‘ஒவ்வொரு குழந்தை உருவாகும்போதும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி திரும்பத் திரும்ப எழுதப் படுகிறது’ என்கிறார் டாக்டர் ஸ்பாக்.

தாயின் கருவில் ஒரே ஒரு செல் ஆக இருக்கும்போது முதன்முதலில் கடலில் தோன்றிய ஒரு செல் பிராணியைப் போல இருக்கிறது. சில வாரங்கள் கழித்து தாயின் கருவில் அம்னியோடிக் திரவத்தில் நீந்தும் போது மீன்களைப் போல செதிள்களுடன் இருக்கிறது. தவழும்போது நம் மூதாதையர்கள் நான்கு கால்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இந்தக் கால கட்டத்தில் தான் தனது விரல்களை நேர்த்தியாக பயன்படுத்தக் கற்கிறது குழந்தை. நான்கு கால்களால் நடந்த மனிதன் இரண்டு கால்களால் நடந்து இன்னும் இரண்டினால் வேறு வேறு வேலைகள் செய்ய முடியும் என்று அறிந்தவுடன், எழுந்து நிற்க தொடங்கினான். நான்கு கால்களில் இரண்டை கையாக பயன்படுத்த ஆரம்பித்தான். அதேபோலத் தான் குழந்தையும்; அம்மா மேல் தட்டில் வைத்திருக்கும் அழகான பூஜாடியை எடுக்க முயலும்போது எழுந்து நிற்கக் கற்கிறது.

 

தன்னை சுற்றியுள்ள உலகத்தில் தன்னை எப்படிப் பொருத்திக் கொள்வது? மெதுமெதுவே எல்லாவற்றையும் கற்கிறது குழந்தை.

 

ஒரு குழந்தையின் வளர்ச்சியை பக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

 

பிறந்தவுடன் அதற்கு இருக்கும் ஒரே திறன் ‘உறிஞ்சுவது’ மட்டுமே. பால் குடிப்பதும் ‘மூச்சா’ போவதுமாக இருக்கும் குழந்தை மெல்ல மெல்ல தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிய ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு முதலில் தலை நிற்க ஆரம்பிக்கிறது. குப்புறக் கவிழ்ந்து கொள்ளுகிறது, நீஞ்சுகிறது; முட்டிக்கால் போட்டு ‘ஆனே ஆனே’ என்று ஆடுகிறது. பக்கத்தில் நாற்காலி இருந்தால் அதை பிடித்துக் கொண்டு நிற்கப் பார்க்கிறது. நிற்க வந்தவுடன் சுதந்திரமாக அடியெடுத்து வைக்கிறது.

 

நிலவில் முதலில் அடியெடுத்துவைத்த திரு நீல் ஆம்ஸ்ட்ராங் (That’s one small step for man, one giant leap for mankind) ‘இந்த காலடி தடம் சிறியது ஆனாலும் மனித குலத்தின் வளர்ச்சிகான அசுர பாய்ச்சல்) என்று சொன்னாராம்.

 

குழந்தையின் வளர்ச்சியும் இப்படித்தான். ஒவ்வொரு முன்னேற்றமும் குழந்தை புதிதாக ஒரு திறமையைக் கற்றுக் கொண்டதை சொல்லுகிறது. பிற்காலத்தில் தான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனாக மாற எல்லா திறமைகளையும் அது குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.

 

குப்புறக் கவிழ்வது, நீஞ்சுவது, தவழுவது, நிற்பது, நடப்பது இவையெல்லாம் ‘இயக்குதசைத் திறன்கள்’ என்று சொல்லப்படுகிறது.

 

ஏற்கனவே சொன்னதுபோல ஒரு குழந்தையின் வளர்ச்சி போல இன்னொரு குழந்தையின் வளர்ச்சி இருக்காது. பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளை விடுங்கள். அக்காவின் வளர்ச்சி போல தம்பியின் வளர்ச்சி இருக்காது. பொதுவாக ‘மூத்தது மோழை; இளையது காளை’ என்பார்கள். மாற்றியும் இருக்கலாம்.

 

குழந்தையின் இயங்கு திறன் (குப்புறக் கவிழுதல், நீஞ்சுதல்) நிதானமாக இருப்பதால் அதன் அறிவுத் திறன் பற்றி சந்தேகம் வேண்டாம். இப்படி நிதானமாக இருக்கும் குழந்தைகளில் பத்துக்கு ஒன்பது குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போலவே புத்திசாலியாக இருக்கிறார்கள். புத்திசாலித்தனம் என்பது குழந்தைகளின் சூழ்நிலை, மற்றும் அம்மா அப்பாக்களின் (பாரம்பரியம்) புத்திசாலித்தனத்தைப் பொறுத்து இருக்கிறது.

