குழந்தைகளுக்கு வெளி ஆபத்துக்களை விட வீட்டினுள் ஏற்படும் ஆபத்துக்கள் தான் அதிகம் என்றால் வியப்பாக இருக்கும். மற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்தை விட மனிதர்களால் ஏற்படும் அபாயம் இன்னும் அதிகம்.

 

ஒருமுறை என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். என் மகள் அப்போது குழந்தை. வந்தவர் குழந்தையை ஒரே அலாக்காக தலைக்கு மேல் தூக்க, நான் ‘ஆ’ என்று அலறினேன். மேலே மின் விசிறி முழு வேகத்தில்……! அப்படியே குழந்தையை இறக்கிவிட்டு விட்டார். எல்லோருக்கும் படபடப்பு அடங்க சற்று நேரம் பிடித்தது.

 

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒருவர் தன்னிடம் வரும் குழந்தைகளையெல்லாம் மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். என்னால் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியவேயில்லை. போய் சொல்லிவிட்டு வரலாம் என்றால் என் கணவர் ‘சும்மா இரு. வந்த இடத்தில் எல்லாம் உன் அறிவைக் காட்டாதே’ என்றார். வேறு பக்கம் பார்த்து உட்கார்ந்துகொண்டேன்.

 

தூக்கிப் போட்டுப் பிடித்தால் என்ன ஆகும்?

 

ரொம்ப வருடத்திற்கு முன் ஆனந்த விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற பெயரில் மருத்துவக் கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அதில் தலையைப் பற்றி பேசும் மருத்துவர் திரு கே. லோகமுத்துக்கிருஷ்ணன் அவர்கள் சொல்லுகிறார்:

 

‘குழந்தைகளின் மூளை தன் முழு வளர்ச்சியை அடைந்திருக்காது. நாம் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்போது குழந்தை சிரிக்கிறதே…..அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ‘தலைக் குலுக்க காயம்’ (Shaking Head Injury) என்கிற உயிராபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. இப்படித் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படும். இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின் தூங்கும். திரும்ப விழிக்காது. அவ்வளவுதான்!’

 

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் முதலில் சொன்னேன்: குழந்தைகளுக்கு மனிதர்களாலேயே ஆபத்து வரக்கூடும் என்று.

 

இதுமட்டுமல்ல; குழந்தைகளை எடுத்துக் கொள்ளும்போது இரண்டு கைகளாலும் அவர்களது தோள்பட்டை, கைகள் இவற்றை கெட்டியாகப் பிடித்து தூக்கவேண்டும். ஒரு கையால் குழந்தைகளை – எத்தனை வயதானாலும் – தூக்கவே கூடாது. குழந்தைகளை எடுத்துவைத்துக் கொள்ளும்போதும், முதுகில் ஒரு கையை முதுகுக்கு அணைப்பாகக் கொடுத்தே வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் குழந்தையின் பிருஷ்ட பாகத்தில் மட்டும் ஒரு கையை வைத்திருப்பார்கள். குழந்தையின் முதுகு வளையும். குழந்தை நம் பிடியை மீறி ஏதாவது எடுக்கவோ, அல்லது வேறு பக்கம் திரும்பவோ முயற்சி செய்தால் குழந்தையின் இளம் முதுகில் உள்காயம் ஏற்படலாம். குழந்தையின் எலும்புகள் மிகவும் மிருதுவானவை.

 

குழந்தையை வைத்துக் கொண்டு செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. சில தாய்மார்கள் குழந்தைக்கு உட்கார வருவதற்கு முன்பே இரண்டு தலையணைகளுக்கு நடுவில் குழந்தைகளை உட்கார வைப்பார்கள். இது மிகவும் தவறு. நமது பின்புறத்தில் நாம் உட்காரவென்றே sitting bones இருக்கின்றன. இவை வளர்ந்து குழந்தையின் எடையை தாங்க தயாரானவுடன், குழந்தை தானாகவே உட்கார ஆரம்பிக்கும். நம் மடியில் உட்கார வைத்துக் கொள்ளலாம்; ஒரு மடியில் உட்கார வைத்துக் கொண்டு ‘ஆனே ஆனே’ என்று ஆட்டலாம். காலில் படுக்க வைத்துக் கொண்டு ‘தென்ன மரத்துல ஏறாதே; தேங்காய பறிக்காதே’ என்று ஆட்டலாம்; இவையெல்லாம் தவறில்லை.

