முதல் பேரன் பிறந்த போது ஒருநாள். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. என் மகள் பக்கத்தில் கட்டிலில் படுத்துக் கொண்டு ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று தொட்டிலின் மேல் கட்டித் தொங்கவிட்டிருந்த கிலுகிலுப்பை சத்தம் போட்டது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் கிலுகிலுப்பை சத்தம். வந்து பார்த்தால் குழந்தை காலால் தொட்டிலை உதைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை உதைக்கும்போதும் கிலுகிலு சத்தம். கூடவே குழந்தையின் சிரிப்பொலியும்.

 

‘குழந்தை புது விளையாட்டுக் கற்றுக் கொண்டு விட்டான்’ என்று சந்தோஷமாக மகளிடம் கூறினேன். பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி, என் அம்மாவுக்குக் என் பேரனின் விளையாட்டுப் பற்றிக் கடிதம் எழுதி….

 

மூன்று மாதங்கள் முடிந்தவுடன் குழந்தைகள் இதுபோல தாங்களே விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.

 

காலை உதைத்தால் கிலுகிலு சத்தம் வரும் என்று குழந்தைகள் இந்த மாதத்தில் புரிந்து கொள்ளுகிறார்கள். என்ன செய்தால் என்ன ஆகும் என்று அறியத் தொடங்குகிறார்கள். நீங்கள் பேசும்போது உங்கள் முகத்தையே உற்றுப் பார்த்து, சிரித்தால் சிரித்து, நீங்கள் கோபித்துக் கொண்டால் உதடுகள் பிதுங்க அழ ஆரம்பிப்பது என்று நம்முடைய செயல்களுக்கு சரியான எதிர்வினை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். மிகவும் சுவாரஸ்யமான பருவம் இது.

 

குழந்தை வளர்ந்தவுடன் செய்யப் போகும் செயல்களுக்கெல்லாம் அடிப்படைகளை இப்போது இந்தப் பருவத்தில் தான் கற்கிறார்கள். முதலில் நீங்கள் முகத்தை கொஞ்சம் சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு, ‘என்ன இது? அம்மா எப்போ பார்த்தாலும் உன்னுடனேயே இருக்க முடியுமா? வேலை செய்ய வேண்டாமா? சமத்தா படுத்துண்டு இரு’ என்றவுடன் ஒரு நிமிடம் உங்களைப் பார்க்கும் குழந்தை. கொஞ்ச நேரம் முன்னால் நம்மை பார்த்து சிரித்த அம்மா இப்போது ஏன் வேறு மாதிரி பார்க்கிறாள் என்று முதலில் தடுமாறி, பிறகு ‘ஓ! அம்மாவிற்கு ‘மூட்’ சரியில்லை; எப்படி அம்மாவின் ‘ஐயோ பாவத்தை’ சம்பாதிப்பது என்று யோசிக்கிறது; உடனே அதுவும் தன் சிரித்த முகத்தை மாற்றிக் கொண்டு ‘அழ’ ஆரம்பிக்கிறது. உடனே ‘ஐயோ பாவம், உன்ன கோச்சுக்கல, அழாத சரியா?’ என்று ஐயோ பாவம் சொல்லுகிறீர்கள். அதுவும் குழந்தைக்குப் புரிகிறது. நம் முகம் கொஞ்சம் சிணுங்கினால் அம்மாவுக்குப் பொறுக்காது’ இதையே பிற்காலத்தில் உங்களை emotional blackmail செய்யவும் பயன்படுத்துகிறது.

ரேடியோவில் உங்களுக்குப் பிடித்த பாட்டு, அப்பாவின் குரல், அக்காவின் கொஞ்சல் என்று தன்னை சுற்றியிருக்கிற விஷயங்களையும், தான் கேட்கும் சத்தங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறது.

 

வாசலில் அழைப்பு மணி சத்தம் என்றால் யாரோ வருகிறார்கள்.

ஆட்டோ சத்தம் – அக்கா ஸ்கூல் கிளம்புகிறாள்;

கார்/ஸ்கூட்டர் சத்தம் – அப்பா அலுவலகம் கிளம்புகிறார் – அல்லது வருகிறார்;

குளியலறையில் நீர் கொட்டும் சத்தம்: அம்மா வந்து குளிச்சு விடப் போறா….அழலாமா, வேண்டாமா?

டாக்டர் மாமாவின் குரல் – ஊசி போடப் போகிறார்…! அழு, அழு…! ‘ஓ….’ என்று அழத் தொடங்குகிறது.