 

குழந்தையின் வளர்ச்சி தலையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. பிறகு கைகள், கால்கள் என்று பல்வேறு உறுப்புகளை பயன்படுத்தத் தொடங்குகிறது. பிறந்த குழந்தைக்கு தெரிந்த ஒரே திறமை பால் குடிப்பது ஒன்றுதான். கையால் குழந்தையின் கன்னத்தை தொடுங்கள். தலையை திருப்பி வாயை திறக்கும். தலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கோவமாக தலையை விடுவித்துக் கொள்ளப் பார்க்கும்.

 

பிறந்த குழந்தைக்கு ஒளி, இருட்டு தெரியாது. மிகவும் வெளிச்சமாக இருந்தால் கண்ணை முடிக் கொள்ளும். முதலில் அருகில் இருக்கும் பொருட்களைப் பார்க்க முயலும். ஒன்றிரண்டு மாதங்களில் மனித முகங்களை தெரிந்து கொள்ளும். மூன்று மாதங்களில் சுற்றிலும் உள்ள பொருட்களைப் பார்க்கத் தொடங்கும்.

 

பிறந்த ஒன்றிரண்டு தினங்களுக்கு காதுகளில் திரவங்களின் ஓசை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் குழந்தைக்குக் காது கேட்காது. ஆனால் வெகு சீக்கிரமே ஓசைகளை அறிந்து கொள்ளும் சக்தி உண்டாகிறது. சின்ன ஓசை கேட்டால் கூட தூக்கிவாரிப் போடுகிறது.

 

மனிதனை சமூக விலங்கு என்று சமூகவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கூற்றுக்கேற்ப குழந்தை இரண்டு மாதங்கள் ஆனவுடன் உங்களைப் பார்த்து ஒரு நாள் சிரிக்கிறது. ஆஹா! என்ன ஆனந்தம்! இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் இந்த ஒரு சிரிப்பிற்காகவே என்று தோன்றுகிறது, இல்லையா?

 

இதுவரை ஒன்று தெரியாத இருந்த குழந்தை இந்த சிரிப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறது? மனிதன் தீவல்ல; கூட்டமாக வாழ பிறந்தவன்; தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் அன்பும், பாசமும் காட்டத் தெரிந்தவன்; தன் மேல் அன்பும் பாசமும் காட்டும் மனிதர்களைப் புரிந்து கொள்ள முயலுகிறது குழந்தை. இந்தப் புரிதல் தான் மனிதகுலம் ஆண்டாண்டு காலமாக இப்பூவுலகில் நிலைத்து நிற்கக் காரணம்.

 

பிறந்தவுடனே சில குழந்தைகள் கட்டை விரலை வாயில் வைத்துக் கொள்ளுவார்கள். ஆனால் பல குழந்தைகளுக்கு கையும் வாயும் எட்டவே எட்டாது. முக்கால்வாசி நேரம் கை மூடியே இருப்பதால் கட்டைவிரலை மட்டும் தனியே பிரிக்க முடியாமல் இருக்கும்.

 

கைகள் என்பது பொருட்களைப் பிடித்துக் கொள்ளவும், அவற்றை கையாளவும் தான் என்று மெதுமெதுவே உணருகிறது குழந்தை. அதற்கு முன் தன் கையைத் தானே இப்படி அப்படித் திருப்பித் திருப்பி அழகு பார்க்கும். தன்னுடைய ஒருகையை இன்னொரு கையால் பிடிக்கப் பார்க்கும். சில சமயம் தன் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு விடத் தெரியாமல் கத்து கத்தென்று கத்தும்!

 

முதல் மூன்று மாதங்களில் வெளி ஆட்களை அவ்வளவாக ‘கண்டு’ கொள்ளாத குழந்தை ஐந்து மாதத்திலிருந்து புதிதாக யாராவது வந்தால் சட்டென்று விளையாடுவதை நிறுத்திவிட்டு வந்தவர்களைக் கூர்மையாக கவனிக்கும். முகத்தை கோணிக்கொண்டு, உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ‘ஓ….!’ என்று அழத் தொடங்கும். இதுவும் கூட வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். ‘இப்போது எனக்கு யார் என்னை சேர்ந்தவர்கள், யார் புதியவர்கள் என்று அறியும் திறன் வந்துவிட்டதே’ என்று குழந்தை சொல்லாமல் சொல்லும் காலம் இது!

இன்னும் குழந்தையின் வளர்ச்சி அடுத்த வாரம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book