 

குழந்தை சற்று நேரம் அமைதியாக இருந்தால் உடனே உடனே பார்க்க வேண்டும். வீட்டினுள்ளேயே மாடிப்படிகள் இருந்தால் குழந்தை ஏறாதவாறு தடுப்புப் போடுங்கள். குழந்தை ஒரு வேளை நீங்கள் கவனிக்காத போது மாடிப்படி ஏறிவிட்டால், ‘ஐயையோ..!’ என்று சத்தம் போடாதீர்கள். குழந்தையின் கவனம் சிதறி மாடிப்படிகளில் உருண்டு விழக் கூடும். சத்தம் போடாமல் பின்னால் போய் குழந்தையை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

 

நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘போகாதே’ என்றால் குழந்தை கட்டாயம் போகும். குழந்தை மாடிப்படி அருகே போகும்போதே நீங்கள் சட்டென்று எழுந்து போய் குழந்தையை எடுத்து வந்தால், குழந்தைக்கு உங்கள் பதட்டம் புரியும். இதை முதலிலிருந்தே செய்ய வேண்டும். குழந்தை இரண்டு மூன்று நாட்கள் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு சொன்னால் கேட்காது.

 

சமீபத்தில் பெங்களூரில் ஒரு குழந்தை, அம்மா பக்கத்து வீட்டில் பேசிகொண்டிருந்த போது வெளி வராந்தாவில் இருந்த தடுப்பு வழியே கீழே விழுந்து இறந்து விட்டது. குழந்தையைப் பார்த்துக் கொள்வதைவிட பேசுவது முக்கியமா? குழந்தை வெளியே வந்தது கூடத் தெரியாமல் என்ன பேச்சு? எத்தனை குழந்தைகள் ஆழ் துளை கிணறுகளில் விழுந்து உயிரை விடவில்லை? எத்தனை செய்திகள் தினந்தோறும் படிக்கிறோமே.

 

ஓடும் குழந்தையின் பின் நம்மால் ஓட முடியாது ஆனாலும் ஓட வேண்டும். குழந்தையின் பாதுகாப்பு நம் கையில். நினைவிருக்கட்டும். இன்ன இடத்தில் இன்ன மாதிரி அபாயம் இருக்கும் என்று குழந்தைக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தெரியுமே. நாம்தான் பத்திரமாகக் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

குழந்தையின் விளையாட்டு சாமான்களும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும். Fur பொம்மைகளை தவிர்த்துவிடுங்கள். குழந்தையின் மூக்கிலும், வாயிலும் இந்த மெல்லிய இழைகள் போய்விடும்.

 

சமையலறையில் குழந்தையை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் எல்லா சமையலறைகளிலும் மேடை இருக்கிறது. அதனால் அடுப்பு, சமையல் செய்த பாத்திரங்கள் எல்லாம் மேலே இருக்கும். ஆனாலும் குழந்தை அடுப்பை தொடாதவாறு உள்ளே தள்ளி வையுங்கள். அதேபோல உணவு இருக்கும் பாத்திரங்கள் குழந்தைகளுக்கு எட்டக் கூடாது. கூராக இருக்கும் கரண்டிகள், மூடித் தட்டுகள், பாத்திரங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு எட்டக் கூடாது. இடுக்கி நிச்சயம் குழந்தையின் கண்ணிலே படவே கூடாது.

 

குளியலறையில் குழந்தையை குளிக்க அழைத்துச் செல்லுமுன் தண்ணீரை தயார் செய்து கொள்ளுங்கள். குழந்தை உங்கள் பின்னாலேயே வரும். நீங்கள் அழுத்தமாக ‘வேண்டாம்’ என்று சொன்னால் குழந்தை அந்த சாமானைத் தொடாது. முதலிலிருந்தே கண்டிப்பு காட்டுமிடத்தில் கண்டிப்பு; கொஞ்சும் போது கொஞ்சல் என்று நீங்கள் பழகிக் கொண்டு, குழந்தைக்கும் பழக்கிவிடுங்கள்.

நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை கேட்க வேண்டும். பக்கத்து வீட்டு மாமா கோவிச்சுப்பார்; அந்த மாமி அடிப்பார் என்று அனாவசியமாக பக்கத்து வீட்டு மாமா, அல்லது மாமியை ‘வில்லன்/வில்லி ஆக்காதீர்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் தான் கண்டிக்க வேண்டும். பிறர் கண்டிக்கும் அளவுக்கு நீங்கள் விட்டால் உங்களுக்குத்தான் குழந்தையை சரியாக வளர்க்கத் தெரியவில்லை என்ற கெட்ட பெயர் வரும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book