இந்தத் தொடர் ஆரம்பித்த புதிதில் பெண்கள் மட்டுமே பின்னூட்டம் கொடுத்து வந்தார்கள். ஆண்கள் பலர் படித்து வந்தாலும் (பெண் பத்திரிகைகள் ஆண்களினால் தான் அதிகம் படிக்கப் படுகிறது என்பது ஊரறிந்த உண்மை!) இப்போது தான் பின்னூட்டம் போட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவும் இந்தத் தொடரின் வெற்றிக்கு ஒரு அளவுகோல் என்று சொல்லலாம்.

குழந்தை வளர்ப்பு என்பது ஆண் பெண் இருவரின் பொறுப்பு என்பதை இந்தக் கால ஆண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது என்று கூடச் சொல்லலாம், இல்லையா?

இந்த வாரம் நான் பார்த்து ரசித்த சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதல் காட்சி:

சென்றமுறை சென்னை போய்விட்டுத் திரும்பும்போது நாங்கள் ஏறியிருந்த கோச்சில் நிறைய சின்னக் குழந்தைகள். ஏதாவது நர்சரி பள்ளி குழந்தைகள் சுற்றுலா வந்திருக்கிறார்களோ என்று நான் வியக்கும் அளவுக்கு குழந்தைகள். இங்கும் அங்கும் ஓடிக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு சூழ்நிலையே கலகலவென்று இருந்தது. இன்னும் ஒரு வியப்பு என்ன தெரியுமா? குழந்தைகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது இளம் தந்தையர்கள்!

கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும்போது எப்படி குழந்தையை வளர்க்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்ற முடிகிறது? மனதிற்குள் கேள்வி எழுந்தது.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளம் பெண் என்னைப்பார்த்து சிநேகிதமாக சிரித்தாள். அதுதானே எனக்கும் வேண்டும். மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

‘நானும் மென்பொருள் பொறியாளர். குழந்தை பெற்றுக் கொள்வது என்று தீர்மானம் செய்தவுடன் நான் செய்த முதல் வேலை, என் வேலையை விட்டதுதான். ஆனால் வீட்டில் சும்மா இருக்கவில்லை. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் கொடுக்கும் ஆசிரியர் பயிற்சி எடுத்தேன். இப்போது என் குழந்தை படிக்கும் நர்சரி பள்ளியிலேயே எனக்கும் வேலை. கவலை இல்லாமல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுகிறேன். வேலை சுமை இல்லை. குழந்தையின் வளர்ச்சியையும், விளையாட்டையும் ரசிக்க முடிகிறது. படித்து விட்டு வீட்டில் இருக்கிறோமே என்ற மனத் தாங்கலும் இல்லை’ என்றாள். ‘சபாஷ்!’ என்றேன்.

 

இரண்டாம் காட்சி:

ஒரு திருமணத்திற்கு போயிருந்தோம். மணப்பெண்ணின் அக்கா கைக் குழந்தைக்காரி. தங்கையின் திருமணத்தில் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தாள். அவளது கணவன் (இளம் தந்தை) குழந்தையை வெகு பாந்தமாக எடுத்து வைத்துக் கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். அவ்வப்போது குழந்தையின் தாய் அவரைப் பார்த்து புன்முறுவல் பூப்பதும், இவர் அவளைப் பார்த்து ‘கவலைப் படாதே. நீ உன் பெற்றோருக்கும், தங்கைக்கும் உதவியாக இரு. குழந்தையை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’ என்று பதிலுக்கு கண்ணாலேயே சொல்வதுமாக அமைதியாக அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் நடந்து கொண்டிருந்தது.

சாயங்காலம் நேரம் கிடைத்தபோது அந்தப் பெண்ணுடன் பேசினேன். ‘அவர் எனக்கு ரொம்ப உதவி பண்ணுவார் மாமி, அதனாலதான் இரண்டாவது குழந்தையைப் பத்தியே யோசித்தேன்.’ என்றாள்.

எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணி சொன்னார்: ’நீங்கள் என் பிள்ளை, மாட்டுப்பெண்ணைப் பார்க்க வேண்டும். மாட்டுப் பெண் வேலைக்குப் போகவில்லை. ஆனால் அயல்நாட்டு மொழி ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். சனி, ஞாயிறு முழு நேர வகுப்புகள். காலை 9 மணிக்குப் போனால் மாலை 6 மணிக்குத்தான் வருவாள். இரண்டும் நாளும் என் பிள்ளை தான் எல்லா வேலைகளையும் செய்வான் – காலையில் காப்பி போட்டு குழந்தைகளை சனிக்கிழமை பள்ளிக்கு அனுப்புவது, இரவு பால் தோய்ப்பது வரை. அவள் சமையலறை பக்கமே இரண்டு நாட்களும் வரமாட்டாள்.

‘என்ன தவம் செய்தீர்கள், பெண்களே’ என்று பாடத் தோன்றுகிறதா? ‘கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று கூடப் பாடலாம்!

 

மூன்றாவது காட்சி:

என் பெண்ணின் தோழி அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். இரண்டு குழந்தைகள். ‘என்னம்மா அங்கேயும் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா?’ என்றேன்.

‘இல்லை மாமி. போன புதிதில் எனக்கும் வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் அடுத்தடுத்துக் குழந்தைகள். இத்தனை படித்துவிட்டு வீட்டில் ‘சும்மா’ இருக்கிறேனே என்று கோவம். அந்தக் கோவம் சிலநாட்கள் அளவுக்கு மீறிப் போகும். ஒரு நாள் என் கணவர் என்னைக் கூப்பிட்டு சொன்னார்.

