குழந்தை நகர ஆரம்பித்ததும் மற்ற விளையாட்டுக்கள் அல்லது திறமைகள் சீக்கிரமாக வந்துவிடும். தாமதமானாலும் பெற்றோர்கள் இது குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

சில குழந்தைகள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாலும், நீந்தாது. தவழ ஆரம்பித்துவிடும். சில குழந்தைகள் பாய்ந்து பாய்ந்து நீந்திவிட்டு நேராக எழுந்து நின்றுவிடும். ஆனால் குழந்தைகள் நீந்துவது, தவழுவது எல்லாமே ஒரு அழகுதான்! காணக்கண் கோடி வேண்டும்.

பெங்களூரில் இருந்து மைசூர் போகும் வழியில் தொட்ட மளூர் என்று ஒரு சிறிய ஊர். இங்கே தவழும் கிருஷ்ணனுக்கு ஒரு சந்நிதி தனியாக இருக்கிறது. கோவிலில் பிரதான இறைவனின் பெயர் அப்ரமேய ஸ்வாமி. பிராகாரம் வலம் வருகையில் இந்த ‘அம்பே காலு’ (முட்டி போட்ட நிலையில் இருக்கும்) கிருஷ்ணனை தரிசிக்கலாம். மழமழ வென்றும் கருப்பு கல்லில் அத்தனை அழகாக இருப்பார் இந்த குழந்தை கிருஷ்ணன். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தரிசித்து பின் குழந்தை பிறந்தவுடன் இந்தக் கிருஷ்ணனுக்கு வெண்ணை சாத்துவார்கள். குழந்தைகள் பற்றிய பதிவில் ஒரு சின்ன சுற்றுலா!

இன்னொரு விஷயமும் இங்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் பெங்களூர் வந்த புதிதில் ஒரு வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியன்று என்னை அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது நான் பார்த்த காட்சி ஒன்று. பூஜையில் சின்னதும் பெரிதுமான தவழும் கண்ணனின் உருவங்கள். வெள்ளியில் ஒன்று, பஞ்சலோகத்தில் ஒன்று என விதம்விதமாக கண்ணன்! அந்த வீட்டுப் பெண்மணியிடம் கேட்டேன்:’எப்படி இத்தனை தவழும் கண்ணன்கள்?’ ‘எங்கள் வீட்டில் சீமந்தத்தின்போது வருபவர்களுக்கெல்லாம் இந்த தவழும் கண்ணனைக் கொடுப்போம். நான் போன வீடுகளில் எனக்குக் கிடைத்தவை இந்த கண்ணன்கள்’ என்றார்! எனக்குக் கூட ஒரு வீட்டில் ஆலிலை கண்ணன் கொடுத்தார்கள்.

சரி, இப்போது நாம் நம் செல்வ களஞ்சியத்தைப் பற்றிப் பேசுவோம்.

பெரும்பாலான குழந்தைகள் 7 லிருந்து 9 மாதங்களுக்குள் உட்கார முயலுகிறார்கள். குழந்தைகளைப் போல அயராமல் முயலுபவர்கள் இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும். அதனால் தான் நீங்கள் உங்கள் கையைக் கொடுத்தவுடன் எழுந்து நிற்க பார்க்கிறார்கள். நாற்காலி அல்லது மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று விடுவார்கள். ஆனால் உட்காரத் தெரியாமல் சிறிது நேரத்தில் ‘ஓ’ வென்று அழுவார்கள். நீங்கள் பிடித்து உட்கார வைத்தால் மறுபடி நிற்பார்கள்! ரொம்ப நேரம் நிற்பதால் கால் வலிக்கும் அதனால் வேறு ஏதாவது விளையாட்டுக் காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டும்.

முதன்முதலாக நீந்த தொடங்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் வண்டி பின்னால் நகரும். பிறகுதான் முன்னால் போகும். பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில குழந்தைகள் மிக மிக ஜாக்கிரதையாக நிற்பது, உட்காருவது எல்லாவற்றையும் செய்வார்கள். நிதானமாக விழாமல் இருப்பார்கள். சில குழந்தைகளுக்கு விழாமல் ஒன்றும் செய்யத் தெரியாது. விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கவும் செய்வார்கள்.

பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும் குழந்தை அப்படியே நடக்கவும் கற்கிறது. முதலில் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு நடக்கும். கொஞ்சம் தைரியம் வந்தவுடன், ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் நீங்கள் மேலே எடுத்து வைத்திருக்கும் சாமான்களை எடுக்க முயலுகிறது. எட்டவில்லை என்றால், இன்னும் சிறிது நாளில் கால்களை எம்பிக் கொண்டு நின்று சாமான்களை எடுக்க முயற்சிக்கும். சாப்பாடு நாற்காலியின் மேல் ஏறி சாப்பாட்டு மேஜையில் உட்காரவும் இப்படித்தான் கற்கிறது குழந்தை.

பிடித்துக் கொண்டு நடப்பதற்கு வந்தவுடன் அடுத்த கட்டம் கையை விட்டுவிட்டு நடப்பது. இரண்டடி நடக்கும்; பொத்தென்று விழும். கொஞ்சம் அழுதுவிட்டு மறுபடி எழுந்து நின்று இன்னும் இரண்டடி நடக்கும். மறுபடி ‘பொத்’ நீங்கள் உட்கார வைத்தாலும் அலுக்காமல் சலிக்காமல் முயன்று கொண்டே இருக்கும் குழந்தை. நாமும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தவர்கள்!

