குழந்தையின் பேச்சுத் திறனுக்கும், மொழித் திறமைக்கும் குழந்தை பிறந்த முதல் வருடம் மிக மிக முக்கியமானது. கேட்கும் திறன் என்பது குழந்தையின் சமூக வாழ்க்கைக்கும், அறிவார்ந்த வளர்ச்சிக்கும் மிக மிக அவசியம். இந்த திறன் பாதிக்கப்பட்டால் குழந்தையின் பேசும் திறனும், மொழித் திறனும் கூட பதிக்கப்படும். குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்வதும் தாய்தந்தையர் பேசுவதைக் கேட்டுத்தான். தாய் பாடும் தாலாட்டையோ, ஒரு நர்சரி ரைம்சையோ கேட்க இயலாத குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பேச்சுக் குறைபாடும் உண்டாகும். காது கேளாமை என்பது வெளியே தெரியக் கூடிய குறை இல்லை. ஆதலால் உங்கள் குழந்தையின் கேட்கும் திறனை, குழந்தை பிறந்த உடனே சோதிப்பது நல்லது. எத்தனை சீக்கிரம் குறை பாடு தெரிய வருகிறதோ அத்தனை சீக்கிரம் குறைபாடு நீங்க வழியும் தேடலாம்.

 

வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது. 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தையால் பேச முடியாததால், குழந்தைக்கு இந்தக் குறை இருப்பது குழந்தை பிறந்த உடனே மருத்துவருக்கோ அல்லது பெற்றோருக்கோ தெரிய வருவதில்லை.

 

ஏற்கனவே சொன்னது போல குடும்பத்தில் யாருக்காவது காது கேளாமை அல்லது பேசும் திறனில் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சொல்லி இந்த பரிசோதனைகளை செய்யச் சொல்லலாம். குழந்தை பிறந்த பின், மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு முன் குழந்தையின் கேட்கும் திறனை சோதிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் 4000 குழந்தைகள் இந்தக் குறைபாடுடன் பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படிப் பிறக்கும் குழந்தைகள் மற்றபடி ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிப்பது உங்கள் கடமை.

 

1-3-6 நெறிமுறை (protocol)

ஒவ்வொரு குழந்தையும் கேட்கும் திறனுக்காக முதல் ஒரு மாதத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு வேளை கேட்கும் திறன் இல்லை என்றால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது மற்றும் எந்த வகை காது கேளாமை என்பதையும் முதல் மூன்று மாதத்திற்குள் கண்டறியப் பட வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குள் கேட்கும் திறனைப் பெற குழந்தைக்கேற்ற ஒரு திட்டத்தை தேர்ந்து எடுத்து, அதற்கான எல்லா உதவிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இந்தப் பரிசோதனைகளை 1-3-6 நெறிமுறை ( protocol ) என்று சொல்லுகிறார்கள்.

பிறந்த குழந்தையின் கேட்கும் திறனை அறிய என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? இரண்டுவகையான பரிசோதனைகள் இருக்கின்றன.

 

முதல்நிலைப் பரிசோதனை:

இதனை Otoacoustic Emission test என்கிறார்கள். குழந்தையின் உட்காதுகளுக்குள் வெளிப்புற சத்தத்தினால் ஏற்படும் மெல்லிய அதிர்வுகள் மிக நுண்ணிய ஒலிவாங்கி மூலம் அளக்கப்படுகின்றன. இந்த அளவுகள் ஒரு கணணிக்குள் செலுத்தப்பட்டு குழந்தையின் கேட்கும் திறன் கண்டறியப்படுகிறது.

 

இரண்டாம்நிலை பரிசோதனை

இதனை ABR (Auditory Brainstem Response test) என்கிறார்கள். இந்தப் பரிசோதனை மூலம் குழந்தையின் மெல்லிய சத்தங்களைக் கேட்கும் திறன் சோதிக்கப் படுகிறது. ஒரு சிறிய செவிப்பொறி (ear phone) மூலம் ஊக்கச் சொடுக்கல்கள் (Click Stimulus) குழந்தையின் காதுக்குள் செலுத்தப் படுகின்றன. இந்தப் பரிசோதனை ஆறு மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது.

 

இந்த இரண்டு வகையான பரிசோதனைகளும் மிக மிக பாதுகாப்பானவை. சில நிமிடங்களில் செய்து முடிக்கப்படுபவை. குழந்தைகளுக்கு இந்த பரிசோதனைகளினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரும்பாலும் குழந்தைகள் இந்த பரிசோதனைகளின் போது உறங்கிக் கொண்டு இருப்பார்கள். சில சமயங்களில் குழந்தை விழித்துக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருந்தால் இந்தப் பரிசோதனைகளின் முடிவு சரியாக இல்லாமல் போகலாம். திரும்பவும் இப்பரிசோதனைகளைச் செய்ய வேண்டிவரும்.

 

உங்கள் குழந்தையின் காது கேட்கும் திறனை ஒவ்வொரு வருடமும் சோதிப்பது நல்லது. குழந்தை பேசுவதில், அல்லது மொழியை கற்றுக் கொள்ளுவதில் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 

ஹியரிங் எய்ட் தவிர உட்காதுகளில் பொருத்தப் படும் உள்வைப்பு சாதனங்கள் (implants ), பேச்சு சிகிச்சை (speech therapy ), செவிப்புலப் பயிற்சி (auditory training ) என்று பல விதங்களில் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழி கற்கும் திறனையும் மேம்படச் செய்யலாம்.

 

மருத்துவத்துறை இப்போது பல வகையில் முன்னேறி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகள் மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வருகின்றன. பிறவிக் கோளாறுகளே இல்லாமல் குழந்தைகள் பிற்காலத்தில் பிறக்கவும் கூடும் என்ற நிலையும் வரலாம்.

 

எந்த ஒரு குறைபாடும் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டால் தீர்வு காணுவதும் எளிது. குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் காது கேளாமை குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால் செயற்கை கருவிகள் மூலம் கேட்கும் திறனை சரி செய்யலாம். குறைபாடு சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப் பட்டால் குழந்தையின் வாழ்வை அழகாக மலரச் செய்யலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book