காது கேளாமை பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துரைகளில் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கேட்கும் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் என்பதுதான் அது. நம் நாட்டிலும் இவையெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை நம் எல்லோருடைய வேண்டுகோளாகவும் மருத்துவத்துறையின் முன் வைப்போம்.

 

இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த மாதிரி பரிசோதனைகளை சரியான முறையில் வரவேற்பதில்லை. ‘எங்க வீட்டுல யாருக்கும் எந்தக் குறையும் இல்லை; அதனால இந்தப் பரிசோதனை எங்கள் குழந்தைக்கு வேண்டாம்’ என்று சொல்லுபவர்கள் நம்மில் அதிகம்.

 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ‘குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகவேகூடாது. ஏதாவது பேர் (வியாதியின் பேர்) சொல்லிடுவாங்க’ என்பார். ரொம்பவும் வியப்பாக இருக்கும். அவரது இரண்டாவது பெண் ‘போர்டில் டீச்சர் எழுதுவது தெரியவில்லை’ என்று சொன்னபோது ‘நல்லா உத்து பாரு, தெரியும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தை பாவம், ஒரு நாள் ஆசிரியரிடமே தன் குறையை சொல்லி அழுதிருக்கிறாள். அந்த ஆசிரியை சொன்னபிறகு கண் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துப் போயிருக்கிறார். கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் கொடுத்திருக்கிறார் மருத்துவர். அப்போது இந்த பெண்மணி என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுக்குத்தான் டாக்டர் கிட்ட போகவேகூடாது. இப்ப பாருங்க கண்ணாடி போட்டுக்கிட்டு, யார் இவளை கல்யாணம் செய்துப்பாங்க?’ நான் அசந்து போய் நின்றுவிட்டேன். இப்படியும் சிலர்!

 

நம்நாட்டில் குறைகளை வெளிப்படையாக பேசுவதை யாரும் விரும்புவதில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மனப்பான்மை நம்மிடையே அதிகம். முடிந்தவரை நம் குழந்தைகளின் குறைகளை மறைக்கப்பார்ப்போம். இது மிகப்பெரிய தவறு.

 

இந்த மாதிரி பெற்றோர்கள் ஒரு ரகம் என்றால் இன்னொரு வகை பெற்றோர்களையும் நாம் பார்க்கலாம். மருத்துவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கும் ரகம். ‘டாக்டர், இப்படி செய்யலாமா, டாக்டர்?’, ‘ஏன் டாக்டர், இப்படி செய்தால் என்ன டாக்டர்?’ என்று வாக்கியத்தின் முதலில் ஒரு டாக்டர், கடைசியில் ஒரு டாக்டர் போட்டு அவரது வாழ்க்கையை உண்டு இல்லை என்று பண்ணுவதில் இவர்களை வெல்ல யாரும் கிடையாது. கேள்வி கேட்பதுடன் நிற்காமல் இந்த மருந்து கொடுக்கலாமா, அந்த மருந்து கொடுக்கலாமா என்று இவர்களே யோசனையும் கூற ஆரம்பிப்பார்கள்.

சிலர் குழந்தையை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தொட்டு தொட்டுப் பார்ப்பார்கள். துளி சூடு இருந்தாலும் மருத்துவரிடம் ஓடுவார்கள்; இல்லை தொலைபேசியில் அவரைப் பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு… சின்னக் குழந்தைக்கு ஒன்று என்றால் பதட்டம் வருவது மிகவும் சகஜம். பதட்டப்படுவதால் ஏதாவது நடக்குமா? நீங்கள் பதட்டப்படுவதால் குழந்தைகளும் என்னமோ ஏதோ என்று நினைத்து பயப்படுவார்கள்.

 

பதட்டம் பற்றி பேசுகையில் சென்னையில் நாங்கள் இருக்கும்போது எனது பக்கத்துவீட்டுத் தோழி சித்ரா தாசஸரதி நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒருமுறை சித்ராவின் கணவர் வெளியூர் போயிருந்தார். சித்ரா என் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார். கூடவே அவரது நான்கு வயது பிள்ளை. என் பெண்ணும் அந்தப் பையனும் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று அந்தப் பையனின் மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. நான் ரொம்பவும் பதறிவிட்டேன். அவர் துளிக்கூட பதறவில்லை. ‘ரஞ்சனி ஒரு தலையணை கொடுங்கள்’ என்றார். அந்தப் பிள்ளையை தலையணை மேல் உடலும், தலை தரையின் மேலும் படும்படியும் படுக்க வைத்தார். ஒரு வெள்ளைத்துணி கேட்டார். நான் ஒரு கைக்குட்டை கொடுத்தேன். அதை நீரில் நனைத்து பிழிந்து மூக்கின் மேல் வைத்தார். என்னைப் பார்த்து, ‘ஒண்ணுமில்லை; இன்னும் சில நிமிடங்களில் சரியாகிவிடும்’ என்றார். நான் அப்படியே வியப்பில் மூழ்கிவிட்டேன். ‘எப்படி நீங்க பதறாமல் இருக்கீங்க?’ என்றேன் வியப்பு அடங்காமலேயே. ‘இது அவனுக்கு வெயில் காலமான வரும். பழகிவிட்டதால் பதறுவதில்லை’, என்றார். ‘எனக்கு குழந்தைக்கு ஏதாவது என்றால் கைகாலெல்லாம் ‘வெலவெலத்து’ போயிடுமே’ என்றேன். ‘அப்புறம் குழந்தையை எப்படி கவனிப்பீங்க?’ என்றார்.

 

அன்றிலிருந்து முடிந்தவரை குழந்தைக்கு ஏதாவது என்றால் பதறாமல் இருக்க முயற்சி செய்ய ஆரம்பித்தேன். மனதிற்குள் பயம் வந்தாலும் வெளியில் காட்டாமல் குழந்தையுடன் பேசிக்கொண்டே இருப்பேன். மருந்துகளைத் தவறாமல் கொடுப்பேன். குழந்தையின் மேல் ஒரு கண் இருந்தாலும், எனக்குப் பிடித்த வேலையை செய்ய ஆரம்பிப்பேன். எனது பயத்தை வெளியில் காட்டாமல் கூடியவரை தைரியமாக இருப்பேன். எல்லாமே அனுபவம் தான்!

 

டிசம்பர் 11 பாரதியின் பிறந்த நாள்

ஒரு சின்ன வேண்டுகோள்: நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், குழந்தைக்கு பேச்சு வந்தவுடன் பாரதியார் பாடல்களை சொல்லிக்கொடுங்கள். ஆங்கில பாடல்கள் பள்ளியில் கற்றுக்கொள்ளட்டும். நீங்கள் வீட்டில் குழந்தைக்கு முதலில் பாரதியை அறிமுகப்படுத்துங்கள்.

 

எனக்குப் பிடித்த ஒரு பாரதியின் பாடலுடன் இந்த வாரம் விடை பெறுகிறேன்:

 

ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம் பராசக்தி

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

 

கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்

குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி)

 

பாம்புத்தலை மேலே நடமிடும் பாதத்தினை பணிவோம்

மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம் (ஓம்சக்தி)

 

சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்களெல்லாம்

வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்ரு துதிப்போம் (ஓம்சக்தி)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book