சமீபத்தில் நாளிதழ்களில் ஒரு செய்தி: ஐஸ்வர்யா ராய் பச்சன் 10 கிலோ எடை குறைந்தார். இதில் என்ன பெரிய விஷயம் என்றால், வெளிநாட்டு நடிகைகள் போல குழந்தை பிறந்த இரண்டே வாரங்களுக்குள் தங்கள் எடை, இடை எல்லாவற்றையும் குறைக்காமல், ஐஸ்வர்யா நிதானமாக குறைத்துள்ளார் என்பதுதான். கருத்தரித்தல், பிரசவித்தல் இவற்றைத்தொடர்ந்து வரும் முதல் இரண்டு வருடங்கள் (முதல் 1,௦௦௦ நாட்கள்) தாய்க்கும் சேய்க்கும் மிகவும் முக்கியமான நாட்கள்.

இதை இங்கு அழுத்திச் சொல்லக் காரணம் குழந்தை பிறந்தவுடன் பிரசவித்த பெண்ணின் உடல் எடை கூடுதலாக இருக்கும். உடனே பழையபடி ஆகிவிட முடியாது; கூடவும் கூடாது. பல பத்திரிக்கைகள் ஐஸ்வர்யாவைப் பாராட்டி இருந்தன அவர் நிதானமாக தன் உடலை இளைக்க வைத்ததற்காக.

இளைக்க வேண்டுமென்பதற்காக பிரசவித்த உடனே உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று ஆரம்பிக்கக் கூடாது. இயற்கை பிரசவம் என்றாலும் கூட 6 வாரங்கள் கழித்துத்தான் உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு இளம் தாயின் உடல் சற்று பூசினாற்போலத்தான் இருக்கும். இங்கு இரண்டு விஷயங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் அதிகப்படியான திசுக்கள் மற்றும் அதிகப்படியான திரவங்கள் இந்த அதிகப்படியான எடைக்குக் முதல் காரணம். இரண்டாவது குழந்தைக்காக இரவு கண்விழித்தல், பாலூட்டுவது போன்ற அதிகப் படியான வேலைப் பளுவை சமாளிக்க உடல் எனர்ஜியை சேமிப்பாக வைத்துக் கொள்ளுவதாலும் உடல் எடை கூடும்.

இளம்தாயின் வயிற்றைச் சுற்றி போட்டிருக்கும் அந்த சதைப் பற்று அவளை பலவிதமான நோய்களிலிருந்தும், உணவுப் பற்றாக்குறையிலிருந்தும் காப்பாற்றும். இது ரொம்பவும் இயற்கையானதும் ஒரு வகையில் நன்மையையும் கூட. இதனால் நீங்கள் திடமாக, உடல் வலு உள்ளவராக, நோய்நொடிகள் அண்டாமல் ஆரோக்கியமானவராக இருக்க முடிகிறது . இந்த கூடுதல் சதைப் பற்று உங்களுக்கு இயற்கை அளிக்கும் வரப் பிரசாதம். அதனால் உங்கள் உடலை ‘ச்சே! இப்படி இருக்கிறதே’ என்று வெறுக்காதீர்கள்.

பிரசவத்திற்குப் பின் உடல் பழைய நிலைக்குத் திரும்ப சற்றுத் தாமதம் ஆகலாம். ஏனெனில் கருத்தரித்தல், பிரசவம் இவைகளினால் எலும்புகளின் அடர்த்தி, தசைகளின் எடை குறைகிறது. உடலில் கால்சியம், இரும்பு சத்து மற்றும் கனிமப் பொருட்களும் குறைகின்றன. இவற்றை ஈடு கட்டும் வகையில் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி இருக்க வேண்டும்.

எப்போது உடல் இளைக்க ஆரம்பிக்கும்?

பிரசவம் முடிந்து முதல் மாதவிடாய் வரும்போது. அதுதான் நீங்கள் உடல்ரீதியாக இளைக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்பதற்கு அடையாளம். மேலும் பாலூட்டுவதை நிறுத்தியபின் – அதாவது உங்கள் உடல் இனிமேல் அதிகப்படியான திரவப் பொருட்களை, அதிகப்படியான சக்தியை சேமிக்க வேண்டாம் என்ற நிலையில் – உடல் இளைக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் க்ராஷ் டயட் வேண்டாம். நிதானமாக படிப்படியாக உடற்பயிற்சி, கூடவே உணவுக் கட்டுப்பாடு இவைகளின் மூலமே இளைக்க வேண்டும். அதுதான் நீடித்த, நல்ல, நிறைந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

வெறும் உடற்பயிற்சி அல்லது உணவுக் கட்டுப்பாடு என்பது கூடாது. இரண்டும் கை கோர்த்தால்தான் ஆரோக்கியமான முறையில் உடலை இளைக்க வைக்க முடியும்.

முதல் ஆறு வாரங்களில் போஷாக்கான உணவுகளை முறையாக அளவுடன் உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கத் தொடங்குங்கள்.

பிறகு மிதமான உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இயற்கையான பிரசவம் என்றால் ஆறு வாரங்களுக்குப் பின் உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம். சிசேரியன் என்றால் இன்னும் சில வாரங்கள் கழித்து உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து பின் செய்யத் தொடங்குவது நலம்.

