ஒரு முறை நான் குழந்தை நல மருத்துவரிடம் என் பிள்ளையை எடுத்துக் கொண்டு போன போது எனக்கு முன்னால் இருந்த ஒரு பெண்மணி மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்: ‘ஒரு நாள் நல்ல சாப்பிடுகிறாள்; மறுநாள் சாப்பிட மாட்டேங்குறா.. என்ன பண்றது டாக்டர்?’

‘நீங்க எப்படிம்மா சாப்பிடறீங்க? தினமும் ஒரே மாதிரி சாப்பிடறீங்களா? ஒரு நாள் நல்ல பசியிருக்கு; ஒரு நாள் ஒண்ணும் வேணாம் மோர் குடிச்சா போதும் போல இருக்கு இல்லையா? அது போலதான்மா குழந்தையும்’.

‘முதல் ஒரு வருஷம் நீங்க நினைக்கறபடி குழந்தை சாப்பிடும். நீங்கள் பால் கொண்டு வருவதற்குள் அழுது ஊரைக் கூட்டும். ஆனால், அதுவும் வளருகிறது, இல்லையா? அதனால நம்மளை மாதிரியே அதுக்கும் பசி மாறுபடும். வேண்டும் வேண்டாம் என்பதை கற்றுக் கொள்ளுகிறது. அதனால் குழந்தை ஒரு நாள் சரியாக சாப்பிடவில்லை என்றால் நீங்கள் டென்ஷன் ஆகாதீர்கள்’ மருத்துவர் அந்தப் பெண்மணிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

அடுத்த கேள்வி கேட்டார் அந்தப் பெண்மணி: ‘டாக்டர், முட்டையை முழுக்க வேக வைக்கலாமா? இல்லை அரை வேக்காட்டில் கொடுக்கலாமா?’

‘எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம், குழந்தை எப்படிக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுகிறதோ, அப்படிக் கொடுங்கள்’

‘இல்லை டாக்டர், சிலபேரு அரை வேக்காடுதான் நல்லது என்கிறார்கள். முழுக்க வேக வைத்தால் சத்து எல்லாம் போயிடுமாம்……’

‘எப்படியும் சில சத்துக்கள் போகத்தான் போகும். மற்றவர்கள் சொல்வதை விடுங்கள். உங்கள் குழந்தையின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்’

‘உங்க வீட்டுல முட்டை சாப்பிடுவீங்களா?’

‘…….இல்லை டாக்டர், சாப்பிட மாட்டோம். ஆனா குழந்தைக்கு நல்லதுன்னு சொன்னாங்க… அதுதான்…..’

‘உங்க வீட்டுல என்ன சாப்பிடுவீங்களோ, எப்படி சமைப்பீங்களோ, அப்படி சமைச்சு கொடுங்க. யாரோ எதையோ கொடுக்க சொல்றாங்க, அப்படி கொடுக்க சொன்னாங்க, இப்படி கொடுக்கச் சொன்னாங்கனுட்டு நீங்க சாப்பிடாத பொருளையெல்லாம் குழந்தைக்குக் கொடுக்காதீங்க. இவ்வளவு வருடமா பரம்பரை பரம்பரையா நீங்கள் என்ன சாப்பிடுவீங்களோ அதைத்தான் குழந்தை சாப்பிடும். திடீரென்று புதிய ஆகாரத்தை குழந்தைக்கு கொடுக்க முயற்சி பண்ணாதீங்க. குழந்தை சாப்பாட்டையே வெறுத்துடும்’.

‘முட்டைல இருக்குற சத்து இட்லில இருக்கு. உளுத்தம்பருப்பு மஞ்சள் கருவுக்கு நிகரான கொழுப்பு சத்து கொண்டது. முட்டையின் வெள்ளைப் பகுதி அரிசியில் இருக்கும் மாவு சத்துக்கு சமம். அதை கொடுங்க குழந்தைக்கு’

 

அந்தப் பெண்மணி மட்டுமல்ல நானும் அன்று நிறையக் கற்றுக் கொண்டேன்.

முக்கியமான விஷயம் இங்கு ஒன்று சொல்ல வேண்டும் நான். ஒரு முறை குழந்தைக்கு நீங்கள் சாதம் கலந்துகொண்டு வருகிறீர்கள். குழந்தை கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். மறுபடி மறுபடி அதே பாத்திரத்தில் அதே சாப்பாட்டை குழந்தையிடம் காண்பித்து கொஞ்சம் சாப்பிடறயா என்று கேட்காதீர்கள். ஒருமுறை பிடிக்கவில்லை அல்லது சாப்பிட மறுக்கிறது என்றால் அதுதான் கடைசி முறை. மறுபடி அதை சாப்பிட குழந்தை விரும்புவதில்லை. திரும்பத் திரும்ப கெஞ்சாதீர்கள். குழந்தை உணவை இன்னும் அதிகமாக வெறுக்க ஆரம்பிக்கும். ஜாக்கிரதை!

