‘எத்தனை தடவை சட்டையை மாற்றுவது? ஜொள்ளு கொட்டி, ஜொள்ளு கொட்டி சட்டை நனைந்துவிடுகிறது’ என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்ளுவார்கள்எல்லாக் குழந்தைகளுக்குமே இது பொதுவானது என்றாலும் சில குழந்தைகள் அதிகமாகவே ஜொள்ளு விடுவார்கள். சட்டை நனையாமல் இருக்க வேண்டுமென்றால் மேலே பிப் (bib) கட்டலாம்.

 

என் முதல் பேரன் மூன்று மாதத்திலிருந்தே ஜொள்ளு விட ஆரம்பித்துவிட்டான். எத்தனை பிப் (Bib) கட்டினாலும் திரும்பிப் பார்ப்பதற்குள் நனைந்து விடும். அதனால் அவனை நான் ஜொள்ளேஷ், ஜொள்ளப்பா, ஜொள்ளண்ணா, ஜொள்ளையா, ஜொள்ராஜ், ஜொள்ளுகுமார் என்றெல்லாம் பெயர் வைத்து அழைத்துக் கொண்டிருந்தேன்.

 

இந்த ஜொள்ளு பற்றி சொல்லும்போது எனக்கு ‘Baby’s Dayout’ படம் நினைவுக்கு வரும். வில்லன்கள் கடத்திக் கொண்டு போகும் குழந்தை மேலிருந்து கீழே வில்லனைப் பார்த்து சிரிக்கும்போது அதன் வாயிலிருந்து ஜொள்ளு கீழே விழும். ‘என்னைப் பார்த்து சிரிக்கிறாயா?’ என்று வில்லன் கறுவிக்கொண்டே அதைப் பிடிக்க வருவான். கீழே இருக்கும் ஜொள்ளுவில் கால் வைக்க, ‘சர்’ ரென்று வழுக்கி விழுவான். ஹா…..ஹா……!

 

உண்மையில் இந்த ஜொள்ளு வழக்கமான உமிழ்நீர் போலில்லாமல், சற்று அடர்த்தியாக கொழ, கொழ என்றுதான் இருக்கும். குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு நாம் அதன் கன்னத்தில் முத்தம் கொடுக்கும்போது குழந்தை நம் மேல் விடும் ஜொள்ளு அமிர்தம்! பொக்கை வாயுடன் ஜொள்ளு வழியச் சிரிக்கும் குழந்தை சொர்க்கம்! எத்தனைமுறை எத்தனைக் குழந்தைகளைப் பார்த்தாலும் இந்தப் பருவம் அலுக்கவே அலுக்காது.

 

நம்மூரில் குழந்தைகளுக்கு ஜொள்ளு நிறைய வந்தால் சீக்கிரம் பேச்சு வரும் என்பார்கள். ஆனால் உண்மையில் நமக்கு தொல்லையாக இருக்கும் இந்த ஜொள்ளு குழந்தைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்.

 

குழந்தை ஏன் ஜொள்ளு விடுகிறது?

முதல் காரணம்: பல் முளைத்தல்.

குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதத்தில் தானே பல் வரும், அதற்காக மூன்றாவது மாதத்திலேயே ஜொள்ளா என்று கேட்பவர்களுக்கு: பல் வெளியே வந்து நம் கண்ணுக்குத் தெரிவது ஆறு அல்லது ஏழு மாதங்களில். ஆனால் உள்ளே இருக்கும் பல் மூன்று மாதத்திலிருந்து மெதுவாக வளர ஆரம்பிக்கிறது.

 

ஈறுகளின் உள்ளிருக்கும் பல் மெதுவாக மேல்நோக்கி வளர ஆரம்பிப்பதால், உமிழ் நீர் உற்பத்தி அதிகமாகிறது. நம்மைப்போல் குழந்தைக்கு விழுங்கத் தெரியாததால் அதிகமான உமிழ்நீர் ஜொள்ளாக வழிகிறது.

 

இரண்டாவது காரணம்:

ஜொள்ளு வருவது குழந்தையின் செரிமான உறுப்புகள் வளர்ந்திருப்பதற்கான அடையாளம். குழந்தையின் வயிற்றில் இருக்கும் அமிலங்களை சமனப்படுத்துகிறது இந்த அதிகப்படியான உமிழ்நீர். குழந்தையின் குடல் அகவுரையை (intestinal lining) வளரச்செய்யவும் இந்த உமிழ்நீர் உதவுகிறது.