 

இந்த இடத்தில் எனது இன்னொரு அனுபவத்தையும் சொல்ல வேண்டும். நான் எப்போதுமே ‘சின்னஞ்சிறு கிளியே’ பாட்டைத்தான் தாலாட்டாகப் பாடுவேன். தொட்டிலில் பேரனைப் படுக்க விட்டு பாட ஆரம்பிப்பேன். என்னையே ‘குறுகுறு’ என்று பார்த்தபடி ஆடாமல் அசங்காமல் படுத்திருக்கும் குழந்தை. சில சமயங்களின் அதன் உதடுகள் லேசாக அசையும் ஏதோ மீதிப் பாட்டை அவனே பாடிவிடுவான் போல! எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.

 

‘இந்தப் பாட்டு குழந்தைக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு; பாரு நான் பாட ஆரம்பிச்சவுடனே ஆடாம அசையாம பார்க்கறது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தூங்கிடறது!’ என்று மகளிடம் பெருமையாகச் சொல்லுவேன். அங்கேயே உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் என் பிள்ளை சொல்லுவான்: ’பாவம்மா அது, வாயில்லா ஜீவன்! அதப் போட்டு பாடா படுத்தற ஒரே பாட்டையே பாடிப் பாடி. அதுக்கு மட்டும் பேச வந்திருந்தா பாட்டி ப்ளீஸ் பாடாதே, நானே தூங்கிடறேன்னு சொல்லும்’ என்பான். கூடவே இன்னொன்றும் சொல்வான்: ‘பெரியவனானப்பறம் உன்ன பழி வாங்காம விடமாட்டான் பாரு’

 

பல வருடங்கள் நான் இந்தப் பாட்டைப் பாடி அவனை தூங்கப் பண்ணியிருக்கிறேன்.

 

இங்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும்.

 

பல வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவரின் குழந்தையைப் பார்க்கப் போயிருந்தோம். குழந்தையை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் விட்டிருந்தார்கள். குழந்தையும் ஒருக்களித்துக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வரும் ஒளியை பார்த்துக் கொண்டிருந்தது. மனசெல்லாம் பதறிப் போய்விட்டது எனக்கு. ‘மிகவும் இளம் குழந்தை. தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் சக்தி வாய்ந்த ஒளி குழந்தையின் கண்களுக்கு நல்லதல்ல; இப்படிச் செய்யாதே என்று அந்தப் பெண்ணுக்குச் சொன்னேன். ‘அவன் அதைப் பார்த்துக் கொண்டு அழாமல் படுத்திருக்கிறான் ஆண்ட்டி’ என்றாள் அந்தப் பெண். ‘விளம்பரத்தில் வரும் இசை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்!’

 

இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா? குழந்தையின் கையில் கை பேசியைக் கொடுத்துவிடுகிறார்கள்! அதை வைத்துக் கொண்டு விளையாடுகிறதாம் குழந்தை. வேறு விளையாட்டு சாமானே கிடைக்கவில்லையா? இளம் குழந்தையாய் இருக்கும்போதே கைபேசியிலிருந்து வரும் கதிர் வீச்சுக்கு குழந்தை ஆளாக வேண்டுமா?

 

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் பார்த்தேன். குழந்தைக்கு கைபேசியில் ஏதோ பாட்டு போட்டு அதன் கையில் கொடுத்துவிட்டாள் அந்தப் பெண். அந்தக் குழந்தை அந்த அலைபேசியை வாயில் வைத்துக் கொள்ளுகிறது. கையில் வைத்துக் கொண்டு விளையாடுகிறது. ‘தூக்கிப் போட்டுடாதே, ரொம்ப காஸ்ட்லி போன்’ என்கிறாள் அந்தப் பெண்!

 

திடீரென்று யாரிடமிருந்தோ அழைப்பு வர அந்தச் சத்தம் கேட்டு அந்தக் குழந்தை வீறிட்டு அழத் தொடங்கி விட்டது. அலைபேசியை குழந்தையிடமிருந்து அந்தப் பெண்ணால் வாங்கவே முடியவில்லை. குழந்தை அத்தனை கெட்டியாக அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறது! அதன் கையிலிருந்து அதைப் பிடுங்கி, அதற்கு ஒருமுறை அந்தக் குழந்தை வீறிட…..!

அலை பேசியில் ஒருவித அதிர்வு வரும். இதுவும் குழந்தைகளுக்கு நல்லதல்ல;

ஏன் இளம் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? குழந்தையிடம் எதை வேண்டுமானாலும் கொடுப்பதா? அந்தப் பெண்ணின் அம்மா பேசாமல் அமர்ந்திருந்தார். ‘நான் எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். கேட்டால்தானே’ என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book