மூன்று மாதங்கள் என்பது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் எனலாம். இப்போது குழந்தையின் தூக்கம், உணவு, விளையாட்டு எல்லாமே ஓரளவுக்கு ஒரு ஒழுங்குமுறைக்கு வந்திருக்கும். வீட்டில் இருக்கும் எல்லோருமே ‘அப்பாடி, குழந்தைக்கு மூன்று மாதம் ஆகிவிட்டதா?’ என்று ஆசுவாசமாய் கேட்பார்கள். அம்மாவிற்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும்.

கழுத்து எலும்புகள் கெட்டிப்பட்டு தலை நன்றாக நின்றிருக்கும். இப்போது குழந்தையை எடுப்பது, நீராட்டுவது எல்லாமே கொஞ்சம் சுலபமாக இருக்கும். அம்மாவைத் தவிர மற்றவர்களையும் குழந்தை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பிக்கும். அழைப்பு மணி அடித்தவுடன், ‘பக்கத்தாத்து மாமி வந்திருக்கா பாரும்மா. கதவுக்கு வெளியே அந்த மாமி பேசறது நம்மாத்துக்குள் கேட்கிறது’ என்று மனதிற்கு நினைத்துக் கொள்ளும்.

பார்வை நிலைப்பட்டு உங்கள் கண்களைப் பார்த்து சிரிக்கும். நிற்க வைத்துக் கொண்டால் நம் தொப்பை மீது காலை வைத்து சிறிது நேரம் நிற்கும். குப்புறப் படுக்க விட்டிருந்தால் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஒரு கையை தூக்கி இன்னொரு கையால் அந்தக் கையைப் பிடிக்கப் பார்க்கும். அப்படியே வாய் வரை கொண்டுவந்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும். ஏதாவது விளையாட்டுப் பொருள் கொடுத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளும். கைப்பிடி வலுவாக இருக்கும். கையில் எந்த சாமான் அகப்பட்டாலும் நேராக வாய் அருகே கொண்டு போகும். எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கம் இருக்கும்.

சிலசமயம் தன் தலைமயிரை தானே பிடித்துக் கொண்டு விடத்தெரியாமல் அழும்!

‘colic’ வலி நின்று குழந்தையின் ஓயாத அழுகையும் நிற்கும். பகல் வேளையில் தூங்கும் நேரம் குறையும். விழித்திருக்கும் நேரம் காலையும் கையையும் சைக்கிள் விடுவது போல விடாமல் ஆட்டிக் கொண்டே இருக்கும். காலைப் பிடித்து விட்டால், காலை நன்றாக நீட்டி நம் தொடுதலை ரசிக்கும்.

தாய்ப்பால் தவிர வேறு பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். இப்போதெல்லாம் மருத்துவர்கள் ஆவின் (எங்களூரில் ‘நந்தினி’ பால்) பாலே கொடுக்கலாம் என்கிறார்கள். முதல் முறை கொடுக்கும்போது 2 அளவு ஆவின் பால் என்றால் ஒரு அளவு காய்ச்சி ஆறிய நீர் சேர்த்துக் கொடுக்கலாம். ஒரு வாரம் ஆன பின் நீரின் அளவைக் குறைத்து முழு பாலைக் கொடுக்க ஆரம்பியுங்கள். முழு பால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மறுபடி சிறிது நீர் கலந்தே கொடுங்கள். அவசரம் வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை வேறு பால் கொடுக்க ஆரம்பியுங்கள். மற்ற வேளைகளில் தாய்ப்பால் கொடுங்கள். வெளிப்பாலில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். சில குழந்தைகள் சர்க்கரை ருசி பழகி விட்டால் தாய்ப்பால் சாப்பிடாது.

எந்தப் புது ஆகாரம் கொடுக்க ஆரம்பித்தாலும் முதல் நாள் குழந்தையின் மலம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆகாரம் பழகிய பின் சரியாகி விடும். வெளிப் பால் கொடுக்கும் போது பாட்டில் பயன்படுத்தலாம். அல்லது பாலாடையில் கொடுக்கலாம்.

மூன்று மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது மிகவும் நல்லது.

தாய்ப்பால் குழந்தைக்குப் போதவில்லை என்று எப்படி அறிவது? குழந்தையும் வளருகிறது; அதற்குத் தகுந்த ஆகாரமும் அதிகரிக்க வேண்டும். அதிகரிக்கும்படி தான் இயற்கையும் செய்கிறது.

சில சமயம் குழந்தை பால் குடித்தபின் தூங்கும் குழந்தை வழக்கத்தைவிட சீக்கிரமாகவே எழுந்து பசி அழுகை அழுதால் – இந்நேரம் உங்களுக்குக் குழந்தையின் பல்வேறு அழுகைகள் புரிந்திருக்கும் – வயிறு ஒட்டி உதடுகள் துடிக்க அழும் அழுகை தான் பசி அழுகை. பால் போதவில்லை என்று அறியலாம்.

