ஆறு மாதம் வரை குழந்தைக்கு முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். வேலைக்கு போகும் தாய்மார்களால் இது சாத்தியப்படாது. அதனால் நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன் ஒரு பதினைந்து நாட்கள் முன்னதாகவே ஏதாவது ஒரு வேளை தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் புது உணவு குழந்தைக்கு சரிபட்டு வருகிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். அது பவுடர் பாலாகவோ அல்லது வெளியில் கிடைக்கும் திட உணவாகவோ (சீரியல்) இருக்கலாம். ஆரம்பத்தில் மிகவும் குறைவான அளவில் நிறைய நீர் சேர்த்துக் கொடுக்க ஆரம்பியுங்கள். குழந்தைக்கு அது ஒத்துக் கொள்ளுகிறதா என்று பார்த்துவிட்டு அளவைக் கூட்டலாம்.முதலில் திரவ ஆகாரமாகவே ஆரம்பித்து பிறகு பாதி-திரவம், பிறகு நீரைக் குறைத்து திட உணவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மெள்ள மெள்ளத்தான் இதைச் செய்ய வேண்டும்.

 

ஏன் மாற்று உணவு ஆரம்பிக்க வேண்டும்?

குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு சில மாதங்களுக்குப் பின் தாய்ப்பால் மட்டும் போதாது. குழந்தையின் வளர்ச்சிகேற்ற வகையில் அதிக கலோரி கொண்ட உணவுகளை கொடுக்க வேண்டும். மாற்று உணவு ஆரம்பிப்பது குழந்தையின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

அதுமட்டுமல்ல; குழந்தை சாப்பிடும் கலையை கற்கத் தொடங்குவதும் இப்போதுதான். உணவை தன் வாயில் வைத்து அசைபோடவும், மெல்லவும் கற்கிறது. கொஞ்சம் பெரிய குழந்தையானால் ஸ்பூனை கையில் பிடிக்கவும் அதனால் உணவை எடுக்கவும் கற்கிறது. கை, வாய் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிக்கின்றன.

மூன்று மாதத்திலிருந்து சிலர் திட உணவு கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் ஏன் 6 மாதம் என்கிறார்கள்? அப்போதுதான் குழந்தையின் ஜீரண உறுப்புகள் வளர்ந்து மற்று உணவை செரிக்க தகுந்தவையாக மாறுகின்றன. புது ருசிகளை அறியவும் குழந்தையிடம் இந்த மாதங்களில் ஒரு ஆர்வம் உண்டாகும். தாய்ப்பால் கூடவே இந்த மாற்று உணவுகளையும் ஆரம்பிக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

 

மாற்று உணவு கொடுக்கத் துவங்கும்போது கவனிக்க வேண்டியவை:

  • உணவுகள் புதிதாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • சுத்தமானதாக, மூடி வைக்கப்பட்டு, சரியான சூட்டில் கொடுக்கப் பட வேண்டும். ரொம்பவும் சூடாகவோ, ரொம்பவும் ஆறியோ இருக்கக் கூடாது.
  • சின்ன சின்ன அளவில் கொடுங்கள். குழந்தை வாயைத் திறந்தவுடன் உணவை அடைக்கும் தாய்மார்களும் இருக்கிறார்கள்.
  • குழந்தையை கட்டாயப்படுத்தி உண்ண வைக்காதீர்கள்.
  • சாப்பாட்டு நேரங்களை இனிமையாக மாற்றுங்கள்.
  • தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உணவை கொடுக்காதீர்கள்.
  • நீங்களும் குழந்தையும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் வேறு குறுக்கீடுகள் வேண்டாம்.
  • எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும்போது குழந்தைக்கும் உணவு கொடுங்கள்.
  • முதலிலிருந்தே உண்ணும் நேரம் குடும்ப நேரம் என்று பழக்கப்படுத்துங்கள்.
  • ஏதாவது ஒரு உணவு வகை குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்றால் கட்டாயப்படுத்திக் கொடுக்காதீர்கள்.

 

சிலர் குழந்தைக்கு காய்கறி வேகவைத்துக் கொடுக்கலாம்; பழத்தை மசித்துக் கொடுக்கலாம் என்று யோசனை கூறுவார்கள். எதுவானாலும் மெதுவாக சின்ன அளவில் கொடுக்க ஆரம்பியுங்கள். சாப்பாட்டு விஷயத்திலும் மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள். ‘அவங்க வீட்டுல குழந்தைக்கு இது கொடுக்கறாங்களாம்; அது கொடுக்கறாங்களாம்’ என்பதெல்லாம் வேண்டாத விஷயம். உங்கள் வீட்டில் பொதுவாக என்ன சாப்பிடுவீர்களோ அதே உணவை குழந்தைக்குக் கொடுங்கள்.

மாற்று உணவு என்பது முதலில் ஒரே ஒரு வேளை மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மற்ற வேளைகளில் பால் கொடுங்கள்.

