‘தீபாவளி அன்னிக்கு நலங்கு இடணும். வலது காலைக் காண்பி என்றதற்கு எங்க ஸ்ரீநிகேத் கேக்கறான்: ‘ஏன் வலது கால்?’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்!’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்!) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா…?!’ எங்கள் பக்க்கத்து வீட்டு ரங்கராஜன் இதைச் சொன்னபோது எல்லோருமே அந்தக் குட்டிப்பையனின் புத்திக் கூர்மையை ரசித்தோம். இந்தக் குழந்தைக்கு சற்று நிதானமாகத் தான் பேச வந்தது. அப்போது பெற்றோர் ரொம்பவும் கவலைப்பட்டனர். இப்போது ‘ரொம்ப பேசறான்’ என்கிறார்கள்!

 

பொதுவாக பெண் குழந்தைகள் சீக்கிரம் பேசுவார்கள். ஆண் குழந்தைகள் சற்றுத் தாமதமாகத் தான் பேசுவார்கள். சில சமயங்களில் வேறு விதமாகவும் இருக்கலாம். குழந்தையின் வளர்ச்சியில் பேசுவதும் ஒரு மைல்கல் தான். இரண்டு வயதில் சில குழந்தைகள் நன்றாக மழலை இல்லாமல் பேசும். சில குழந்தைகள் 3 வயதிலும் மழலையுடன் பேசும்.

 

குழந்தை பிறந்தவுடன் அதன் பேச்சு அழுகைதான். இரண்டு மூன்று மாதங்களில் ‘ஆ….’ ஊ…..’ என்று சில சத்தங்களை எழுப்பும். இந்த சத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளாக மாறி அம்மா அப்பா என்று சொல்லும்போது நமது பரவசத்திற்கு எல்லை எது?

 

முதலில் எல்லாக் குழந்தைகளும் அம்மா பேசுவதை அப்படியே திருப்பி சொல்லுகிறது. ‘மம்மு சாப்படலாமா?’ என்று அம்மா கேட்டால் குழந்தையும், ‘மம்மு சாப்படலாமா?’ என்று பதில் சொல்லுகிறது. ‘சாப்பிடலாம்’ என்று சொல்ல சிறிது காலம் ஆகிறது.

 

அம்மாவின் கருப்பையிலிருக்கும்போதே குழந்தை மொழியைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அம்மாவின் இதயத் துடிப்பை அறிவதுபோலவே அம்மாவின் குரலையும் அறிகிறது குழந்தை. ஒரு குழந்தை இரண்டு மொழிகள் பேசப்படும் சூழ்நிலையில் வளர்ந்தால் இரண்டு மொழிகளையும் ஒரே நேரத்தில் கற்கிறது.

 

முதலில் ‘மா… தா……..’ என்று ஒரு எழுத்தில் ஆரம்பிக்கும் குழந்தையின் பேச்சு மாதங்கள் செல்லச் செல்ல ம்மா..மா.. தாத்…..தா என்று முன்னேறுகிறது. நாம் பேசுவதிலிருந்துதான் குழந்தை கற்கிறது தன் மொழியை. அதனால் தான் தாய்மொழியை யார் உதவியும் இல்லாமல் நாமே கற்றுப் பேசவும் ஆரம்பிக்கிறோம்.

எந்த ஒரு மொழியையும் கற்கவேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைக் காதால் கேட்கவேண்டும். கேட்டதை திருப்பி சொல்ல வேண்டும். பிறகு நாமே வாக்கியங்களை அமைத்துப் பேசுவது. கடைசியாகத்தான் எழுத்துக்களை கற்கவேண்டும். ஆங்கில மொழி பலருக்கு பேச கடினமாக இருக்கிறது. அதற்கு காரணம் முதலில் எழுத கற்பதுதான். அர்த்தமே புரியாமல் ‘A for Apple’ என்று படிக்கிறோம்!

 

நாம் பேசுவதைப் பார்த்து குழந்தை பேசக் கற்கிறது என்று சொன்னேன், இல்லையா? காதால் கேட்பது மட்டுமல்ல; நம் வாயசைவு முகத்தின் மாற்றங்கள், கண்ணில் தோன்றும் அசைவுகள் என்று மொத்தத்தில் நம் உடல் மொழியையும் கற்கிறது. அதனால்தான் சில குழந்தைகள் பேசும்போது ‘அப்படியே அம்மா மாதிரி இருக்கிறது’ அல்லது ‘அப்பாவை உரித்து வைத்திருக்கிறது’ என்று சொல்லுகிறோம்.

