குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போது? எப்போதுமே – குறிப்பாக குழந்தை கவிழ்ந்து படுக்க ஆரம்பித்தவுடன், கட்டிலிலோ அல்லது உங்கள் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டாலோ மிகவும் பத்திரமாகக் குழந்தையை பார்த்துக் கொள்ளவேண்டும்.

 

என் பிள்ளை கவிழ்ந்து கொள்ள ஆரம்பித்து (கொஞ்சம் நிதானம் தான் அவன்) சில மாதங்கள் கழித்தும், நீஞ்ச ஆரம்பிக்கவில்லை. எனக்கோ என்னடா இது, இப்படி இருக்கிறதே குழந்தை என்று மனதிற்குள் சின்னதாக கலக்கம். ஆனால் ஒரு சில நாட்களாக பாயின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு உருள ஆரம்பித்திருந்தான். கொஞ்ச நாட்களில் அதுவே ஒரு விளையாட்டு ஆயிற்று. முதலில் உருண்டு கவிழ்ந்து கொள்ளுவான். அடுத்தமுறை உருளலுக்கு மல்லாக்க படுத்துக் கொள்வான். இப்படியே பாயை சுருட்டிக் கொண்டே அவனும் உருண்டு உருண்டு போவான். ‘பாய் சுருட்டி’ என்று அவனுக்குச் செல்லப் பெயர் வைத்திருந்தேன். நான் குரல் கொடுத்தவுடன், பாய்க்குள்ளிருந்து சிரிப்பான்.

 

ஒரு நாள், கூடத்தில் பாயில் அவனை விட்டு விட்டு சமையலறையில் வேலையாக இருந்தேன். தட தடவென்று கதவை இடிக்கும் சத்தம். ‘யாரிது அழைப்பு மணியை அழுத்தாமல் இப்படி கதவே உடைந்து விடும்போல தட்டுவது’ என்று வெளியில் வந்து பார்த்தால்…….

 

எங்கள் வீட்டு இளவரசன் தான்! பாயை ஒரு கையால் பற்றிக் கொண்டு உருண்டு உருண்டு போயிருக்கிறான். கதவு வாகாக அகப்படவே, பாய்க்குள்ளேயே மல்லாக்கப் படுத்துக் கொண்டு கதவை தன் காலால் உதைத்து தடதடவென ஓசை எழுப்பியிருக்கிறான். ஓடிப் போய் பாயைப் பிரித்து அவனை வெளியே எடுத்தேன்.

 

நல்ல காலம் அவனை நான் பாயில் விட்டிருந்தேன். கட்டிலிலில் விட்டிருந்தால்? இதற்குத்தான் சொன்னேன், நகரும் குழந்தையை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.

 

இரவிலும் சில குழந்தைகள் தூக்கத்தில் புரண்டு கவிழ்ந்து படுத்துக் கொள்வார்கள். தூக்கத்திலேயே தவழ ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தையை சுவரோரம் விட்டுவிட்டுப் பக்கத்தில் அம்மா படுத்துக் கொள்ளலாம். எந்தக் காரணம் கொண்டும் குழந்தையை கட்டிலின் ஓரத்தில் விடவே கூடாது. குழந்தை தூக்கத்தில் எழுந்து சுவற்றில் முட்டிக் கொள்ளாமல் இருக்க கெட்டி தலையணைகளை வைக்க வேண்டும்.

 

காலையில் நீங்கள் எழுந்து வரும்போது குழந்தையை கட்டிலிலிருந்து கீழே எடுத்துப் படுக்க விடுவது நல்லது. ஏனெனில், சில குழந்தைகள்தான் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அழும். சில குழந்தைகள் எழுந்து அழாமல் சிரித்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நகர ஆரம்பித்த குழந்தை நிச்சயம் நீங்கள் விட்ட இடத்தில் இருக்காது. அம்மாக்களுக்கு கூடுதலாக இரண்டு கண்கள், இரண்டு காதுகள் தேவை. ஆனால் இல்லையே! இருக்கும் இரண்டு கண்களில் ஒன்று குழந்தையின் அசைவை கவனித்துக் கொண்டும், ஒரு காது குழந்தை செய்யும் ஓசைகளை கேட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். நீங்கள் சமையலறையில் இருந்தாலும் கூடத்தில் இருக்கும் குழந்தையின் மேல் கவனம் கட்டாயம் வேண்டும். வெகு நேரம் குழந்தையை தனிமையில் விடக்கூடாது. அடிக்கடி வெளியில் வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

என் குழந்தைகள் நகர ஆரம்பித்தவுடன், முதலில் அலமாரியில் கீழ் தட்டுகளை காலி செய்துவிட்டேன். குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை மூன்று தட்டுகளை காலியாகவே வைத்திருந்தேன். காலியான இடத்தில் குழந்தைகளின் விளையாட்டு சாமான்களையே வைத்திருந்தேன். குழந்தையின் கைக்கெட்டும் தூரத்தில் உடையக் கூடிய, கூரான முனை உள்ள சாமான்கள் எதையும் வைக்ககூடாது. குழந்தைக்குத் தெரியாது எதை எடுக்கலாம், கூடாது என்பது. ஆனால் நமக்குத் தெரியுமே. அதனால் நாம் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

 

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.

