குழந்தை வளர்ப்பில் நாம் இதுவரை பேசாத விஷயம் BM எனப்படும் Bowel Movement.

குழந்தை பிறந்தவுடனே வெளிவரும் மெகோநியம் என்பது கறுத்த பச்சை அல்லது கறுப்புக் கலரில் இருக்கும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் குடலில் சேர்ந்த அழுக்குகள் இப்படி வெளியேறுகின்றன.

பிரசவம் ஆனவுடன் தாய்பால் அருந்தும் குழந்தைகளின் ஜீரண உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படத் துவங்குவதன் அறிகுறி இது. ஒரு நாளைக்கு பல தடவைகள் இந்தக் கழிவு வெளியேறலாம்.

சில நாட்களுக்கு பின், குழந்தையின் BM பிரவுன் கலரில், பிறகு மஞ்சள் கலந்த பச்சையாக சற்று இளகியோ அல்லது நீராகவோ லேசான வாசனையுடன் இருக்கும். சில வாரங்களுக்கு ஒவ்வொருமுறை பால் குடித்த பின்னும் சில குழந்தைகள் மலம் கழிக்கும். இதுவும் சாதாரண ஒன்றுதான். கவலைப்படத் தேவையில்லை.

தாய்பால் இல்லாமல் வேறு பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. மருத்துவரிடம் கேட்டு சரியான அளவு பாலுடன் தண்ணீர் சேர்த்துக் கொடுத்தால் சரியாகிவிடும். வேறு பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நடுநடுவில் சிறிது காய்ச்சி ஆறின நீரைக் கொடுக்கலாம். இதனால் மலம் கழிப்பது சுலபமாகும்.

வேறு பால் கொடுக்கும்போது சர்க்கரை சேர்க்காமலே கொடுத்துப் பழக்குங்கள். அதுதான் நல்லது. தாய்ப்பால் போதவில்லை என்று வேறு பால் சில வேளைகளுக்குக் கொடுக்கும்போது இனிப்பு சுவை சேர்த்த பாலை குழந்தை அதிகம் விரும்பும். அந்த ருசி பழகிவிட்டால் குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுக்கலாம். அதனால் இந்த யோசனை.

ஒரு முறை என் பேரன் இரண்டு மூன்று நாட்கள் ‘கக்கா’ போகவேயில்லை. இத்தனைக்கும் அவன் முழுக்க முழுக்க தாய்ப்பால்தான் குடித்துக் கொண்டிருந்தான். என்னவோ ஏதோவென்று மருத்துவரிடம் குழந்தையைக் காட்டினோம்.

மருத்துவர் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு சொன்னார்: ’இங்க பாருங்கம்மா, குழந்தைக்கு ஒன்றும் இல்லை. நன்றாக விளையாடுகிறான். மலச்சிக்கல் ஏதாவது இருந்தால் குழந்தை இப்படி விளையாடாது. ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே பை அல்லது கோடவுன் எதுவும் கிடையாது. அதனால் வெளியே வந்துதான் ஆகவேண்டும். கொஞ்சம் வெளிப்பால் ஒரு வேளைக்குக் கொடுக்க ஆரம்பியுங்கள். குழந்தைக்கு ஆகாரம் போதவில்லை என்றால் கூட இதுபோல் ஆகும்’.

வீட்டிற்கு வந்து கொஞ்சம் வெளி பாலை சிறிது நீர் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்தோம். கை மேல் பலன்!

 

இன்னொன்று திடீரென்று சாப்பாட்டில் வித்தியாசம் இருந்தால் கூட குழந்தையின் BM – இல் வித்தியாசம் ஏற்படும். ஒன்று நீராகப் போகும்; இல்லையென்றால் போகவே போகாது. குழந்தை சிரித்து விளையாடிக்கொண்டு சாதாரணமாக இருந்தால் கவலைப் படவேண்டாம்.

பால் ஆகாரம் கொடுக்கும் வரை குழந்தை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை பால் குடித்து நிறைய ‘மூச்சா’ போய்க்கொண்டிருந்தால் சரி. சில குழந்தைகள் சுபாவமாகவே இரண்டு நாளைக்கு ஒருமுறை தான் கக்கா போகும். அப்பா, தாத்தா யாரையாவது கொண்டிருக்கும், கேட்டுப்பாருங்கள்!

குழந்தைக்கு திட உணவு எப்போது ஆரம்பிக்கலாம்? மூன்று மாதங்கள் முடிந்த பின் ஆரம்பிப்பது சரியாக இருக்கும். என் பேரனுக்கு அவனது அப்பாவைப் பெற்ற தாயார் ‘ராகி ஸரி’ செய்து கொடுத்தார். முதல் நாள் கால் ஸ்பூன் எடுத்து அதை கால் தம்ப்ளர் நீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, அதில் வெளிப்பாலை சேர்த்துக் கொடுத்தேன்.