நான் எனது பேரனுக்கு நான்கு மாதங்களுக்கு மேல் மருத்துவர் சொன்ன ஆலோசனையின் பேரில் மாற்று உணவு ஆரம்பித்தேன். என் மகளின் மாமியாரே ராகியில் செய்யப்பட ‘ஸரி’ என்ற ராகி பொடியை செய்து கொடுத்தார்.

 

ராகி ஸரி செய்முறை:

ராகியை நீரில் நனைத்து நன்கு களைந்து கல் இல்லாமல் அரித்துக் கொள்ள வேண்டும். நீரை நன்கு வடித்துவிட்டு துணியில் பரப்பவேண்டும். ஒரு இரவு அப்படியே வைத்தால் (இன்னொரு துணியால் அப்படியே மூடி வைத்துவிடலாம்) காலையில் சின்ன சின்ன முளைகள் வந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வாணலில் மெல்லிய சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். கைபொறுக்கும் சூடு வரும் வரை வறுத்தால் போதும். ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து கொண்டு அதை ஒரு மெல்லிய துணியில் சலிக்க வேண்டும் (வஸ்த்திர காயம்).

முதலில் கால் ஸ்பூன் இந்தப் பொடியை எடுத்து கால் டம்ப்ளர் நீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொண்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து கைவிடாமல் ஸ்பூனால் கிளறி விட்டுக் கொண்டிருந்தால் கொஞ்சம் கெட்டியாகும். இதனுடன் பால் சேர்த்து பாட்டிலிலேயே குழந்தைக்குப் புகட்டலாம். அல்லது பாலாடை, கிண்டி இவற்றில் கொடுக்கலாம். இதற்கு சர்க்கரை, உப்பு எதுவும் சேர்க்க வேண்டாம்.

குழந்தை கொஞ்சம் பெரிதானவுடன் 7, 8 மாதத்தில் நீரின் அளவைக் குறைத்து கொஞ்சம் கெட்டியான உணவாகவே கொடுங்கள். நீங்கள் சாப்பிடும்போது ஒரு தட்டில் சில சாதப் பருக்கைகளைப் போட்டால் குழந்தை எடுத்து சாப்பிடும். குழந்தைக்கு உட்கார வந்தபின் இதை செய்யலாம். இட்லி கொடுக்கலாம். சாதத்தை நன்கு கையால் மசித்து காரமில்லாத ரசம் விட்டு கொடுக்கலாம். சிலர் சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொடுப்பார்கள். இது தேவையில்லை.

குழந்தைக்குப் பல் வருவது கூட ஜீரண உறுப்புகள் தயாராகிவிட்டன என்பதன் அறிகுறிதான். மேலே இரண்டு பற்கள், கீழே இரண்டு பற்கள் என்று குழந்தை சிரிப்பது கண்கொள்ளாக் காட்சி! இப்போது இட்லியைக் கூட சின்ன சின்ன துண்டுகளாக்கி ஒரு தட்டில் போட்டுக் கொடுக்கலாம்.

ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்: குழந்தை என்ன சாப்பிட்டாலும், எப்போது சாப்பிட்டாலும் கூடவே நீங்கள் இருக்க வேண்டும். சில குழந்தைகள் வாயில் கொஞ்சம் உணவு இருக்கும்போதே மறுபடி உணவை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். எல்லாவற்றையும் சேர்த்து விழுங்க முடியாமல் திணறும். அதனால் உங்கள் கவனம் முழுதும் குழந்தை மேலேயே இருக்க வேண்டும்.

 

மாற்று உணவு கொடுக்கும்போது தவிர்க்க வேண்டியவை:

 

  • திட உணவில் உப்போ, சர்க்கரையோ சேர்க்காதீர்கள். அதேபோல ஆயத்த உணவுகள் (ரெடிமேட் உணவுகள்) வேண்டாம்.

 

  • ஒரு வயது வரை குழந்தைக்கு சர்க்கரை சேர்க்க வேண்டாம். அதிக சர்க்கரை பல்லிற்கு கெடுதல் விளைவிக்கும்.

 

  • ஒரு வயது வரை தேன் கொடுக்க வேண்டாம். சில குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாது.

 

  • சில உணவுகள் உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமையை தொடர்ச்சியாக உண்டு பண்ணிக் கொண்டு வந்திருந்தால் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள்.

 

  • தேனீர், காப்பி போன்றவற்றை கொடுக்காதீர்கள்.

 

  • பாட்டில்களில் வரும் குளிர் பானங்கள் குழந்தைகளுக்கானவை அல்ல.

 

  • சில உணவுகளில் அவற்றை பாதுகாக்க சில பதப்பொருட்கள் (preservative) சேர்க்கப்பட்டிருக்கும். அவை குழந்தைகளுக்கு நல்லதல்ல.

 

வேறு என்ன என்ன கொடுக்கலாம்? மேலே பேசலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book