இந்த வாரம் நாம் சில சூப்பர் அம்மாக்களைப் பார்க்கலாம்.

முதலில் டாக்டர் சுபா.

இரண்டு வருடங்களுக்கு முன் தான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். தோல் சிகிச்சை நிபுணர். முதல் தடவை போய்விட்டு வந்தபின் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இவரைப் பார்க்கவில்லை. பிறகு ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டபோது சாயங்காலம் வாருங்கள் என்றார்.

‘இப்போது காலை வேளைகளில் வருவதில்லையா?’ என்று கேட்டதற்கு, ‘குழந்தை பிறந்திருக்கிறது. மாலை வேளைகளில் கணவர் (அவரும் ஒரு மருத்துவர்) குழந்தையைப் பார்த்துக் கொள்ளுகிறார். அவர் தனது வாடிக்கையாளர்களை காலை வேளையில் சந்திக்கிறார். இருவருமாக இந்த மருத்துவ மனையை இப்படி ஷிப்ட் போட்டுக் கொண்டு சமாளித்து வருகிறோம்’ என்றார்.

‘காலை வேளைகளில் வீட்டில் இருப்பது உங்களுக்கு ‘போர்’ அடிக்காதா?’ என்றேன். ‘அடிக்காது. ஏனென்றால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் அதே சமயத்தில் எனது மேற்படிப்புக்கும் தயாராகி வருகிறேன்,’ என்றார்.

டாக்டர் சுபாவிடமிருந்து நாம் இரண்டு பாடங்களைக் கற்கலாம்:

1. குழந்தை பார்த்துக் கொள்வதற்காக வேலை நேரத்தில் சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்;

2. அந்த நேரத்தையும் நம் மேல்படிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் டாக்டர் சுபாவின் கணவரும் நம் பாராட்டுக்குரியவர். மனைவிக்கு உதவ தன் வேலை நேரத்தை மாற்றிக்கொண்டு, அவள் மேல்படிப்பு படிக்கவும் ஊக்கம் அளிக்கிறாரே!

அரவிந்தா:

பிஎஸ்சி, எம்பிஏ (பைனான்ஸ்) இதைத்தவிர NIIT – கணணி தொழில் நுட்பம் கற்றிருக்கிறாள். படித்து முடித்தவுடன் திருமணம். கணவரும் கல்வித் துறையிலேயே இருக்கிறார். சொந்தமாக கல்வி மையம் வைத்து +1, +2 மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறார்.

ஒருநாள் என்னைப் பார்க்க வந்தவள் முகமெல்லாம் வாட்டம். ‘என்னம்மா?’ என்றேன்.

‘மேடம், எனக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தை; வயதான மாமியார் மாமனார்….’

‘ம்….ம்…. உன் வருத்தம் புரிகிறது. உன் கணவரின் கல்வி மையத்திலேயே நீ வகுப்புகள் நடத்த முடியாதா?’

‘அவரது சப்ஜெக்ட் வேறு. நான் படித்தது வேறு….?’

‘அது உங்களுடைய சொந்த மையம்தானே? அதன் பொறுப்பை என்று நடத்தலாமே! கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறாயே?’ என்றேன்.

‘நீ பைனான்ஸ் படித்திருக்கிறாய்; கணணி இயக்கத் தெரியும். வெளியில் வேலை தேடாமல் உன் கணவருக்கு ஏன் உதவக் கூடாது?’

கொஞ்சம் தயங்கினாள். ‘முதலில் உன் கணவரிடம் பேசு. உங்கள் சொந்த மையம் அது. உன்னை ஏன் இங்கு வந்தாய் என்று யாரும் கேட்க முடியாது. வகுப்புகள் எடுக்க வேண்டாம். உன் கணவருக்கு அவரது மையத்தின் பொது நிர்வாகத்தில் உதவலாமே. நீ அங்கு போய் மாணவர்கள் சேர்க்கை, வகுப்புகளின் நேரம், ஒரு வகுப்பிற்கு இத்தனை மாணவர்கள் என்று எல்லாவற்றையும் நிர்வகிக்கலாமே. உன் படிப்பை இப்படிப் பயன்படுத்தேன். உன் கணவருக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்குமே!’

அவள் யோசிப்பது புரிந்தது.

ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு அரவிந்தா தொலைபேசினாள். குரலில் புது உற்சாகம்!

‘நீங்க கொடுத்த அறிவுரை ரொம்ப நன்றாக வேலை செய்கிறது. நீங்கள் கூடியபடியே கணவரின் கல்வி மையத்தின் எல்லாப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொண்டு செய்து வருகிறேன். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை வந்திருக்கிறது. நான் படித்த பைனான்ஸ் அறிவு இங்கே ரொம்பவும் தேவைப் படுகிறது. எங்களது வருமானமும் கூடியிருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.’

