குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுவது, நீராட்டுவது, பாலூட்டுவது, தாலாட்டுப் பாடி தூங்கப் பண்ணுவது எல்லாமே குழந்தைக்கும் நமக்கு இருக்கும் பந்தத்தை வலுவாக்கத்தான். குழந்தையுடன் நாம் நிறைய நேரத்தை செலவிடத்தான்; குழந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளத்தான்

குழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போல இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நமது வழக்கமான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தையுடனான வாழ்க்கைக்கு – நிறைய மாற்றங்களுடன் தயாராக வேண்டும்.

உங்களைப் போலத்தான் குழந்தையும். இத்தனை நாள் அம்மாவின் வயிற்றில் சாப்பிட்டு, தூங்கி, கழிவுப் பொருட்களை வெளியேற்றி, இருட்டில் கதகதப்பான இடத்தில் தண்ணீரில் நீந்திக்கொண்டு இருந்து விட்டு, இப்போது திடீரென்று வெளி உலகத்தை, நிறைய சந்தடிகள் நிறைந்த உலகத்தை பார்த்து மிரண்டு தான் போயிருக்கும். தானே சாப்பிட வேண்டும்; வெளியேற்றமும் அதன் முயற்சியே! சின்ன சப்தம் கூட அதற்கு இடி முழக்கம் போலக் கேட்கும். சமையலறையில் டம்ளர் கீழே விழுந்தால் கை கால் எல்லாம் பறக்க தூக்கிப் போடும்.

குழந்தை மிகவும் ‘மிஸ்’ பண்ணுவது அம்மாவின் வயிற்றில் இருந்தபோது உணர்ந்த கதகதப்பையும், பாதுகாப்பு உணர்வைத்தான்.

குழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

அதேபோல குழந்தையைக் கையில் எடுக்கும்போதே உங்களுக்கும் அதன்மேல் ஒரு சின்ன பிரியம் உண்டாகும். உங்களுக்கும் குழந்தைக்கும் இடையில் இருந்த இடைவெளி மெதுவாக விலகும்.

குழந்தையுடன் நிறைய பேச வேண்டும் என்று சொன்னேன் இல்லையா? வெறுமனே பேசாமல் பாடலாம்.

இந்தக் கால இளம் பெண்களுக்கு தாலாட்டுப் பாடத் தெரிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. பல துறைகளில் வித்தகர்களாக இருக்கிறார்கள் இந்தக் கால இளம் பெண்கள். அதனால் அவர்களுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்ன? பாட்டிகள் பாடலாமே! அல்லது தாத்தாக்கள், ஏன், இளம் தந்தைமார்கள் கூடப் பாடலாம்; தவறில்லை!

நிறைய பெண்கள் எங்களுக்குப் பாடத் தெரியாதே என்கிறார்கள்.

ஒரு விஷயம்: உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் எம்.எஸ்! அம்மாவின் அண்மை, அம்மாவின் குரல் இரண்டும் தான் குழந்தைக்கு புரியுமே தவிர, நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்களா, நீங்கள் பாடும் பாட்டில் சந்தம், இலக்கணம் இருக்கிறதா என்றெல்லாம் குழந்தைக்குப் பார்க்கத் தெரியாது.

அதனால் எந்தப் பாடலையுமே தாலாட்டாகப் பாடலாம். ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா’, ‘கை வீசம்மா கை வீசு’ என்று எதை வேண்டுமானாலும் பாடலாம். உங்கள் வீட்டில் என்னைப் போன்ற பாட்டிகள் இருந்தால் ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி..’ ‘மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே…’ போன்ற பல்வேறு பாடல்களை அவர்களிடமிருந்து கற்கலாம்.

குழந்தையைப் பொறுத்தவரை ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா…’ வும், ‘மாணிக்கம் கட்டி..’ யும் ஒன்று தான்!