‘இத பாரு. நீ வேலைக்குப் போ. நான் வேணாம்னு சொல்லலை. ஆனா குழந்தைகளை யாரு பார்த்துப்பா? இத்தனை சின்ன குழந்தைகளை டே கேர் மையத்தில் விட எனக்கு மனசில்லை. உன் அம்மா, என் அம்மா இருவருக்கும் வயசாகிவிட்டது. அதுவும் அவர்களுக்கு இங்கு வந்து வீட்டு வேலைகளையும் பண்ணிக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது ரொம்பவும் சிரமம். நான் வேலைக்குப் போய் நீ குழந்தைகளைப் பார்த்து கொள்வது நடைமுறை சாத்தியம். உனக்கு அப்படி வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்றால், உன் படிப்பு வீணாகிறது என்று மனத்தாங்கல் இருந்தால் நீ வேலைக்குப் போ. நான் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுகிறேன்.’

‘முதலில் இப்படிப் பேசுகிறாரே என்று மனது ஒடிந்து போனாலும் நிதானமாக யோசித்தேன். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று மனதிற்குப் பட்டது. வேலைக்குப் போகும் ஆசையை விட்டுவிட்டேன்.’ என்றாள் அந்தப் பெண்.

கணவனும் மனைவியும் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவது எப்போதுமே நல்லது. அப்போதுதான் நல்ல வழி பிறக்கும் – உங்களுக்கும், குழந்தைகளுக்கும்.

நாலாவது காட்சி:

நான் மேலே சொன்னது எல்லாம் இந்தக் கால இளைஞர்கள், யுவதிகள். கொஞ்சம் பின்னோக்கி அதாவது ஒரு முதிய தம்பதியைப் பார்க்கலாம்.

எனது உறவினர் ஒருவரின் அக்கா அத்திம்பேர் அவர்கள். மனைவி பாங்க் உத்தியோகம். இரண்டு குழந்தைகள். மனைவி அதி புத்திசாலி. நல்ல படிப்பு. மேலே மேலே உத்தியோக உயர்வு காரணமாக இந்தியா முழுவதும் வேறுவேறு பதவிகளில் இருக்க வேண்டிவந்தது. கணவர் பார்த்தார். தன் வேலையை விட்டார். ‘நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுகிறேன். நீ உன் திறமையை வெளியுலகில் நிரூபி’ என்று சொல்லிவிட்டு வீட்டுப் பொறுப்பையும், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

இப்போது இருவருக்குமே 70 வயதுக்கு மேல். குழந்தைகள் இருவரும் திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவ்வப்போது அங்கு போய் பேரன் பேத்திகளை கொஞ்சி விட்டு வருகிறார்கள். அவரவர்களது பொறுப்புகள் மாறியதால் இருவருக்குமிடையே எந்தவிதமான மனக் கசப்போ, மன விரிசலோ, மன உளைச்சலோ இல்லை. இது ஒரு ஆரோக்கியமான மனநிலை.

பெண்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆண்களும் குடும்ப நலன் கருதி விட்டுக் கொடுக்கலாம். உங்கள் குடும்பம் என்று வரும்போது நான்தான் பெரியவன், நான்தான் பெரியவள் என்கிற ஈகோ இருவருக்குமிடையே தலை தூக்கக் கூடாது.

குழந்தை பிறந்தபின் வேலைக்கு மீண்டும் செல்லுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க மேற்கண்ட காட்சிகள் உதவும் என்று நினைக்கிறேன்.

சில பெண்கள் கேட்கும் கேள்விகள்:

‘நான் மாதம் ……இவ்வளவு சம்பாதிக்கிறேன்…வேலையை விட முடியுமா?’

குடும்பம் குழந்தை இவற்றை விட பணம் பெரிது என்று நினைப்பவர்களை என்ன செய்வது?

சரி, இந்தப் பணத்தால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். குழந்தைக்கு ஆனை விலை, குதிரை விலை கொடுத்து பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார்கள். இரண்டே நாட்கள் அந்த பொம்மைகள் மூலையில் கிடக்கும். ‘பணத்தின் அருமையே தெரிவதில்லை’ என்று நம்மிடம் குறைபட்டுக் கொள்வார்கள்! உங்களுக்குத் தெரிந்தால் தானே குழந்தைக்குத் தெரியும்?

இன்னொரு விஷயமும் கவனத்திற்கு வருகிறது. ஒரே குழந்தை; அந்தக் குழந்தையையும் சரியாகப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை; அதனுடன் போதுமான நேரம் செலவிட முடிவதில்லை என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க, அது கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அதை ஒரு ‘வீணடிக்கப்பட்ட’ குழந்தையாக செய்து விடுகிறார்கள் என்பது ஒரு மிகப் பெரிய சோகம்.

‘உனக்காகத்தானே வேலைக்குப் போறேன். இப்படிப் படுத்தறயே…!’ சுய பச்சாதாபம் மேலிட குழந்தையிடம் கெஞ்சுவார்கள். ‘நான் உன்ன வேலைக்குப் போகச் சென்னேனா?’ அந்தக் குழந்தை இவர்களைப் பார்த்து கத்தும். சோகத்தில் இது ஒரு தனி ரகம்.

இன்னொரு வகைப் பெண்கள்:

‘எனக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் பைத்தியம் பிடித்துவிடும்’

எத்தனை வயது வரை வேலைக்குப் போக முடியும்? 60 வயதில் பைத்தியம் பிடிக்காதா? பைத்தியம் பிடிக்காமல் இருக்க முதல் காட்சியில் நாம் பார்த்த பெண் எவ்வளவு நல்ல வழியைக் காட்டியிருக்கிறாள்!

வழிகாட்டிப் பெண்கள் இன்னும் சிலரை அடுத்த வாரம் பார்ப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book