போன சனிக்கிழமை வழக்கம்போல திரு சுகி சிவம் அவர்களின் பேச்சைக் கேட்க உட்கார்ந்தேன். ‘எழுத்தாளர் கு. அழகிரிசாமி பற்றி இன்றைக்குப் பேசலாம்’, என்று ஆரம்பித்தார் சுகி சிவம்.

‘மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது எழுத்துக்கு ஒரு உதாரணம்: ‘சீதை நடந்தாள்; அழகாயிருந்தது. சூர்பனகை அழகாக நடந்தாள். கம்பன் இந்த இரண்டு இடத்திலும் ஒரே வார்த்தையை பயன்படுத்துகிறார். சீதை நடப்பதற்கும், சூர்பனகை நடப்பதற்கும் எப்படி ஒற்றுமை சொல்லமுடியும்? கு. அழகிரிசாமி சொல்லுகிறார்: சீதை நடப்பதே அழகு; ஆனால் சூர்பனகை அழகாக நடக்க வேண்டும் என்று நினைத்து நடந்தாள். சீதைக்கு அழகாக நடக்க வேண்டுமென்பதில்லை; அவள் நடப்பதே அழகு. பாசாங்கு தேவையில்லை. ஆனால் சூர்பனகையோ தன் மேல் நல்ல அபிப்பிராயம் வர வேண்டும் என்று அழகாக நடந்தாள். அதில் பாசாங்கு, நாடகம் இருந்தது’ இதைச் சொல்லிவிட்டு சுகி சிவம் ஒரு மிக அழகான உதாரணம் சொன்னார். குழந்தைகள் நம்மிடம் மழலையில் பேசும். நாமும், ‘தச்சி மம்மு சாப்பிடறயா?’ என்று குழந்தையைப்போலவே கேட்போம். எத்தனைதான் முயன்றாலும் நம்மால் குழந்தையைப் போல பேச முடியாது. அவர்களுக்கென்று தனி உலகம். அதில் நாம் நுழைய வேண்டுமானால் அவர்களாகவே மாற வேண்டும்.

ஜென் துறவி ஒருவர் ஒரு சமயம் சில குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார். துறவி ஒளிந்து கொண்டார். எங்கே? ஒரு வைக்கபோரின் உள்ளே. குழந்தைகளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இரவு ஆகிவிடவே, குழந்தைகள் தேடித் தேடிக் களைத்து வீட்டிற்குச் சென்று விட்டன. துறவி அங்கேயே உட்கார்ந்திருந்தார். காலையில் பசு மாட்டிற்கு வைக்கோல் போட வந்தவர் வைக்கோல் பிரிகளை எடுக்கும்போது, உள்ளே துறவியைப் பார்த்தார் : ‘அட! நீங்க இங்க என்ன பண்றீங்க?’ என்றார் ஆச்சரியத்துடன். ‘உஷ்! சத்தம் போடாதே, குழந்தைகள் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள்!’ என்று துறவி வாயின் மேல் விரலை வைத்துச் சொன்னாராம்! துறவியைப் போல நம்மால் குழந்தையின் நிலைக்குப் போக முடியுமா?’ சுகி சிவம் முடித்தார்.

சில வாரங்களாக நம் செல்வ களஞ்சியமே மிகவும் சீரியஸ் ஆக குழந்தைகளுக்கு வரும் நோய்களைப் பற்றிய விவாதங்களில் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த வாரம் கொஞ்சம் லைட் ஆக சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுதுகிறேன். இந்த விஷயங்களும் குழந்தைகளைப் பற்றியது என்பதாலும், நான் ரசித்த விஷயங்களை உங்களிடம் பகிர ஆசையாக இருந்ததாலும் இந்த வாரம் இப்படி.

உங்கள் ரசனைக்கு இதோ இன்னொரு கவிதை: எழுதியவர் தஞ்சாவூர் கவிராயர். தனது முகநூல் பக்கத்தில் இதைப் பகிர்ந்திருந்தார் திரு சுந்தர்ஜி பிரகாஷ். அவரது முன் அனுமதியுடன் இந்த கவிதையை இங்கு பகிருகிறேன்:

 

வெறும் கோப்பை – தஞ்சாவூர்க்கவிராயர்.

=================================

வெறும் கோப்பையை நீட்டி

காப்பி குடிக்கச் சொல்கிறது

என் குழந்தை.

வாங்கிக் குடிக்கிறேன்.

 

இன்னும் கொஞ்சம் குடி

என்கிறது.

மீண்டும் கொஞ்சம்

குடிக்கிறேன்.

 

வாயைத் துடைக்க

மறந்துவிட்டாயே?

என்கிறது.

துடைத்துக் கொள்கிறேன்.

 

கோப்பையை யார்

கழுவி வைப்பது?

அடுத்த கணை

பறந்துவருகிறது.

கழுவி வைக்கிறேன்.

பார்த்து-பார்த்து.

உடைத்து விடாதே

என்கிறது குழந்தை.

 

வெறும் காப்பி குடிப்பதோடு

நின்றுவிடுகிறேன் நான்.

காப்பி குடித்தலின்

ஆன்மாவைக் கண்டுகொள்கிறது

என் குட்டிக் குழந்தை.

 

நம் எல்லோர் வீட்டிலும் இதைப்போல ஒரு குட்டிக் குழந்தை இருக்கிறது. நாம் சாதாரணமாகச் செய்யும் ஒரு செயலில் ஆன்மாவைக் கொண்டுவர குட்டிக் குழந்தையால் மட்டுமே முடியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book