முதல் நாள் BM சற்று வித்தியாசமாக சிறிது நீராக இருந்தது. நாளாக ஆக சரியாகிவிட்டது. சில குழந்தைகளுக்கு புது ஆகாரம் எதைக் கொடுத்தாலும் பேதி ஆகும். பிறகு சரியாகிவிடும். நிறைய தடவை குழந்தை மலம் கழித்தால் திட உணவில் வழக்கத்தை விட அதிகம் நீர் சேர்த்துக் கொடுங்கள். திட உணவு கொடுத்தவுடன் சிறிது காய்ச்சி ஆறின நீர் இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால் குழந்தையின் உடலில் இருக்கும் நீர் வற்றாது.

சிலசமயம் குழந்தையின் BM வழக்கத்திற்கு மாறாக கெட்டியாக இருக்கும். குழந்தையின் வயிறு உப்புசமாக இருக்கும். ரொம்பவும் சிரமப்பட்டு போகும். சின்னச்சின்ன உருண்டைகளாக மலம் வெளியேறும். திட உணவினால் கூட இவ்வாறு ஆகலாம். குழந்தையின் ஜீரண உறுப்புகள் திட உணவுக்கு இன்னும் தயாராகவில்லை என்று சொல்லலாம். திட உணவை ஒரேயடியாக நிறுத்துவதற்கு பதிலாக நிறைய தண்ணீர் சேர்த்துக் கொடுக்கலாம். நாளடைவில் நீரைக் குறைத்து திட உணவாகக் கொடுக்கலாம். நடுநடுவில் தண்ணீர் கொடுப்பதன் மூலம் இத்தகைய மலச்சிக்கலை மாற்றலாம்.

இந்த மாதிரி சமயங்களில் குழந்தை அதிகம் உணவு உட்கொள்ளாது. நமக்கும் வயிறு சரியில்லை என்றால் ஆகாரம் சரிவர சாப்பிட முடியாது இல்லையா, அதுபோலத்தான் இதுவும். சிலசமயம் குழந்தைக்கு சளி, ஜுரம் வந்தால் கூட ஆகாரம் சரியாக சாப்பிடாமல் இதைப் போல பேதியோ, மலச்சிக்கலோ உண்டாகும்.

இளம் தாய்மார்கள் செய்யக் கூடாத தவறுகள் சில:

‘முக்கு, முக்கு…முக்குடா…’ பக்கத்துவீட்டு சத்யாவின் குரல் எங்கள் வீட்டுக்குள்ளும் கேட்டது. தினமும் இப்படித்தான். ஏனென்று கேட்டதற்கு சத்யாவின் பதில்: ‘பள்ளிக்கூடத்தில் ‘டு பாத்ரூம்’ வந்தால் என்ன செய்வது? அதற்குதான் வீட்டிலேயே போய்விட்டால் எனக்கு டென்ஷன் குறையும்’.

 

இப்படித்தான் பல அம்மாக்கள் குழந்தைகளை BM (bowel movement) எனப்படும் ‘கக்கா’ போக பழக்குகிறார்கள். தொட்டில் பழக்கம் என்பார்களே, அது இந்தப் பழக்கத்திற்கும் பொருந்தும். குழந்தையிலேயே ‘முக்கி முக்கி’ போகும் குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் ‘முக்க’ வேண்டியதுதான். முக்கினால்தான் போகமுடியும் என்கிற நிலை வந்துவிடும்.

இளம்தாய்மார்கள் செய்யும் இன்னொரு தவறு: ‘டூ பாத்ரூம் போய்விட்டு வந்தவுடன் கையை ஹேண்ட் வாஷ் போட்டு நன்றாக தேய்த்து தேய்த்து கழுவு’ என்கிறார்கள். எங்கள் உறவுக்காரக் குழந்தை மாலையில் பள்ளிக் கூடம் விட்டு வந்தபின் வயிற்றுவலி என்று துடிக்க மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கிறார்கள். மருத்துவர் அந்தக் குழந்தையிடம் ‘இன்னிக்கி டு பாத்ரூம் போனியா’ என்று கேட்க, ‘பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது வந்தது. ஆனா கை கழுவ ஹேண்ட் வாஷ் இல்லை. அதனால் போகாமல் அடக்கிக் கொண்டுவிட்டேன்’. டாக்டர் கேட்டார்: ‘இன்னிக்கு மட்டுமா? இல்லை தினமுமா?’ குழந்தை முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்லியது: ‘ கொஞ்ச நாளாவே’

குழந்தையின் வயிற்றுவலிக்குக்காரணம் தெரிந்ததா?

சுத்தம் என்பது ரொம்பவும் அவசியம். குழந்தைகள் அம்மா சொல்வதை அப்படியே கடைபிடிக்க முயற்சி செய்கிறார்கள். எந்த ஒரு பழக்கத்தையுமே ‘இப்படித்தான்’ என்று வலியுறுத்தாதீர்கள். ஹேண்ட் வாஷ் இல்லாத போது என்ன செய்வது என்று மாற்று வழியையும் சொல்லிக் கொடுங்கள். பள்ளிக்கூடத்தில் டூ பாத்ரூம் போக நேர்ந்தால் நிறைய நீர் விட்டு கையை அலம்பிக்கொள்; பிறகு வீட்டில் வந்து நன்றாக அலம்பலாம் என்று சொல்லுங்கள்.

இந்த இரண்டு தவறுகளையும், இளம் தாய்மார்கள் தயவு செய்து செய்யக் கூடாது.

அடுத்தவாரம் பார்க்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book