‘எங்க காலத்துல குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கண்ணையே திறக்காதுகள். இதென்ன பிறந்த அன்னிக்கே சுத்தி சுத்தி பார்க்கறது?’

என் முதல் பேரன் பிறந்த அன்று என் அம்மா ரொம்பவும் அதிசயமாகக் கேட்டாள். அவன் பிறந்தது இரவு 11 மணிக்கு மேல். வெளியே மழை கொட்டோகொட்டென்று கொட்டித் தள்ளியது. குழந்தையை ஒரு பச்சை வண்ணத் துணியில் சுற்றி என்னிடம் கொடுத்தார் மருத்துவர். உடலில் சிலிர்ப்பு! குழந்தையை வாங்கி மாப்பிள்ளையிடம் கொடுத்தேன். என் அம்மா, என் கணவர், என் மகன், மாப்பிள்ளை என்று நாங்கள் ஐவர் மட்டுமே இருந்தோம். புத்தம் புது மலரை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.

எங்கள் ஆனந்தத்தை புரிந்து கொண்டது போல குழந்தையும் கண்களை உருட்டி உருட்டி எங்களைப் பார்த்தது. தொட்டிலில் விட்டேன். என் பெண்ணைக் கவனித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் குழந்தையை சுற்றியிருந்த துணி விலகி இருந்தது. எல்லோருக்குமே ஆச்சரியம் தான்.

காலத்திற்குத் தகுந்தாற்போல குழந்தைகளும் வேகமாக வளருகிறார்களோ என்று தோன்றியது.

குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு மாதமாகப் பார்க்கலாம்.

முதல் மாதக் குழந்தை:

9 மாதங்கள்! எப்போது என்று காத்திருந்து காத்திருந்து நல்லபடியாகப் பிரசவமும் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன், மருத்துவர் அதைக் கொண்டு வந்து காண்பிக்கும்போது எந்த விதமான உணர்வும் இருக்காது. ஒரு மிகப்பெரிய பாரம் குறைந்தாற்போல இருக்கும். வருகிறவர்களும் போகிறவர்களுமாக குழந்தையைப் பற்றிய கவலை, பாசம் ஒன்றும் இருக்காது. ஆயாசம்தான் மிஞ்சும். உடல் அசதி போக நன்றாகத் தூங்கி எழுந்தவுடன் தான் குழந்தை பிறந்த செய்தியே மனதினுள் போகும்.

பெண் குழந்தை என்றால் ‘அப்பாவைப்போல’ என்பார்கள். ஆண் குழந்தையானால் ‘அம்மாவைப்போல’ என்பார்கள். மூக்கு, வாய், கண் என்று ஒன்றுமே தீர்க்கமாக இருக்காது.

உடம்பு மட்டும் சற்றுப் பூசினாற்போல இருக்கும்.

ஆனால் முதல் பத்து நாட்களுக்குள் அரை வற்று வற்றி பாதியாகிவிடும் குழந்தை. அதன் தோல் சுருக்கம் சுருக்கமாக காணப்படும். தோல் உரிந்து வரும். சில குழந்தைகளுக்கு பூனை மயிர் முதுகிலும், கழுத்திலும், தோள்பட்டையிலும் காணப்படும். கை விரல்கள் எல்லாம் நீள நீளமாக இருக்கும். கண்பார்வையும் நிலைபடாது. எங்கெங்கோ பார்க்கும். புருவம் இருக்காது. சில சமயம் ஒன்றரைக் கண் பார்வையாய் இருக்கும். இவை எல்லாமே நார்மல்தான். சில குழந்தைகளுக்கு கீழ் முதுகிலும், பிருஷ்ட பாகத்திலும் திட்டுத்திட்டாக நீல நிறமாயிருக்கும். குழந்தை வளர வளர இவையெல்லாம் சரியாகிவிடும்.

