இந்த வாரம் குழந்தையின் சுகாதாரம் பற்றிப் பார்ப்போம்:

குழந்தை பிறந்தவுடன் வரும் உறவினர்கள் கூட்டத்தை முதலில் சற்று தூர இருக்கச் சொல்லவேண்டும். எல்லோருக்கும் குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்ச வேண்டும் என்று இருக்கும். தப்பில்லை. ஒவ்வொரு குழந்தையும் நமக்குப் புதிதாகத்தான் தோன்றும்.

என் உறவினர் ஒருவர் குழந்தையைப் பார்க்க வெறும் கையுடன் வருவார்களா என்று சொல்லிக் கொண்டு இரண்டு அழுக்கு ஒரு ரூபாய் காசுகளை குழந்தையின் ஒவ்வொரு கையிலும் கொடுப்பார்! இவரைக் கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். குழந்தையைப் பார்க்க வரும் சிலர் ஒரு அழுக்கு காகிதத்தில் கொஞ்சம் சர்க்கரையை மடித்து எடுத்துக் கொண்டு வருவார்கள். பிரசவித்த தாயின் வாயிலும் சர்க்கரை போட்டு, குழந்தையின் வாயிலும் இத்தனை போடுவார்கள் – நிச்சயம் இது தவறு. பிரசவித்த தாயும், அவளுடன் கூட உதவிக்கு இருப்பவர்களும் கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.

புத்தம்புதிதாக மலர்ந்திருக்கும் அந்தக் குழந்தை மலரை அழுக்குப் படுத்த வேண்டாம், ப்ளீஸ்! அதுவும் முதல் நாளே!

சிலர் குழந்தையைக் கையில் எடுத்தவுடன் ‘மொச்’ ‘மொச்’ என்று கன்னங்களில் முத்தமிட ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் கிள்ளிக் கிள்ளி முத்தமிடுவார்கள். இது கொஞ்சம் ஓவர் தான்! அவரவர்கள் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். இன்னொருவர் குழந்தைக்கு நம்மால் இடையூறு விளைவிக்கக் கூடாது. இந்த மாதிரி ஆசாமிகளை பிரசவித்த பெண் இருக்கும் அறைக்குள் விடவே விடாதீர்கள். அப்படியே விட்டாலும் குழந்தையை தொட அனுமதிக்காதீர்கள்.

இந்த மாதிரி சிலர் நடந்து கொள்வார்கள் என்று தானோ என்னவோ தனி அறையில் பெண்ணையும் குழந்தையையும் இருக்கச் சொன்னார்கள் முன் காலத்தில் என்று தோன்றுகிறது.

சிலருக்குக் குழந்தையை எடுத்துக் கொள்ளத் தெரியாது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எடுத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். இவர்களிடமும் குழந்தையைக் கொடுக்காதீர்கள். ரொம்பவும் கேட்டால் உட்காரச்சொல்லி அவர்கள் மடியில் குழந்தையை விடுங்கள். குழந்தைக்குத் தலை நிற்கும் வரை வெளியார்கள் யாரிடமும் குழந்தையைக் கொடுக்காமல் இருப்பது நலம். யாரும் குழந்தையை தொடக்கூடாது என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிடுங்கள்.

எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என் பெரியம்மா சொல்லிக் கொடுத்தார். ‘உன் மூக்கைக் குழந்தையின் கன்னத்தில் லேசாக வைத்து அதன் வாசனையை முகர்ந்து பார். பிறகு உன் முகத்தை நகர்த்திக் கொண்டு காற்றில் முத்தம் கொடு’ என்று. இன்றுவரை எந்தக் குழந்தையைக் கையில் எடுத்தாலும் இதேபோலத்தான் முத்தம் கொடுப்பேன்.

இப்போதெல்லாம் மருத்துவ மனைகளிலே கை சுத்தீகரிப்பு திரவம் (Hand sanitizer) வைத்திருக்கிறார்கள். அதை கைகளில் தடவிக் கொண்டுதான் குழந்தையின் அருகில் போக வேண்டும். அதேபோல வீடுகளிலும் வைக்கலாம்.