சிறிது நீர் கொடுத்து மறுபடியும் தூங்க வைக்க முயற்சி செய்யுங்கள். தூங்கினால் சரி. அழுகை நிற்கவில்லையென்றால் மறுபடி தாய்ப்பால் கொடுக்கலாம். சிறிது நாட்கள் தொடர்ந்து குழந்தையை கவனியுங்கள். உங்களுக்கே தெரிந்து விடும். பிறகு வேறு பாலுக்கு மாறலாம்.

மற்றபடி குழந்தை அழும்போதெல்லாம் பசி, பால் போதவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டாம்.

தாய்ப்பால் தவிர வேறு பால் கொடுக்கக் காரணங்கள்:

சில தாய்மார்களுக்கு மன அழுத்தம், அல்லது வேறு விதமான நோய்களினால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம்;

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே இளம் தாய்க்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இந்த மாதிரியான சமயங்களில் வேலைக்குப் போவதற்கு சில வாரங்களுக்கு முன்னாலிருந்தே வேறு பால் கொடுக்க ஆரம்பியுங்கள். நீங்கள் வேலைக்குப் போக ஆரம்பிக்குமுன் குழந்தை வேறு பால் குடிக்கப் பழகிவிடும்.

பொதுவாக குழந்தைகள் வளர வளர ஒவ்வொரு உணவிற்கும் நடுவில் உள்ள இடைவெளியும் அதிகரிக்கும். பிறந்த குழந்தை 1 ½ – 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடித்தால் 1 மாதக் குழந்தை 2 ½ மணி நேரத்திற்கு பிறகுதான் அடுத்த வேளை பால் குடிக்கும். கெட்டி ஆகாரம் கொடுக்கத் தொடங்கியவுடன் இந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக 4 மணி நேரமாக மாறும்.

மிகவும் இளம் குழந்தை இரவில் விழித்துக் கொண்டு ஒரு முறை பால் குடித்துவிட்டுத் தூங்கும். இதுவும் போகப்போக மாறிவிடும். சில நாட்கள் குழந்தை அசந்து தூங்கி விட்டால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டாம். கொஞ்ச நாட்களில் இந்த பழக்கம் நின்று போய்விடும்.

குழந்தை பசிக்கும் போது பால் குடித்து, போதுமான அளவு எடை கூடுகிறது என்றால் குழந்தைக்கு பால் போதுமான அளவு கிடைக்கிறது என்றே பொருள்.

குழந்தை பிறந்த போது இருந்த எடை குழந்தையின் 5 வது மாதத்தில் இரண்டு மடங்கு ஆகும். சின்னதாகப் பிறக்கும் குழந்தைகள் வேகமாக எடை கூடும். குழந்தை வளர வளர அதன் எடை சற்று நிதானமாகவே ஏறும்.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் குழந்தைக்கு உடம்பு படுத்தும் என்பார்கள். உடம்பு சரியில்லை என்றால் ஆகாரமும் சரியாகச் சாப்பிடாது. அதனால் ஒரு சில மாதங்களில் குழந்தை நாம் எதிர்பர்த்ததுபோல எடை கூடாது. ஆனால் அதற்கடுத்து வரும் நாட்களில் எடை அதிகரித்துவிடும். குழந்தை சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டு இருக்கும் வரை கவலைப் பட வேண்டாம்.

 

மூன்றாம் மாதம் சில குழந்தைகள் குப்புறக் கவிழ்ந்து கொள்ளும். அல்லது நீங்கள் கீழே விடும்போதே ஒருக்களித்துக் கொள்ளும். சின்னக் குழந்தையின் விடாமுயற்சி பார்க்கப் பார்க்க பரவசமாயிருக்கும்.

 

ஒருக்களித்த குழந்தை அந்தப் பக்கம் முழுக்க திரும்பப் பார்க்கும். மறுபடி மறுபடி இந்த முயற்சி நடந்து கொண்டே இருக்கும். சிலசமயம் முக்கால்வாசி திரும்பி விடும். கையை எடுக்கத்தெரியாமல் அழும்! கையை எடுத்துவிடும். தலையை தூக்க முடியாமல் தரையில் முட்டிக் கொள்ளும்.

ஒருமுறை கவிழ்ந்து படுக்க வந்துவிட்டால், அதையே தான் செய்யும். பாலைக் கொடுத்துக் கீழே விட்டவுடன், கவிழ்ந்து கொண்டு கொஞ்சம் பாலை கக்கும். இதுவும் சிறிது நாட்களில் சரியாகிவிடும்.

தலை சற்று கனமாக இருந்தால் குப்புற கவிழுவது சற்று நிதானமாகத்தான் நடக்கும்.

குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் அழகுதான்.

மேலும் ரசிக்கலாம் தொடர்ந்து!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book