சில குழந்தைகளுக்கு சிவப்பு சிவப்பாக உடல் முழுவதும் காணப்படும். குழந்தையை நீராட்டும்போது மருத்துவர் கொடுக்கும் திரவத்தை நீரில் சில துளிகள் போட்டு கலந்துவிட்டு நீராட்டினால் நாளடைவில் சரியாகிவிடும்.

குழந்தை, பிரசவத்தின்போது மிகக் குறுகலான பாதை வழியாக வந்திருப்பதால் அதன் தலை சற்று கோணலாக இருக்கும். சில வீடுகளில் குழந்தையின் தலையை பிடித்துப் பிடித்து விடுவார்கள். தலையை சரி செய்கிறார்களாம். இப்படியெல்லாம் செய்யாமலேயே குழந்தையின் தலை சரியாகிவிடும்.

இன்னாரைபோல என்று சொல்லும்படியாக இருக்காது. குழந்தை வளர வளர அதன் ஜாடையும் மாறிக்கொண்டே வரும். சப்பை மூக்கு, முயல் காது என்று கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும். சில குழந்தைகளுக்கு தலையில் நிறைய கூந்தல் இருக்கும். சிலவற்றிற்கு ஒன்றுமே இருக்காது.

தலையில் நிறைய கூந்தல் இல்லாத குழந்தைகளுக்கு உச்சி குழி நன்றாகத் தெரியும். மண்டை ஓட்டின் எலும்புகள் எல்லாம் வளர்ந்து கொண்டிருப்பதால் அந்த இடம் மெத்தென்று இருக்கும் அந்த இடத்தில் நாடித்துடிப்பும் தெரியும். அங்கு மெத்தென்று இருந்தாலும் கான்வாஸ் மாதிரியான தோல் மூடியிருக்கும். அதனால் அடிபட்டு விடுமோ என்றெல்லாம் பயப்பட வேண்டாம்.

சில குழந்தைகளுக்கு பிறந்தவுடன் இருக்கும் தலைமுடி சிறிது நாட்களில் உதிர்ந்துவிடும். இன்னும் சில குழந்தைகளுக்கு பின்பக்கம் ஒன்றும் இருக்காது. முன் மண்டையில் மட்டும் துளி கூந்தல் இருக்கும்.

ஆனால் எப்படி இருந்தாலும் நம் குழந்தை நமக்கு அழகுதான்! காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு!

ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அழத் தெரியும்! தனக்கு அசௌகரியம் என்றாலும் அதை அழுகையின் மூலம் உணர்த்தத் தெரியும். குழந்தையின் ஒரே ஆயுதம் அழுகை!

குழந்தையின் தொப்புள்கொடியை துண்டித்து எடுத்த இடத்தில் ஒரு கிளிப் போட்டு வைப்பார்கள். அந்த இடம் மட்டும் எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்தும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பதினைந்து இருபது நாட்களுக்கு நன்றாக ஆறி அதுவே விழுந்துவிடும்.

 

பிறந்த குழந்தைக்கு அதன் அம்மாவின் குரல் – கருவிலிருக்கும் போதே கேட்டுக் கேட்டுப் பழகியிருப்பதால் – நன்றாகத் தெரியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன. சில குழந்தைகள் நிறைய நேரம் தூங்கும். சில கொஞ்சம் தான் தூங்கும். சில இரவெல்லாம் அம்மாவைத் தூங்க விடாமல் படுத்திவிட்டு பகலில் ஹாயாகத் தூங்கும். சில அம்மாவைப் படுத்தவே படுத்தாது. ஒரு குழந்தையைப் போல ஒரு குழந்தை இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்!

குழந்தைக்குக் தெரிந்த இன்னொரு விஷயம்: அம்மாவின் தொடுகை.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி. குழந்தையை எடுத்துக் கொள்ளவே தெரியாது. எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் ஊஹும்! இரண்டு கைகளாலும் குழந்தையின் தலையை மட்டும் பிடித்துக் கொள்வாள். முயலைத் தூக்குவது போல! குழந்தையின் கை, கால் எல்லாம் காற்றில் ஆடும்.