குழந்தை நிற்க ஆரம்பித்தவுடன், அல்லது பிடித்துக் கொண்டு நகர ஆரம்பித்தவுடன் சில பெற்றோர்கள் அதற்கு நடை வண்டி வாங்கித் தருவார்கள். குழந்தை நடை பழக. இது தேவையில்லை; குழந்தைக்குக்கு தன்னைத் தானே நிலைப்படுத்திக்கொள்ள வந்தவிட்டால் அதுவே கையை விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்துவிடும். அதுவரை நீந்தி, தவழ்ந்து பண்ணட்டும். நீந்துதல் தவழுதல் எல்லாமே சில காலத்திற்குத்தான். அதை ரசியுங்கள்.

இப்போது ‘வாக்கர்’ என்று வருகிறது. மிகவும் வண்ண மயமாக ஒரு சில விளையாட்டு சாமான்களும் இணைக்கப் பட்டிருக்கும். வீட்டிற்குள் குழந்தையை வெகு நேரம் இதில் விடாமல் இருப்பது நல்லது. குழந்தை வீட்டிற்குள் சுற்றிவர தேவையான சுதந்திரம் கொடுங்கள். Bouncer என்று சின்ன தொட்டில் போல ஒன்றும் கிடைக்கிறது. இதில் குழந்தையை விட்டால், குழந்தையில் சிறிய அசைவுக்குக் கூட இது ஆடும். இதிலும் குழந்தை பிடித்துக் கொண்டு விளையாட வண்ண வண்ண பிளாஸ்டிக் வட்டங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும்.

நகர வந்துவிட்ட எந்தக் குழந்தையுமே இது போல ஒரு இடத்தில் அல்லது வாக்கரில் அல்லது பவுன்சரில் இருக்க விரும்பாது. ஆரம்பத்தில் இவற்றில் உட்காரும் குழந்தை, தானாக நடக்கத் தொடங்கியவுடன் இவற்றை விரும்புவதில்லை. மாலை வேளைகளில் குழந்தையை ‘ப்ராம்’ வைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லலாம். தன்னிச்சையாக, தன் பிஞ்சுக் கால்களால் உலகை அடி அடியாக நடந்து பார்த்து தெரிந்து கொள்ளவே ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் குழந்தைக்கு ஏதேனும் உடம்பு படுத்தும் என்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். இது அறிவு பூர்வமானதா, ஆதார பூர்வமானதா என்று தெரியாது. குழந்தைக்கு பொதுவாக எல்லா வீடுகளிலும் திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். அந்தி நேரத்தில் – பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரத்தில் இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு அதையே குழந்தைக்கும் காட்டுவார்கள். இந்த சமயத்தில் என் அம்மா சின்னதாக இரண்டு வரிகள் சொல்லுவாள்:

‘காரார் திருமேனிக்கு கண்ணூறு வாராது; சீரார் திருமேனிக்கு திருமந்திக் காப்பு’ என்று. எங்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லோருக்குமே இந்த சின்னப் பாட்டைச் சொல்லித்தான் திருஷ்டி கழிப்போம். கற்பூரத்தின் கறுப்பினை கையில் தொட்டு குழந்தையின் நெற்றியிலும், கன்னத்திலும் தீற்றுவார்கள். இதெல்லாமே நம்பிக்கை தான்.

குழந்தை நடக்கும்போது ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நடக்கும். கால் நிலத்தில் ஊன்றவே ஊன்றாது. எங்கேயோ மிதப்பது போல இருக்கும் அதன் நடை. இதற்குக் காரணம் குழந்தையில் பாதங்களில் வளைவு (arch) இல்லாததுதான். மேலும் அதன் கால்கள் மெத்து மெத்தென்று இருப்பதும் ஒரு காரணம். குழந்தை நடக்கும் போது கால்களிலுள்ள தசைகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. குழந்தை நடக்க நடக்க இந்த வளைவும் ஏற்படும். சில குழந்தைகளின் கால்கள் சிறிது வளைந்து இருப்பது போல இருக்கும். சில குழந்தைகள் கால்களை உள்ளே திருப்பி வைத்துக் கொண்டு நடக்கும். குழந்தை நடக்க நடக்க கால்கள் சரியான படி ஆகும்.

வெளிநாடுகளில் நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு ஷூக்கள் போட்டுவிடுவார்கள். நம்மூரில் இதைபோல செய்வதில்லை. நன்றாக நடக்க வந்தவுடன் ஷூ பழக்கம் செய்யலாம். அழகுக்காக, மற்றும் குளிர் காலங்களில் குழந்தையின் கால்களை குளிர் தாக்காமல் இருக்கவும் வெளியே போகும்போது குட்டி சாக்ஸ் அணிவிக்கலாம்.

முதலிலிருந்தே குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கவேண்டும். குறிப்பாக வெளியில் நடக்க வேண்டும் என்று குழந்தை ஆசைப் படும்போது அதிக கவனம் தேவை.

அடுத்த வாரம் மேலும் பார்க்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book