வேறு சாப்பாடு, வேறு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வாருங்கள். புதிதாகக் கலந்து கொண்டு வாருங்கள். அதற்குத்தான் கலக்கும்போதே கொஞ்சமாகக் கலவுங்கள். போதவில்லை என்றால் மறுபடி கலக்கலாம். நீங்கள் சாப்பிடும் அளவிற்கு குழந்தை சாப்பிடாது.

கால் கரண்டி பருப்பு சாதம். கால் கரண்டி ரசம் சாதம். இன்னொரு கால் கரண்டி தயிர் சாதம். அத்துடன் சாப்பாட்டுக் கடையை மூடிவிடுங்கள். குழந்தை இன்னும் வேண்டும் என்று கேட்டால் ஒழிய இதற்கு மேல் கொடுக்காதீர்கள். ஒரே சாதத்தை முழுக்கக் கொடுக்காதீர்கள்.

என் பெண்ணின் வீட்டில் முதலில் குழந்தைக்கு உப்பு, துப்பா (நெய்) அன்னம் என்று கொடுப்பார்கள். சுடச்சுட சாதத்தில் நெய் ஊற்றி, துளி உப்பு போட்டு ஊட்டுவார்கள். என் பேரன்கள் இருவரும் இன்னும் கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு காய்கறிகள் பொரியல், அல்லது குழம்பில் போட்ட தான்கள் கொடுக்கலாம். குழம்பு காரமாக இருந்தால் தான்களை நீர் ஊற்றி கழுவி விடுங்கள். வெறும் உப்பு மட்டுமே அதில் இருக்கும்.

குழந்தைக்கென்று காலை மாலை இருவேளையும் புது தயிர் தோய்த்து வைத்துக் கொடுங்கள். காலை எழுந்தவுடன் காய்ச்சும் பாலில் சிறிது எடுத்துவைத்து தோய்த்து விடுங்கள். 6 மணிக்குத் தோய்த்தால் கூட பத்து மணிக்குள் (சென்னை போன்ற நகரங்களில்) தோய்ந்து விடும். பெங்களூர் போன்ற நகரங்களில் தயிர் புளிக்கவே புளிக்காது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அப்படியே எடுத்து குழந்தைக்கு பயன்படுத்தாதீர்கள். குழந்தை சாப்பிடும் முன் தயிரை எடுத்து வெளியில் வைத்துவிடுங்கள்.

குழந்தைக்கென்றே ஒரு அழகான பாத்திரம் எடுத்து பயன்படுத்துங்கள். குழந்தையிடம் சொல்லுங்கள்: ‘இங்க பாரு! பாப்பாவுக்கு அம்மா புதுசா தயிர் தோய்ச்சிருக்கேன். பாத்திரம் பாரு, உனக்கு பிடிச்சிருக்கா?’

என் முதல் பேரனுக்கு தலையில் நிறைய கூந்தல். அவர்கள் குடும்பத்தில் முழு மொட்டை என்பதே கிடையாது. அதனால் 3 வயது வரை அவனுக்குத் தலை வாரிப் பின்னுவது என்பதே பெரிய போராட்டம் தான். சீப்பைப் பார்த்தாலே அலறுவான். அவனுக்கு தலை வார நான் ஒரு தந்திரம் செய்வேன். சீப்பை எடுத்துக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘ இந்த பக்காத்தாத்து ரத்தன் அண்ணா இருக்கான், பாரு. அவன் என்ன பண்ணினாம் தெரியுமா, இன்னிக்கு? சாதமே சாப்பிட மாட்டேன்னு ரொம்ப படுத்தினானாம். அந்த சாதம் என்ன பண்ணித்தாம் நேர பீச்சுக்குப் போச்சாம். அங்க போய் அந்த அலைக் கிட்ட ‘இந்த ரத்தன் என்ன சாப்பிட மாட்டேன்னு சொல்றான்னு ஓன்னு அழுதுதாம். அலை சொல்லித்தாம், அப்படியா, நீ அழாதே நான் வந்து சொல்றேன் அப்படின்னு சொல்லிட்டு அவாத்துக்கு வந்துதாம். நம்மாத்துல அலை வந்தா எப்படி இருக்கும் சொல்லு?’

 

இப்படி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருப்பேன். தினமும் ஒரு விஷயம் மாற்றி மாற்றி சொல்லுவேன். அவன் என் வாயைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது தலையை வாரி விட்டுவிடுவேன். மொத்தத்தில் பொறுமை வேண்டும். கோவம் வந்து சத்தம் போடுவது, திட்டுவது, அடிப்பது இதெல்லாம் ஒன்றும் பலிக்காது.

 

இதேபோலத்தான் சாப்பிட வைப்பதும். இரண்டு வயது மூன்று வயதுக் குழந்தைகளிடம் ஒரு நல்ல குணம் – அவர்களின் கவனத்தை சட்டென்று திசை திருப்ப முடியும். இதை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book