ஒருமுறை நான் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது அவள் குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம்தான். அதற்குத் தெரிந்துவிட்டது. நம்மை யாரோ வெளியாள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. சிணுங்க ஆரம்பித்தது. தொட்டிலில் விட்டு ஆட்டினேன். எதற்குமே அதன் சிணுங்கல் ஓயவில்லை. அதன் அம்மா வந்தாள். கோணாமாணா என்று எடுத்தாள். அவள் கைபட்டவுடனே ‘பட்’டென்று சிணுங்கல் நின்றது! அம்மாவின் ‘டச்!’

குழந்தையின் பார்வை முதல் மாதத்தில் 8 லிருந்து 10 அங்குலம் தூரத்தில் இருக்கும் பொருட்களை மட்டும் தான் பார்க்க முடியுமாம். அதாவது அம்மாவிடம் பால் குடிக்கும்போது அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியும்.

இப்போது புரிகிறதா, நாம் எல்லோரும் எத்தனை வயதானாலும் ஏன் அம்மா அம்மா என்கிறோம் என்று?

இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்ல வேண்டும். ஒரு குழந்தைக்கு தலை சீக்கிரம் நிற்கும். ஒரு குழந்தைக்கு நான்கு ஐந்து மாதங்களானாலும் கொஞ்சம் ஆடியபடியே இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் ஒவ்வொரு மாதிரி.

என் உறவினர் ஒருவரின் குழந்தை நாற்பது நாட்களில் கவிழ்ந்து கொண்டுவிடும். தலை நிற்காததால் தலை தரையில் முட்டும். கைகளையும் எடுக்க வராது. பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பாவம் அழும்!

மருத்துவரிடம் கேட்டபோது உடல் மிகவும் தக்கையாக இருப்பதால் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கொஞ்சம் திரும்பினாலும் நிலை தவறி குப்புறக் கவிழ்ந்துவிடுகிறது என்றார். இரண்டு பக்கமும் தலையணை வைத்து அந்தக் குழந்தை கவிழாமல் பார்த்துக் கொள்ளுவோம். இதை குழந்தையின் வேக வளர்ச்சி என்று சொல்ல முடியாது.

சென்ற வாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் மருத்துவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி: ஏன் சில குழந்தைகள் 10 வயது ஆனாலும் இரவில் படுக்கையை நனைக்கின்றன?

மருத்துவர் சொன்னார்: ‘குழந்தைகளுக்கு சிறுநீரை அடக்கும் தன்மை நிதானமாகத்தான் ஏற்படும். அங்குள்ள நரம்புகளின் வளர்ச்சி தாமதமானால் ‘படுக்கையை நனைப்பதும்’ தொடரும். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது இந்த வளர்ச்சி. ஒவ்வொரு குழந்தைக்கும் வயது வித்தியாசப்படும். ஆண் குழந்தைகளில் சுமார் 5%, பெண் குழந்தைகளில் சுமார் 7% பத்து வயதுக்குப் பிறகும் படுக்கையை நனைக்கின்றன.

இங்கு இதைச் சொல்லக் காரணம். அவங்க வீட்டுக் குழந்தை குப்புறப் படுக்கிறாளாம்; இவங்க வீட்டுக் குழந்தை சீக்கிரமே தவழ ஆரம்பிச்சுட்டாளாம் என்றெல்லாம் யார் யார் குழந்தைகளுடனோ உங்கள் குழந்தையை ஒத்திட்டுப் பார்க்காதீர்கள். குழந்தை நிதானமாக வளரட்டும். எல்லாவற்றிற்கும் அவசரம் வேண்டாம்.

அடுத்த வாரம் 2, 3 மாதக் குழந்தையைப் பார்ப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book