‘குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, கணவருக்கும் உதவுவது எனக்கும் மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.’

‘இன்னும் சிறிது நாட்களில் நான் பைனான்ஸ் வகுப்புகள் எடுக்கவும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்குள் நானும் என் துறையில் என்னென்ன புது மாற்றங்கள் வந்திருக்கின்றன என்று படித்து தெரிந்து கொண்டு என்னைத் தயார் செய்து கொள்ள போகிறேன்.’

இப்போதெல்லாம் எல்லாத் துறைகளுக்கும் நல்ல மதிப்பு இருக்கிறது. முன்னேற்றங்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அதனால் நீங்கள் உங்களை மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப தயார் செய்து கொள்வது முக்கியம்.

கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து தொழில் நடத்தும்போது அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் இருவருக்கும் புரிகிறது. இருவரும் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். இருவருக்கும் தனிப்பட்ட புரிதலும் அதிகமாகிறது. மனதளவில் நெருக்கம் அதிகமாகிறது.

இவர்கள் இருவரும் மேல்வர்க்கத்தவர்கள். கணவன்மார்கள் இருவரும் நல்ல நிலையில் இருந்தனர். மனைவி வேலைக்குப் போகவில்லை என்றாலும் பணத்திற்குக் குறைவில்லை. அதேசமயம் மனைவி மேலே படிக்க ஆசைப் படும்போது அதற்கும் ஊக்கம் அளித்தனர்.

சாதாரண நிலையில் இருக்கும் பெண்கள் குழந்தை பிறந்தபின் என்ன செய்வார்கள்? அவர்களால் குழந்தையை டே கேர் மையத்திற்கு அனுப்ப முடியுமா? இல்லை ஆள் யாராவது வைத்துக் கொண்டு குழந்தையை பார்த்துக் கொள்ள முடியுமா? குழந்தை பிறந்தபின் வேலையை விடத்தான் முடியுமா?

விடை இல்லாத கேள்விகள் உண்டா? அதேபோலத்தான் தீர்வு இல்லாத பிரச்னைகளும் இல்லை.

சாந்தி:

சாந்தி ஒரு பள்ளியில் 9, 10 ஆம் வகுப்பு கணித ஆசிரியை. குழந்தை பிறந்தபின் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில் அவர்கள் இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு புரியாத கணக்குகளை சொல்லித் தர ஆரம்பித்தவள், சொன்னால் நம்ப மாட்டீர்கள் இப்போது அவளிடம் சுமார் நூறு குழந்தைகள் கணக்கு சொல்லிக் கொள்ள வருகிறார்கள்! வருடாவருடம் இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

‘புது சிலபஸ் வந்தால் என்ன செய்வாய்?’ குழந்தைகளிடம் புது புத்தகம் வந்தவுடன் வாங்கிக் கொள்ளுகிறேன். முதலில் நான் போட்டுப் பார்த்துவிட்டு பின்பு கற்றுக் கொடுக்கிறேன். சமீபத்தில் கணணி வாங்கியிருக்கிறேன். அவ்வப்போது இணையத்திலும் நிறைய வாசித்துத் தெரிந்து கொள்ளுகிறேன்.’

வருமானம், குழந்தை இரண்டுமே நல்லவிதமாக வளர்ந்து வருகின்றன.

சாந்தி படித்த பெண். ஏதோ ஒரு வகையில் தன் படிப்பை பயன்படுத்தி வருமானத்தை தக்க வைத்துக் கொண்டாள். வேறு உதாரணம் காட்ட முடியுமா என்கிறவர்களுக்கு:

மூன்று வாரங்களாக தும்கூரில் என் பெண் வீட்டில் இருக்கிறேன். நேற்று என் பெண் என்னிடம், ‘வாம்மா, டைலர் கடைக்குப் போகலாம்’ என்றாள். ‘நான் வரவில்லை. நீ போய்விட்டு வா’ என்றேன். ‘நீ எழுதிக் கொண்டிருக்கும் ‘செல்வ களஞ்சியமே’ பகுதியில் நீ இவளை அறிமுகம் செய்யலாம். பார்த்தால் அசந்து விடுவாய்’ என்றாள். சரியென்று கிளம்பினேன்.

போகும் வழியில் என் பெண் சொன்னாள்: ‘பிரேமா நல்ல திறமைசாலி. எல்லோரிடமும் கலப்பாகப் பழகுவாள். இதனாலேயே நிறைய பெண்கள் பிரேமாவிடம் தைக்கக் கொடுக்கிறார்கள். அதுமட்டுமில்லை; புடவை, ரவிக்கை, எம்ப்ராய்டரி என்று எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு: பிரேமாவின் தையல் கடை!’