எப்படியாயினும் முதலில் 10 அல்லது 15 நிமிட நடைப்பயிற்சியுடன் தொடங்குங்கள். முதலில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பிறகு இன்னும் இரண்டு நாட்கள் கூட்டலாம். ஒரு வாரத்திற்குப் பிறகு நேரத்தை அதிகப் படுத்துங்கள். ஐந்து நாட்களை ஏழு நாட்களாகக் கூட்டுங்கள்.

ஒரே சீரான முறையில் இளைப்பதுதான் உடலுக்கு நன்மை பயக்கும். Slow and Steady என்று சொல்வார்களே அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தனியாக நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அம்மா, அப்பா, கணவன் என்று துணையுடன் செய்யுங்கள். அதைவிட உங்கள் குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து அழைத்துச் செல்வதையே நடைப்பயிற்சியாக மாற்றிவிடுங்கள். குழந்தையுடனும் வெளியே போய் வந்தாற்போல இருக்கும். உங்களுக்கு உடற்பயிற்சியும் ஆயிற்று. டூ இன் ஒன்!

இன்னொரு முக்கியமான விஷயம்: குழந்தை வளர்ப்பு என்பது உங்கள் மனஅழுத்தத்தை உண்டு பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் முதல் குழந்தை என்றால் மனதில் எப்பவுமே ஒரு சின்ன பயம் இருந்து கொண்டே இருக்கும். குழைந்தை கொஞ்சம் அழத் தொடங்கினாலே கை, காலெல்லாம் வெலவெலத்துப் போகும். ஜுரம், சளி என்று வந்துவிட்டால் அவ்வளவு தான்! பால் குடித்தால் ‘பால் போதிய அளவு வந்ததோ என்று கவலை; குடிக்கவில்லை என்றால் கேட்கவே வேண்டாம்.

குழந்தையை பார்த்துக் கொள்வதை உங்கள் அம்மா, அப்பாவுடனோ, மாமியார் மாமனாருடனோ பகிர்ந்து கொள்ளுங்கள். இது இரண்டு விதத்தில் நல்லது. உங்களுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கும்; உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். இரண்டாவதாக குழந்தையும் தாத்தா பாட்டிகளுடன் பொழுதைக் கழிக்க கற்றுக் கொள்ளும்.

இரண்டு பக்கத் தாத்தா பாட்டிகள் ஒரு குழந்தைக்கு இருந்தால் அதைவிட பாக்கியசாலி யாரும் கிடையாது. அப்பா, அம்மாவின் கண்டிப்புக் கலந்த அன்பும், தாத்தா பாட்டிகளின் பாசமும் பரிவும் ஒருசேரக் கிடைக்கப்பெற்ற குழந்தை பிற்காலத்தில் மிகச்சிறந்த மனிதனாக உருவாகும்.

இளம்தாய்மார்களிடம் ஒரு வேண்டாத பழக்கம்: குழந்தை சாப்பிடாமல் மீந்து போகும் பால், திட உணவுகளை வாயில் போட்டுக் கொள்ளுவது. இதையும் சாப்பிட்டுவிட்டு, கணவன் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவருடன் சேர்ந்து சாப்பாடும் சாப்பிட்டால் என்ன ஆவது? இந்தப் பழக்கத்தை முதலிலிருந்தே விலக்கி விடுங்கள். குழந்தைக்கு அளவுக்கு அதிகமான உணவை தயார் செய்யாதீர்கள். பாலோ அல்லது திட உணவோ ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தயார் செய்யுங்கள். வேண்டுமானால் இன்னொரு முறை பால் கலந்து கொள்ளலாம். திட உணவும் அப்படியே.

சாப்பிடும் விஷயத்தில் குழந்தையைப் பின்பற்றுங்கள். குழந்தைகள் பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுவார்கள் – வயிறு நிறைந்து விட்டால் நிறுத்தி விடுவார்கள்.

உணவை மெதுவாக நிதானமாக மென்று சாப்பிடுங்கள். 20 நிமிடம் ஆகிவிட்டால் உங்கள் மூளை ‘போதும்’ என்ற அறிவிப்பை கொடுக்கும். அதற்கு மேல் சாப்பிட வேண்டாம்.

எந்த உணவுப் பொருளையும் ஒதுக்காதீர்கள்; அளவைக் குறையுங்கள். ஒரே வேளையில் அதிகம் சாப்பிடாமல் சீரான இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடப் பழகுங்கள். உங்களுக்குப் பிடித்த சாக்லேட் கூட சாப்பிடலாம் – அளவுடன்!

தியானம், பிராணாயாமம் இவற்றை முறைப்படி கற்று வீட்டிலேயே பழகுங்கள். இவற்றால் உடல், மன ஆரோக்கியம் இரண்டையும் பாதுகாக்கலாம்.

உணவுக் குறிப்புப் புத்தகம் ஒன்றை தினமும் எழுதுங்கள். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்படும். சாப்பிடும் பழக்கத்தில் இருக்கும் குறைபாடுகளை எளிதில் திருத்திக் கொள்ளலாம்.

கடைசியாக ஒன்று: கருத்தரிப்பின் போது ஏற்பட்ட அதிக எடையை எக்காரணம் கொண்டும் முழுக்க குறைத்துவிட முடியாது. 2 முதல் 5 கிலோ வரை அந்த எடை உங்களுடம்பில் இருக்கும். பிரசவத்திற்குப் பின்னான உங்கள் உடலமைப்பை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உடல் இளைக்காவிட்டாலும், குற்ற உணர்வில்லாமல் அதிகப்படியான எடையை சுமக்க முடியும்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book