்றை என்று வாயில் வைத்துக் கொண்டு கடிக்கும். எதையாவது கடி என்று ஊறும் பற்கள் குழந்தையை இம்சிக்கும். குழந்தை என்ன செய்யும், பாவம் கிடைத்ததை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுகிறது. அம்மாவிற்கோ குழந்தைக்கு உடம்பிற்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பரிதவிப்பு. என்ன செய்யலாம்? இப்போதெல்லாம் teether அல்லது teething ring என்றே கடைகளில் விற்கிறார்கள். வண்ண வண்ண மயமான இவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கலாம்.

ஆனாலும் அதெல்லாம் கொஞ்ச நேரம்தான். அம்மாவின் தோள்பட்டை தான் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ‘நறுக்’ ‘நறுக்’ கென்று கடிக்கும். சில குழந்தைகள் கை விரலைக் கொடுத்தால் நேராக வாயில் வைத்து கடிக்கும். அந்தக் காலங்களில் பட்சணங்கள் செய்யும் போது ‘சூப்பி’ என்று நீளமாக செய்து போடுவார்கள். பல் வரும் குழந்தைகளுக்கு இதை கையில் கொடுத்தால் அதை நன்றாக வாயில் வைத்து சூப்பும். சிறிது நேரத்தில் அது ஊறி ஊறி மெத்தென்று ஆகி, குழந்தையின் வாயிலேயே கரைந்தும் விடும்.

பிளாஸ்டிக் பொருட்களை குழந்தையில் கையில் கிடைக்காமல் மேலே வைத்து விடுங்கள். அதிக வண்ணம் கொண்ட ரப்பர் பொம்மைகள், fur பொம்மைகள் ஆகியவற்றை தூர வைத்து விடுங்கள்.

சில குழந்தைகள் கையில் கிடைத்த துணியை வாயில் வைத்து மென்று கொண்டே இருக்கும். குழந்தைக்கென்று ஒரு துணியைக் கொடுத்து விடுங்கள். இரண்டு துணிகளை தயார் செய்து கொள்ளுங்கள். ஒன்றை துவைக்கப் போடும்போது இன்னொன்றை குழந்தைக்குக் கொடுக்கலாம். அதேபோல teether களையும் அவ்வப்போது சோப் போட்டு நன்றாக கழுவி விடுங்கள்.

குழந்தைக்கு அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே பற்கள் பிற்காலத்தில் எப்படி வளரும் என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. குழந்தையின் ஈறுகளுக்குள் பற்கள் புதைந்து இருக்கின்றன. அம்மாவின் சாப்பாட்டைப் பொறுத்து குழந்தையின் பற்கள் உருவாகின்றன. வலுவான பற்கள் குழந்தைக்கு உருவாக கால்சியம், பாஸ்பரஸ் (பால், சீஸ்), வைட்டமின் D (சொட்டு மருந்து அல்லது சூரிய ஒளி) வைட்டமின் C (சொட்டு மருந்து, ஆரஞ்சு பழங்கள், பச்சைத் தக்காளி, முட்டைக் கோஸ்) வைட்டமின் A மற்றும் B தேவை.

குழந்தைகளின் பால்பற்களைப் போலவே நிரந்தர பற்களும் குழந்தையின் ஈறுகளுக்குள் இருக்கின்றன. சுமார் 6 வயதில் பால்பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரப் பற்கள் தோன்றுகின்றன.

பற்கள் வலுவாக அமைய மற்றொரு முக்கியமாக பொருள் ப்ளோரைட். பல் சொத்தையையும் தடுக்கும் இந்த ப்ளோரைடு. சில இடங்களில் இயற்கையாகவே தண்ணீரில் ப்ளோரைடு இருக்கிறது. அந்த இடங்களில் வளரும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை பல் துலக்க பிரஷ் வேண்டாம். கையாலேயே நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். ஒவ்வொரு முறை பால் சாப்பிட்ட பின்பும், திட உணவு சாப்பிட்டப் பின்னும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை முதலிலிருந்தே கொண்டு வாருங்கள். வாய் கொப்பளிக்கும்போது கொஞ்சம் நீரை குழந்தை குடிக்கக் கூடும். அதனால் நீங்கள் குடிப்பதற்கென்று வைத்திருக்கும் நீரில் குழந்தையை வாய் கொப்பளிக்கச் செய்யுங்கள்.

தாய்ப்பால் குடிக்கும் வரை குழந்தையின் வாயிலிருந்து எந்தவிதமான வாசனையும் வராது. பார்க்கப் போனால் ஒரு நல்ல வாசனை வரும். என்றைக்கு வெளி பால் அல்லது திட உணவு கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ, அன்றே குழந்தையின் வாயில் வாசனை வரத் தொடங்கும். பல் வளர வளர குழந்தை எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பிக்கும்போது இந்த வாசனை துர்வாசனையாக மாறும். அதனால் குழந்தைக்கு குளிக்கும்போது உங்கள் கையாலேயே பற்களை நன்றாக சுத்தம் செய்து, வாய் கொப்பளிக்க சொல்லிக் கொடுங்கள். இதனால் பின்னாளில் பல் சொத்தையை தடுக்கலாம்.

இரண்டு வயதுக் குழந்தை அம்மா அப்பா செய்வதை அப்படியே செய்யும். நீங்கள் பல் துலக்கும்போது குழந்தையும் பல் துலக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும். இந்த சமயத்தில் அதற்கு பல் துலக்க பிரஷ் வாங்கிக் கொடுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book