குழந்தைக்கென்று சில அனிச்சை செயல்கள் இருக்கும். சின்ன சத்தம் கேட்டால் கூடத் தூக்கி வாரிப் போடுவது, பால் குடிக்கும்போது நம் உடையை, அல்லது கைவிரலை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது, சத்தம் கேட்கும் திசையில் தலை திருப்புவது, பால் புகட்ட கையில் எடுத்தவுடன் வாய் அலைவது, பசி வந்தால் கையை வாயில் வைத்துக் கொள்ளுவது இவையெல்லாம் குழந்தையின் அனிச்சை செயல்கள் தான்.

குழந்தையின் அழுகை:

முதல் குழந்தை பெற்ற இளம் பெண்கள் ரொம்பவும் திண்டாடுவது குழந்தையின் அழுகையை புரிந்து கொள்ள முடியாமல் போகும் போதுதான். எதற்கு அழுகிறது என்று தெரியாமல், கையில் எடுத்து வைத்துக் கொண்டு, பால் புகட்டி, தோளில் போட்டு தட்டி….. என்ன செய்தும் அழுகை ஓயவில்லை என்றால் என்ன செய்வது?

ஒரு மாதக் குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு ஒன்று முதல் 4 மணி நேரம் வரை அழும் என்பார்கள் மருத்துவர்கள். நமக்கோ அது நாள் முழுக்க அழுவது போலத் தோன்றும். கையில் வைத்துக் கொண்டிருந்தால் அழாது. தொட்டிலில் படுக்க வைத்தவுடன் சிணுங்கும். சிறிது நேரத்தில் சிணுங்கல் அழுகையாக மாறும். என்ன செய்வது? எப்படி அழுகையை நிறுத்துவது? மறுபடி கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

பசி அழுகை என்றால் குழந்தை உதடு துடிக்க, வயிறு உள்ளே அமுங்கி அழும். உடனே உடனே பால் கொடுக்கவும். பசி வந்தால் ‘பத்தும் பறந்து போகும்’ என்பார்களே அதுபோல சில குழந்தைகள் பசி அதிகமாகிப் போய்விட்டால் பாலே குடிக்காமல் அழுது அழுது தூங்கி விடும். குழந்தைப் பசி கொள்ளிப் பசி என்பார்கள்.

சில குழந்தைகளுக்கு குளிப்பது என்பது பெரிய வேதனையான விஷயமாக இருக்கும். குளியலறைப் பக்கம் எடுத்துக் கொண்டு போனாலே அழ ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு வாசனை நன்றாகத் தெரியும். சில குழந்தைகள் ஒரு சொம்பு நீரை விட்டவுடன் ‘வீல்’ என்று அலறும். அலற அலற குளித்து விட வேண்டியதுதான். சில குழந்தைகள் உடம்புக்குக் குளித்தால் அழாது. தலையில் நீர் விட்டால், ஊரே அதிரும்படி அழுது ரகளை செய்யும்.

வயிற்றுக்கு ஆகாரம் போதவில்லை என்றால், சரியானபடி ஏப்பம் வரவில்லை என்றால், ரொம்ப நேரமாக டயபர் மாற்றவில்லை என்றால், அல்லது மலம் கழித்து விட்டால், தூக்கம் வந்தால், என்று ஏதோ ஒரு அசௌகரியம் என்றால் குழந்தைக்கு அழுகை தான்.

என் உறவினர் ஒருவருக்கு அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். நால்வரும் எப்பவும் சிணுங்கியபடியே இருப்பார்கள். காரணம் அம்மாவின் கவனிப்பு கிடைக்காததால்; வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு நான்கு குழந்தைகளையும் கவனிப்பது என்பது சுலபமா?

பசி அழுகை என்றால் பால் குடித்தவுடன் நின்று விடும். ஏப்பம் சரியாக விடவில்லை என்றால் தோளில் போட்டுத் தட்டி, ஏப்பம் விடவைத்தால் அழுகை காணாமல் போய்விடும்.

உடல்நிலை சரியில்லை என்றால் அழும். அப்போது குழந்தைக்கு உங்கள் முழு கவனமும் தேவை.

அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி?

• குழந்தை அழ ஆரம்பித்தவுடன் நீங்கள் டென்ஷன் ஆகாதீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் குழந்தையும் அமைதியாகும்.

• டயபரை மாற்ற வேண்டுமா என்று பாருங்கள். டயபர் உராய்வினால் குழந்தையின் இடுப்பு, தொடை இடுக்குகளில் தோல் தடித்து சிவந்து இருந்தால் பேபி லோஷன் தடவி விட்டு பிறகு புது டயபர் போடுங்கள். இல்லையென்றால் சிறிது நேரம் குழந்தை காற்றாட இருக்கட்டும்.

• குழந்தையின் பின்பக்கக் கழுத்தைத் தொட்டுப் பாருங்கள். அதிக உஷ்ணமோ, அதிக சில்லிப்போ இருக்கிறதா என்று சோதியுங்கள். உஷ்ணம் அதிகமாக இருந்தால் உடைகளை களைந்து விடுங்கள். சில்லென்றிருந்தால் மேலே ஸ்வட்டர் அல்லது வேறு உடை அணிவியுங்கள். உங்கள் கைக்கு வித்தியாசம் தெரியவில்லைஎன்றால் தர்மாமீட்டரை வைத்து பாருங்கள்.