குழந்தைக்கு காலை மாலை உடை மாற்றுங்கள். குளிர் பிரதேசமாக இருந்தால் கெட்டியான குளிர் தாங்கும் உடைகளும், வெயில் பிரதேசமாக இருந்தால் காற்றோட்டமான பருத்தில் ஆடைகளையும் அணிவியுங்கள். இப்போதெல்லாம் பிறந்த குழந்தைக்கே டயபர் கட்டிவிடுகிறார்கள். அதனால் முன் காலத்தைப்போல குழந்தைதுணி தோய்க்கும் வேலை இல்லை.

வெளியே போகும்போது மட்டும் டயபர் போடலாம். வீட்டில் இருக்கும்போது இந்தப் பழக்கம் வேண்டாம். டயபர் தொற்று வர வாய்ப்பிருப்பதால் தவிர்க்கவும். இரவு சிலர் குழந்தைக்கு டயபர் போட்டு விடுவார்கள். குழந்தை ஒவ்வொரு முறை ‘மூச்சா’ போகும்போதும் எழுந்து துணியை மாற்றுவது சிரமம் என்ற காரணத்தால்.

அந்தக் காலத்தில் ஆண் குழந்தைகள் ‘மூச்சா’ போய்விட்டு அதைக் கைகளால் தட்டித் தட்டி விளையாடினால் பித்ருக்கள் சந்தோஷப் படுவார்கள் என்று சொல்வார்கள். இதைவிட இன்னொரு விஷயம் – டயபர்கள் வராத காலத்தில் நடக்கும் – குழந்தை டூ-பாத்ரூம் போய்விட்டு அதைக் கையில் எடுத்து உடம்பெல்லாம் பூசிக் கொண்டு நிற்கும். குழந்தையை அலம்பி சுத்தம் செய்வதற்குள் அம்மாவிற்கு ‘ஏனிந்த வாழ்க்கை?’ என்று வெறுத்தே போய்விடும். இப்போது எல்லாமே டயபருக்குள் அடக்கம்!

அம்மா சாப்பிடும்போது டூ-பாத்ரூம் போகாத குழந்தைகளே கிடையாது! டயபர்களின் புண்ணியத்தில் இப்போது அம்மாக்கள் கவலையில்லாமல் சாப்பிடலாம்!

ஒரு வேளை டயபர் பயன்படுத்தாத தாய்மார்கள் என்றால் குழந்தையின் அடியில் போடும் துணிகளை நன்றாக துவைத்து சிறிது டெட்டால் கலந்த நீரில் அலசி விட்டு உலரப் போடவும். நல்ல வெயிலில் உலர்ந்தால் போதும். மாலை பொழுது சாய்வதற்குள் உலரப் போட்டிருக்கும் குழந்தைத் துணிகளை எடுத்து விடவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

குழந்தைக்கென்றே ஒரு மூடி போட்ட கூடையோ, பக்கெட்டோ வைத்துக் கொள்ளுங்கள். அதில் குழந்தையின் துணிகளை அழகாக மடித்து வையுங்கள். குழந்தையின் வாசனைக்கு எறும்பு வரும். அதனால் குழந்தை துணிகள் வைக்கும் கூடை, அல்லது அலமாரி இவைகளின் ஓரங்களில் மஞ்சள் பொடி தூவி விடுங்கள். அலமார்களில் பழைய செய்தித்தாள்களை போட்டு அதன்மேல் துணிகளை அடுக்குங்கள்.

குழந்தைக்கு குளித்து விட்டவுடன் வீட்டில் செய்த மையினால் பொட்டு வைக்கலாம். சிலர் நெற்றியின் நடுவில் பொட்டு வைக்காமல் இடது நெற்றியின் ஓரத்தில் பெரிதாகப் பொட்டு வைப்பார்கள். சிலர் குழந்தையின் உள்ளங்கால்களில் பொட்டு வைப்பார்கள். அவரவர்கள் வீட்டுப் பழக்கம் நம்பிக்கை இதன்படி வைக்கலாம். கண்ணுக்கு மை இடுவதை இந்தக் கால மருத்துவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஒரு வயது வரை மையினால் பொட்டு வைக்கலாம்.