 

ஒரு வயதில் குழந்தை ஒற்றைச் சொல்லில் நமக்கு சகலத்தையும் புரிய வைக்கிறது. இந்த வயதில் குழந்தையை பார்த்தால் அதன் வாய் அசையும்; கூடவே ஒரு விரல் நீளும்; தலை அசையும்; கண்ணில் ஒரு உணர்ச்சி என்று குழந்தையின் முழு உடலும் பேசும். வேண்டாம் என்று சொல்லும்போது தலையை இருபக்கமும் அசைக்கிறது. வேண்டும் என்றால் தலையை மேலும் கீழும் அசைக்கிறது. அடம் பிடிக்கும்போது கால்களை உதைத்துக் கொண்டு தன் விருப்பத்தை சொல்ல நினைக்கிறது. எடுத்துக் கொள்ள வேண்டுமா, இருகைகளையும் தூக்கி காட்டுகிறது.

 

ஒரு வயதிலிருந்து இரண்டு வயதுக்குள் ஒரு குழந்தை குறைந்தது 50 வார்த்தைகள் பேசுகிறது. பேசுவதைவிட அதிகமாக நாம் சொல்வதை புரிந்து கொள்ளுகிறது. தினமும் நாம் பேசுவதிலிருந்து புதிய வார்த்தைகளையும் கற்கிறது குழந்தை. நாம் கொஞ்சம் நிதானித்துப் பேசவேண்டும்.

 

குழந்தைகளுக்கு ‘நான்’ என்று சொல்வதற்கு சிறிது காலம் ஆகும். ‘நான் செய்கிறேன்; எனக்கு வேண்டும்’ என்பதெல்லாம் குழந்தைக்கு சற்று கடினமான வாக்கிய அமைப்புகள். அதற்கு பதில் ‘பாப்பா தூங்கறேன்’, பாப்பாவுக்கு வேண்டும்’ என்று நீங்கள் எப்படி உங்கள் குழந்தையைக் கூப்பிடுகிறீர்களோ ‘பாப்பா’, ‘சின்னு’, ‘குட்டி’ – நான் என்பதற்கு பதில் – பயன்படுத்தும்.

 

இரண்டு வயது முடிந்தவுடன் சில குழந்தைகள் வெகு வேகமாக பேச ஆரம்பிக்கும். ‘மூன்றாவது வயதில் மூலையில் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் வரும்’ என்பார்கள் நம் பாட்டிமார்கள்.

குழந்தையின் பேச்சுத் திறனுக்கு பெற்றோரின் பங்கு என்ன?

• நிறைய பேசுங்கள். இரண்டு மூன்று மாதங்களிலேயே ‘ஊம்….சொல்லு’, ‘ங்கு…. சொல்லு’ என்று பேசத் தூண்டலாம். குழந்தையுடன் இருக்கும் சமயங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் குழந்தையிடம் சொல்லுங்கள். இது என்ன, அது என்ன என்று கேட்டு பொருட்களின் பெயர்களைச் சொல்லுங்கள். பாட்டுப் பாடுங்கள்.

• ஒரு வயது குழந்தையுடன் நீங்களும் அதைபோலவே மழலையில் பேசலாம். மூன்று வயதுக் குழந்தையுடன் நீங்கள் மழலை பேசாதீர்கள். பள்ளிக்குப் போனால் ஆசிரியரின் மொழி குழந்தைக்கும், குழந்தை பேசும் மழலை ஆசிரியருக்கும் புரியாமல் போகும் அபாயம் இருக்கிறது.

• புத்தகங்கள் படித்துக் காட்டுங்கள். நிறைய புது வார்த்தைகள் குழந்தை கற்றுக் கொள்ள இது உதவும். இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைக்கு புத்தகத்திலிருக்கும் கதையை படித்து அதற்கு புரிவதுபோல சொல்லாம். பிறகு புத்தகத்திலிருப்பதை படித்துக் காட்டுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இதனால் வாக்கிய அமைப்புகளை குழந்தை தானாகவே கற்கும்.

• குழந்தை பேசும்போது கேளுங்கள்: இது மிகவும் முக்கியம். ஒரு கண், ஒரு காது தொலைக்காட்சிப் பெட்டியின் மேல். இன்னொரு கண், இன்னொரு காது குழந்தையின் மேல் என்று இருக்காதீர்கள். நீங்கள் பேசும்போது கவனிக்கவில்லை என்றால் உங்கள் கணவர் மேல் உங்களுக்கு எத்தனை கோவம் வரும், அதுபோலத்தான் குழந்தையும். குழந்தை தானே என்று நினைக்காதீர்கள். இப்போது நீங்கள் எப்படி குழந்தையை உருவாக்குக்கிறீர்களோ, அப்படித்தான் பிற்காலத்தில் குழந்தை உருவாகும்.

• சிலசமயங்களில் குழந்தை அவசரமாக அல்லது வேக வேகமாகப் பேசும்போது வாய் திக்கலாம். இதற்குக் கவலை வேண்டாம். குழந்தையை நிதானமாகப் பேசச் சொல்லுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book