 

மூன்றாவது காரணம்:

இந்த ஜொள்ளுவில் இருக்கும் சில நொதிகள் (enzymes) குழந்தை திட உணவை செரிக்க உதவுகின்றன. நாம் திட உணவை குழந்தையின் வாயில் வைத்தவுடன் இந்த நொதிகள் அந்த உணவுடன் கலந்து அப்படியே குழந்தையின் தொண்டையில் வழுக்கிக் கொண்டு போக உதவுகின்றன. பற்கள் வளர்ந்து குழந்தையால் கடிக்கத் தெரியும் வரை இந்த முறை தொடர்கிறது.

 

ஜொள்ளு வருவதுமட்டுமல்ல; ஈறுகள் சற்று தடித்து இருப்பதும், குழந்தைக்கு பற்கள் வர இருப்பதற்கான அறிகுறிகள். தன்னுடைய மேல், கீழ் ஈறுகளையும் குழந்தை கடித்துக் கொள்ளும். இதுவும் பல் வர ஒரு அறிகுறி. அம்மாவின் தோள்பட்டையை கடித்து கடித்து நமநமக்கும் ஈறுகளுக்கு வேலை கொடுக்கும் குழந்தை. சில குழந்தைகள் கையில் கிடைத்ததையெல்லாம் வாயில் வைத்துக் கொண்டு கடிக்கும்.

 

சரி, குழந்தை ஜொள்ளு விட ஆரம்பித்துவிட்டது இன்னும் சில மாதங்களில் பற்கள் வந்துவிடும் என்று நாம் ஆசுவாசபடுத்திக் கொள்ள முடியாது. பல மாதங்களுக்கு ஜொள்ளு விட்டுக் கொண்டே இருக்கும். பல்லு மட்டும் வராது. இன்னும் சில குழந்தைகளுக்கு இந்த மாதிரியான எந்த அறிகுறியுமே இல்லாமல் பல் வந்திருக்கும். அம்மாவுக்கு இது ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். ஒரு நாள் காலை எழுந்தவுடன், குழந்தை சிரிக்கும். அதன் வாயில் புதிதாக வந்திருக்கும் முளைக் கீற்றுப் போலிருக்கும் ஒற்றைப் பல்லைப் பார்த்துவிட்டு ‘ஆ! குட்டிக்கு பல்லு வந்துடுத்து!’ என்று ஆனந்த கூத்தாடுவாள்.

 

ஜொள்ளு விடுவது, பற்கள் வருவது கூட குழந்தைக்கு குழந்தை மாறும். (அப்பா ‘ஜொள்ளு பார்ட்டி’யாக இருந்தால் குழந்தையும் அப்படியே இருக்குமா என்ற கேள்வி ஆராய்ச்சிக்குரியது!) சில குழந்தைகளுக்கு மேல் இரண்டு பற்கள் முதலில் வரும். சிலவற்றிற்கு கீழ் இரண்டு பற்கள் வரும். இத்தனை நாள் பொக்கை வாயாக இருந்த குழந்தையின் அழகு சிரிப்பு இந்த இரண்டிரண்டு பற்களினால் மேலும் கூடும்.

 

சீக்கிரம் பல் வந்தால் குழந்தை புத்திசாலி என்பதோ தாமதமாக பற்கள் வந்தால் கொஞ்சம் பின்தங்கி இருக்கும் என்றோ கிடையாது. இதுவும் பரம்பரையாக வருவதுதான். சராசரியாக ஒரு குழந்தைக்கு முதல் இரண்டரை ஆண்டுக்குள் 20 பற்கள் முளைத்து விடுகின்றன. இந்த காலம் முழுவதுமே பற்கள் முளைக்கும் பருவமாக இருக்கும்.

 

பல் முளைப்பதற்கு முன்னால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடாது; வாந்தி, பேதி வரலாம். இவையெல்லாவற்றிற்கும் காரணம் பல் முளைத்தல் அல்ல; குழந்தை நகரத் தொடங்கும் போது கையை வாயில் வைத்துக் கொள்வது, நமநமக்கும் ஈறுகளுக்கு கடிக்க கையில் கிடைத்ததையெல்லாம் வாயில் வைத்து கடிப்பது போன்றவைதான்.

 

சில குழந்தைகளுக்கு இந்தப் பருவத்தில் கொஞ்சம் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தாற்போல இருக்கும். அதிக ஜுரம், பேதி, வாந்தி இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book