• குழந்தையின் கவனத்தை திசை திருப்புங்கள். வெளியில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். மிதமான காற்று, சிறிது சூரிய ஒளி இவை குழந்தைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.

• சிலசமயம் உங்கள் கவனத்தை கவர வேண்டும் என்பதற்காகவும் அழலாம். கொஞ்ச நேரம் கொஞ்சுங்கள். உச்சி குளிர்ந்து அழுகை நிற்கலாம்!

• சில குழந்தைகள் தோளில் சாத்திக் கொண்டால் பேசாமல் இருக்கும். இடுப்பில் உட்கார்த்தி வைத்துக் கொண்டால் பிடிக்காது. குழந்தையின் விருப்பப்படி நடப்பது நமக்கு இரத்த அழுத்தம் ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.

• பாட்டுப் பாடுங்கள். அல்லது மெல்ல ‘ஹம்’ செய்யுங்கள். அழுகை நின்றால் உங்கள் பாட்டுத் திறமையை மெச்சிக் கொள்ளுங்கள். அழுகை அதிகமானால் பாடுவதை நிறுத்திவிடுங்கள். ‘அழுகையை நிறுத்தறயா, பாடட்டுமா?’ என்று அடுத்தமுறை குழந்தை அழும்போது கேட்கலாம். குழந்தை கப்சிப் என்றாகிவிடும்.

• குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மெல்ல ஆட்டலாம். நிதானமான, ஒரே சீரான ஆட்டலில் குழந்தை அமைதியாகி விடும். தொடையில் போட்டுக் கொண்டு தட்டலாம்.

• மிகவும் புழுக்கமான நாளாக இருந்தால் மாலைவேளைகளிலும் குழந்தையை குளித்துவிடலாம். புழுக்கம் காரணமாகவும் குழந்தை எரிச்சல் அடைந்து அழலாம்.

• குழந்தையை உங்கள் மார்பின் மேல் விட்டுக் கொண்டு கொஞ்சுங்கள். எல்லாக் குழந்தைகளும் இதை விரும்புவார்கள். அழுகை நிற்கும்.

• குழந்தையின் வயிறு கீழே இருக்கும்படி படுக்க வைத்து குழந்தையின் பின்புறத்தை லேசாக கீழ் முதுகு நோக்கித் தடவிக் கொடுங்கள். ஒரு சின்ன ‘மசாஜ்’ கொடுத்தால் சமத்தாகி விடும்.

• நிறைய சத்தம், நிறைய வெளிச்சம் இவைகூட ஒரு சில குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. எல்லாவற்றையும் குறைத்து விடுங்கள். அழுகையும் குறையலாம்.

• ஒரே இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாலும், குழந்தையின் கை, கால்கள் ஆடிக் கொண்டேதான் இருக்கும். அதனால்கூட குழந்தை களைத்து விடும். குழந்தையை ஒரு பெரிய டவலில் விட்டு நன்றாக சுற்றி (Swaddle) விடுங்கள். குழந்தை அமைதியாகி தூங்கிவிடும்.

• சில சமயங்களில் குழந்தையின் அழுகையை ‘கண்டு கொள்ளாமல்’ இருப்பது கூட பலனளிக்கும்.

• குழந்தை அழ ஆரம்பித்தவுடன் பதறிப் போய் அதை எடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். ‘ஓ! அம்மாவின் பலவீனம் இதுவா?’ என்று தெரிந்து கொண்டு உங்களை எமோஷனல் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்துவிடும் குழந்தை.

எப்படியாயினும் மூன்று மாதங்களில் குழந்தையின் அழுகை குறைந்து விடும்.

நமக்கு எப்படி குழந்தை புதுசோ, அதேபோலத்தான் குழந்தைக்கும் இந்த உலகம் புதிது. புதிய உலகத்திற்கு வந்து அதற்கு தகுந்தாற்போல மாற குழந்தைக்கும் சிறிது நாட்கள், மாதங்கள் ஆகும், இல்லையா?

குழந்தையின் தூக்கம்:

தூக்க விஷயத்திலும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரிதான். சில பகலில் தூங்கி இரவில் கொட்ட கொட்ட விழித்திருக்கும். சில சமத்தாக பகலில் விளையாடி விட்டு இரவில் தூங்கும். ஒரு மாதக் குழந்தை சுமார் 15 மணி நேரம் தூங்கும்.

இரவில் குழந்தையுடன் கண் விழித்துவிட்டு, காலையில் எழுந்திருந்து வேலை செய்வது கடினம்தான். பாட்டி தாத்தா யாராவது இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் குழந்தையை கொடுத்துவிட்டு இளம் தாய்மார்கள் பகலில் சற்று நேரம் தூங்கலாம். யாரும் உதவிக்கு இல்லையென்றால் குழந்தை தூங்கும் போதே தூங்கி விடுவது நலம்.

சில குழந்தைகள் குட்டி குட்டியாகத் தூக்கம் போடும். குழந்தை விழித்துக் கொண்டிருந்தாலும் மிகவும் அசதியாக இருந்தால் குழந்தையின் பக்கத்தில் படுத்துத் தூங்கிவிடுங்கள். குழந்தைக்கு அசௌகரியம் என்றால் அது அழும். அதுவரை ஒரு சின்னத் தூக்கம் போட்டுவிடலாம். நீண்ட தூக்கத்தை விட இந்த சின்னத் தூக்கம் பலமடங்கு சக்தியை மீட்டுத் தரும். இதைத்தான் Power Nap என்கிறார்கள்.

அடுத்த வாரம் மீதி!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book