குழந்தைக்கு புண்யாகவாசனம் செய்யும் வரை அதாவது 11 ஆம் நாள் வரை பொட்டு வைக்கும் வழக்கம் இல்லை. 11 ஆம் நாள் தாய்க்கும் சேய்க்கும் தலைக்கு ஸ்நானம் செய்வித்து மை இட்டு பொட்டும் இடுவார்கள். அன்றைக்கே பெயரும் வைப்பார்கள்.

இங்கு கர்நாடக மாநிலத்தில் குழந்தைக்கு நம்மைப்போல 11 ஆம் நாள் பெயர் வைப்பதில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் பெயர் வைப்பார்கள். அதுவரை எப்படிக் குழந்தையை கூப்பிடுவார்கள் X என்றா?

என் பெண்ணிற்கு முதல் குழந்தை பிறந்த போது நாங்கள் எங்கள் வழக்கப்படி 11 ஆம் நாள் பெயர் வைத்தோம். காலையில் புண்யாகவாசனம் செய்து பெயரை நெல்லில் மாமாவை விட்டு எழுதச் சொல்லி குழந்தையின் காதில் அந்தப் பெயர்களைச் சொல்லி, குழந்தையை நெல்லின் மேல் விடுவோம். பெயர் எழுதிய நெல்லின் மீது குழந்தைக்குக் கட்ட வேண்டிய அரைஞாண் கயிறையும் வைத்து அப்போதே அதை குழந்தைக்குக் கட்டுவோம். அன்றைக்கு மட்டும் மஞ்சள் கயிறு. பிறகு கறுப்பு கயிறு.

 

மாலையில் குழந்தைக்கு தொட்டில் கட்டும் சம்பிரதாயம். தொட்டிலில் என் பெண் திருமணத்தன்று அணிந்திருந்த கூரை புடவையை போட்டு அதன் மேல் குழந்தையை விடுவது வழக்கம். அப்போது என் மகளின் மாமியார் ஒரு குழவி கேட்டார். முதலில் குழவிக்கு மை இட்டு, பொட்டு வைத்து அதை தொட்டிலில் போடுகிறார்கள். அதன் பிறகே குழந்தைக்கு எல்லாம் செய்கிறார்கள்.

தொட்டிலை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி வைக்கிறார்கள். அவைகளை தொட்டிலுக்கு முன்புறமிருந்து பின்புறம், இடமிருந்து வலம் என்று மாற்றி மாற்றி எடுத்து வைக்கிறார்கள். பிறகு என் பெண்ணின் மாமியார் தனது இரண்டு கைகளையும் அகல் விளக்கில் காண்பித்து அதை குழந்தையின் உடம்பில் முதலில் தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று வைத்து வைத்து எடுத்தார். தீபத்தின் சக்தியை குழந்தைக்குக் கொடுப்பதாக சொல்லுகிறார்கள். அவளது நாத்தனார்கள் அதே போலச் செய்தனர். என்னையும் அதைபோலச் செய்யச் சொன்னார்கள். பிறகு குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்து தொட்டிலுக்கு கீழே ஒருவர் கொடுக்கிறார். அதை இன்னொருவர் வாங்கி மேலே தொட்டிலில் விடுகிறார். இதைபோல மூன்று முறை செய்கிறார்கள். இந்த எல்லா சம்பிரதாயங்களுக்கும் பாட்டு இருக்கிறது. எல்லாவற்றையும் பாடியபடியே செய்கிறார்கள்.

நான் நம் வழக்கப்படி காப்பரிசி, சுண்டல் செய்திருந்தேன். அதை தொட்டிலில் குழந்தையின் தலைமாட்டில் பொட்டலம் கட்டி வைத்தேன்.

 

குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிலும் போட்டாயிற்று. இனி அடுத்த வாரம் பார்ப்போம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book