 

இரவு குழந்தைக்குப் பால் கொடுக்க எழுந்தால், எல்லா விளக்குகளையும் போட்டுக் கொள்ளுங்கள். தூக்கக் கலக்கத்தில் இருட்டில் குழந்தையை எடுத்து வைத்துக் கொள்வது, பால் புகட்டுவது கூடவே கூடாது. குழந்தை தூங்கும் இடத்தில் சின்ன மின்விளக்கைப் போட்டு வையுங்கள்.

 

குழந்தையின் மருந்துகளை தனியாக ஓரிடத்தில் வையுங்கள். எப்போதும் அந்த இடத்திலேயே வைத்துப் பழகுங்கள். பெரியவர்களின் மருந்துகளுடன் குழந்தைகளின் மருந்துகளை சேர்த்து வைக்காதீர்கள். இந்த விஷயத்திலும் எனக்கு என் அஜாக்கிரதையினால் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

 

ஒருமுறை என் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. இரவும் ஜுரம் இறங்காததால் மறுபடி ஜுர மருந்து கொடுக்கலாம் என்று எழுந்தவள், தூக்கக் கலக்கத்தில் ஏதோ ஒரு மருந்தை எடுத்து இருக்கிறேன். ஸ்பூனில் கொட்டும்போது சட்டென உள்ளுணர்வு சொல்லியது ‘மருந்து ரொம்பவும் ‘திக்’ ஆக இருக்கிறதே’ என்று. வாசனையும் வேறாக இருந்தது உரைத்தது. உடனே மின்விளக்கைப் போட்டு பார்த்ததில் அது வேறு மருந்து! முதல் வேலையாக முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தேன். நிதானப் படுத்திக் கொண்டு சரியாகப் பார்த்து குழந்தையின் ஜுர மருந்தை எடுத்துக் கொடுத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை யார் சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் இவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை நான் சொல்லத் தவறுவதில்லை. இதோ இன்று உங்களுக்கும் சொல்லிவிட்டேன். குழந்தைகளின் பாதுகாப்பு நம் கையில்.

 

குழந்தை எப்போதும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கூடத்தில் குழந்தை இருக்கும் பட்சத்தில் படுக்கையறை, மற்ற அறைகளை மூடி விடுங்கள். அழுத்தமாக, குழந்தை திறந்து கொண்டு போகாத வண்ணம் கதவுகளை சாத்தி, தாழ்ப்பாள் போடுங்கள். குளியலறைக் கதவுகளையும் சாத்தியே வையுங்கள்.

 

அதேபோல குழந்தைகென்று பயன்படுத்தும் பாத்திரங்கள் – டவரா, டம்ப்ளர், ஸ்பூன், பாலாடை, பால் பாட்டில்கள், நிப்பிள், பால் பாட்டில் உறைகள் இவைகளையும் நன்கு சுத்தப் படுத்தி வெயிலில் வைத்து எடுக்கவும். நன்கு உலர்ந்த பாத்திரங்களில் கிருமிகள் தொற்றுவதில்லை.

 

குழந்தைகளுக்கென்று உடம்பு துடைக்க டவல், படுக்கை விரிப்புகள், குட்டி குட்டி தலையணைகள், வெளியே போகும்போது குழந்தையை நன்றாகப் போர்த்தி எடுத்துக் கொண்டு போக வண்ண வண்ண விரிப்புகள் என்று தனியே வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் உடைகளுடன் இவைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

 

வெளியே போகும்போது குழந்தைக்கு மாற்று உடை கட்டாயம் தேவை. அதேபோல டயபர்கள், முகம் துடைக்கும் டிஷ்யூக்கள் எல்லாம் எப்பவுமே கையிருப்பில் இருக்கட்டும். இரண்டு மூன்று மணி நேரத்தில் திரும்பிவிடுவீர்கள் என்றாலும் கூட இவைகளை கையில் வைத்திருங்கள்.

 

வெளியூர் போகும்போது குழந்தையின் மருந்துகள் அவசியம் கையில் இருக்க வேண்டும். குழந்தைக்கு ஜுரமோ, வேறு எந்தத் தொல்லையும் இல்லையென்றாலும் கூட இவை நிச்சயமாக உங்கள் கைப் பையில் இருக்க வேண்டும்.

 

குழந்தையின் பாதுகாப்பு, வீட்டில் ஏற்படும் விபத்துகள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பேசலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book