பிரேமாவின் வீட்டுக்குள் நுழைந்தால் ஏதோ புடவைக் கடைக்குள் வந்துவிட்டது போல இருந்தது. என் பெண் கூப்பிட்டவுடன், புடவை மலைக்குள் இருந்து பிரேமா வெளியே வந்தாள்.

பிரேமாவின் கதையை அவளே சொல்லக் கேட்போம்:

‘ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை. காதல் கல்யாணம்! முதல் குழந்தை பிறந்தது. அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு புடவை ஃபால்ஸ், zigzag செய்து கொடுக்க ஆரம்பித்தேன். கடன் வாங்கித்தான் தையல் இயந்திரம் வாங்கினேன்.

பிறகு மெதுமெதுவே ரவிக்கை, சின்னக் குழந்தைகளுக்கு ஃப்ராக், என்று தைக்கத் தொடங்கினேன். சிலர் என்னிடம் புடவையில் எம்ப்ராய்டரி செய்து கொடுக்க முடியுமான்னு கேட்க, குழந்தையையும் எடுத்துக் கொண்டு எம்ப்ராய்டரி வகுப்புகளுக்குப் போய் புடவை ரவிக்கையில் எம்ப்ராய்டரி செய்யக் கற்றுக் கொண்டேன். என்னோட திறமையான வேலையைப் பார்த்து நிறைய பேர் வர ஆரம்பித்தனர்.’

அதன் பிறகு பிரேமா செய்ததுதான் அவளது மாபெரும் வெற்றிக் காரணம். வரும் பெண்களிடம் புடவையை வாங்கிக் கொண்டு அளவு ரவிக்கையையும் வாங்கிக் கொள்ளுகிறாள். இப்போது புடவையுடனேயே ரவிக்கையும் வந்து விடுவதால், அளவு ரவிக்கையின் உதவியுடன் தைக்க வேண்டிய ரவிக்கைத் துணியில் எங்கு எம்ப்ராய்டரி வேண்டுமோ (பின் கழுத்துப் பகுதி, கை) என்று புடவையில் இருக்கும் டிசைனிலேயே ரவிக்கைக்கும் டிசைன் செய்து அதை வேறு ஒரு டைலரிடம் கொடுத்து தைத்து வாங்கி திருப்பிக் கொடுக்கிறாள். இங்கிருக்கும் பெண்களிடையே இந்த மாதிரியான சர்வீஸ் மிகவும் பிரபலமாகிவிட்டது.

என் பெண் சொன்னாள்: ’எனக்கு எத்தனை ஓட்டம் மிச்சம் பார். ஒருமுறை புடவைக்கு ஓரம் அடிக்க, ஃபால்ஸ் தைக்க ஓட வேண்டும். இன்னொருவரிடம் எம்ப்ராய்டரி பண்ண ரவிக்கைத் துணியை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். அதை திரும்ப வாங்கிக் கொண்டு வந்து டைலரிடம் கொடுக்க வேண்டும். இப்போது பிரேமாவிடம் புது புடவையைக் கொடுத்துவிட்டு மறந்து விடுகிறேன். அங்குமிங்கும் ஓட வேண்டாம். ரெடியானவுடன் பிரேமா தொலைபேசியில் கூப்பிடுவாள். போய் வாங்கிக் கொண்டு வர வேண்டியதுதான்! One stop for all tailoring problems!’ என்றாள்.

இப்போது பிரேமா எம்ப்ராய்டரி மட்டும் செய்கிறாள். தன்னைப் போன்ற பெண்களிடம் ரவிக்கையைத் தைத்து வாங்குகிறாள். கிட்டத்தட்ட ஒரு சிறு தொழில் அதிபர் என்றே பிரேமாவை சொல்லலாம்.

இன்னொரு குழந்தையை எதிர்நோக்கும் பிரேமா சிரித்தபடி சொல்லுகிறாள்:

‘இப்போ அதிகமா ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. ஆனால் என் கணவர் நிறைய உதவுகிறார். தோழிகள் நிறைய எனக்கு. கவலையில்லை!

ஒன்று கவனித்தீர்களா? இவர்கள் எல்லோருமே தங்கள் துறைகளில் இன்னும் இன்னும் முன்னேற வேண்டும் என்ற அவாவுடன் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே ‘சூப்பர் அம்மா’க்களின் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்த சூப்பர் அம்மாக்களை மனதாரப் பாராட்டுவோம். அடுத்த வாரம்?

குழந்தைகளுக்குகாக தங்கள் வேலையை விட்ட அம்மாக்கள்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book