இணையத்தில் தேடினால் ஆயிரக் கணக்கான தாலாட்டுப் பாடல்கள் கிடைக்கின்றன. அதையெல்லாம் இங்கு எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

‘ஜோ ஜோ கண்ணம்மா, ஜோ ஜோ ஜோ,

குட்டிக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

பட்டுக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

செல்லக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

தங்கக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

குட்டிக் கிளியே ஜோ ஜோ ஜோ,

பட்டுக் கிளியே ஜோ ஜோ ஜோ,

செல்லக் கிளியே ஜோ ஜோ ஜோ

சின்னக் கிளியே ஜோ ஜோ ஜோ

தங்கக் கிளியே ஜோ ஜோ ஜோ

இப்படிப் பாடிக் கொண்டே போகலாம். உங்கள் கற்பனை உங்கள் வசம்!

என் அக்கா, தன் பேத்திகளுக்கு தாலாட்டாக ‘சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?’ என்ற பாடலை மிக இனிமையாகப் பாடுவாள். பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் இந்தப் பாடல் இழைந்து இழைந்து இனிமையில் தோய்ந்து ஒலிக்கும்.

‘பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்

பட்டாடை தொட்டிலிலே சிட்டுப் போல் படுத்திருந்தேன்

அந்நாளை நினைக்கையிலே என் மனது மாறுதடா

உன்னுடனே ஆடி வர உள்ளமே ஏங்குதடா’

 

‘கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா –

சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?’

 

எத்தனை அழகான கவிதை பாருங்கள். அடுத்த பாரா பாடாதீர்கள்!

 

‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி’

 

‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா!’

 

இந்தப் பாடல்களையும் தாலாட்டாகப் பாடலாம்.

 

‘அத்தை மடி மெத்தையடி…’ பாடல் தெரியாதவர் யார்?

கே.ஆர். விஜயாவுடன் சேர்ந்து இந்தப் பாடலும் பெருமையும், புகழும் பெற்றதை யார் மறக்கவோ மறுக்கவோ முடியும்? இந்தப் பாட்டையும் பாடலாம்.

 

உங்களுக்கு எந்தப் பாடல் வருமோ அதைத் தாலாட்டாகப் பாடிவிடுங்கள்.

சோகப் பாடல், இரைச்சலான பாடல் வேண்டாம்.

 

ஒரே பாட்டை திரும்பத்திரும்ப பாடுங்கள். அப்போதுதான் குழந்தை தூங்கும். நீங்கள் உங்கள் சங்கீதத் திறமையைக் காட்ட வேறு வேறு பாடல்கள் பாடிக் கொண்டே இருந்தால், குழந்தையும் கேட்டுக் கொண்டு தூங்காமல், ‘அட! அம்மாவுக்கு இத்தனை பாட்டு தெரியுமா?’ என்று உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் கண் கொட்டாமல்!

 

பெரியவர்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு தந்திரம் பண்ணச் சொல்வார்கள்: ஒரு ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் குதிக்கிறது என்று மனதில் உருவகம் செய்து கொள்ள வேண்டும். மறுபடி அதே ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம்; மறுபடி அ. ஆ. இ. ப. அ. ப. ஒரே ஒரு ஆடுதான். இதைப் போல ‘மொனாடனஸ்’ ஆக நினைத்துக் கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடும்.

 

அதே தான் குழந்தைக்கும். ஒரே பாட்டை எத்தனை முறை கேட்பது என்று அலுத்துக் கொண்டு தூங்கி விடும். இல்லை பாடிப் பாடி அசந்து போய் நீங்கள் தூங்கி விடுவீர்கள்! பிறகு பாவம், அம்மா என்று குழந்தையும் தூங்கிவிடும்; அல்லது அப்பாடி அம்மா ஒரு வழியாகப் பாட்டை நிறுத்தினாள், இனி நாம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தூங்க ஆரம்பிக்கலாம்.

 

இரண்டும் ஓகே தானே?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book