ஒவ்வொரு விளையாட்டிற்கும் உடம்பு படுத்தும் என்று நாம் சொல்வதை அப்படியே மறுக்கிறார் டாக்டர் ஸ்பாக். குழந்தை மெள்ள மெள்ள வளர்ந்து விளையாட்டுகள் அதிகமாகிறது; வீடு முழுவதும் சுற்றிச்சுற்றி வருகிறது. தொட்டுப் பார்த்தும், வாயால் கடித்துப் பார்த்தும் பொருள்களை அறிந்து கொள்ளுகிறது குழந்தை.

அதனால் குழந்தையின் கைகள் அழுக்காகின்றன. அப்படியே உணவுப் பொருட்களைத் தொடும்போது நோய் தொற்றுகள் குழந்தையின் வயிற்றினுள் போகின்றன. இந்தத் தொற்றுகளின் விளைவாகவே குழந்தைக்கு உடல்நலம் குன்றுகிறது என்கிறார் டாக்டர் ஸ்பாக்.

குழந்தை வளர வளர அதன் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. தூங்கும் நேரம் குறைகிறது. உணவில் ருசிகள் மாறுகின்றன. அம்மாவின் பால், சீரியல் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை சாதம் பருப்பு என்று சாப்பிட ஆரம்பித்தவுடன், ‘அட! எத்தனை வகை வகையான உணவுகள் இவர்கள் (அம்மா, அப்பா) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு மட்டும் அந்த உப்புசப்பில்லாத பால், சீரியலா?’ என்று நினைக்கிறது. காரசாராமாக வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ் என்று சாப்பிடும் அம்மா எனக்கு மட்டும் ஏன் வெறும் பருப்பு சாதம், காரமில்லாத ரசம், தயிர் சாதம் ஊட்டுகிறாள்? என்று நினைக்கிறது. விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தையை ‘குளிக்க வா’ என்றால் விளையாட்டை விட்டுவிட்டு வர அது தயாரில்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் குழந்தை சாப்பிடப் படுத்துகிறது; குளிக்க படுத்துகிறது என்கிறோம். இது நியாயமா?

நம் வீட்டில் சாப்பிடப்படுத்தும் குழந்தை வேறு ஒருவர் வீட்டில் போய் நன்றாக சாப்பிடுகிறது. இது எப்படி என்று அம்மா வியக்கிறாள்.

என் பிள்ளை மூன்று வயதாக இருந்தபோது ஒருநாள் சாயங்காலம் என் பெண்ணும் நானும் அவனையும் அழைத்துக் கொண்டு பாட்டு வகுப்பிற்கு சென்றிருந்தோம். வகுப்பு முடிந்தபின் எங்கள் ஆசிரியை திருமதி சரோஜா என் பிள்ளையிடம்,’இன்னிக்கு எங்காத்துல ரசம் சாதம் சாப்பிடுகிறாயா?’ என்றார். நான் பதில் சொல்வதற்குள் என் மகன், ‘ஓ! சாப்பிடுகிறேனே..!’ என்று சொல்லி…நம்ப மாட்டீர்கள், அவர் கலந்து வந்த சாதம் அத்தனையையும் ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டு முடித்தான்.

அத்துடன் விட்டாரா எங்கள் ஆசிரியை? ‘பாரு ரஞ்சனி, உனக்கு ரசம் வைக்கவே தெரியவில்லை. தினமும் இங்கு வா. நான் உன் பிள்ளைக்கு ரசம் சாதம் கொடுக்கிறேன்’ என்று என்னை யூஸ்லெஸ் என்று சொல்லாமல் சொல்ல, எனக்கோ பயங்கர கோவம். வீட்டிற்கு வந்தவுடன் நன்றாக திட்டினேன். ‘அங்க சாப்பிடற? இங்க நான் பண்ணினா சாப்பிட முடியலையா?’ பாவம்! என்னையே பரிதாபமாக பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நான் என் இவ்வளவு கோவப்படுகிறேன் என்றே அவனுக்குப் புரியவில்லை.

இன்னொரு சமயம் ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். என் பிள்ளை சாப்பிடப் படுத்துவது BBC யில் breaking news ஆக வந்து கொண்டிருந்த காலம் அது. எங்கள் நண்பரின் மனைவி என் பிள்ளையிடம் ‘உனக்கு என்ன பிடிக்கும்’ என்று கேட்டார்.

‘இட்லி’

‘நான் பண்ணித் தரேன் சாப்பிடறயா?’

‘ஊம்…’

‘என்ன தொட்டுக்க வேணும்?’

‘நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விடுங்கோ. போதும்..’

எங்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. இவனுக்கு நல்லெண்ணெய் எப்படித் தெரியும்? சொன்னபடியே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்யை தொட்டுக் கொண்டு இட்லியை சாப்பிட்டு முடித்தான். அன்றிரவு BBC யில் breaking news ‘என் பிள்ளை சாப்பிட்டான்’ என்பது தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா?

அடுத்தநாள் வீட்டில் இட்லி செய்து நல்லெண்ணெய் விடட்டுமா சாப்பிடுகிறாயா என்றால் ‘ஊஹூம்’

வெளியில் சாப்பிடும் குழந் தை வீட்டில் ஏன் சாப்பிட மறுக்கிறது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அம்மா தான் காரணம். ‘நான் இப்போ சாதம் கொண்டு வருவேன். அடம் பிடிக்காம சாப்பிடணும், தெரியறதா?’ குழந்தை அடம் பிடிக்காமல் இருக்கும்போதே இப்படி சொல்லுகிறாள் அம்மா. ‘நீ இப்ப சாப்பிடலைன்னா பூச்சாண்டி வந்து உன்ன பிடிச்சுண்டு போயிடுவான்’ என்று பலவிதமாக குழந்தையை நாம் படுத்துகிறோம்.

சாப்பிடும் நேரம் என்பது குழந்தைக்கு மிகவும் இம்சையான நேரமாக மாறுகிறது வீட்டில். வெளியிடங்களில் அம்மாவும் இதைபோல ‘கண்டிஷன்கள்’ போடுவதில்லை. வெளியிடங்களில் சமத்தாக இருக்கவேண்டும் என்று நாம்தான் சொல்லிக் கொடுக்கிறோமே! அம்மாவின் மிரட்டல் இல்லாமல் குழந்தை சமத்தாக சாப்பிடுகிறது.

ஸ்கூல் போகும் குழந்தை என்றால்,’இரு நீ சாப்பிட படுத்தற என்று உங்கள் மிஸ்-இடம் சொல்லுகிறேன்’ என்று ஸ்கூல், சாப்பாடு இரண்டையும் பிடிக்காமல் செய்துவிடுகிறோம்.

இளம் தாய்மார்கள் சற்று புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை சாப்பிட்டு முடித்தவுடன் உங்களுக்குக் ‘கால்’ இருக்கிறது; உங்கள் பாஸ் அன்று உங்களுக்கு செம டோஸ் விட்டார் இதெல்லாம் குழந்தைக்குப் புரியாது. அலுவலகம் போகும் தாய்மார்களின் குழந்தைகள் பகலெல்லாம் பாட்டி, தாத்தாவிடம் சமத்தாக இருக்கும். அம்மாவைப் பார்த்தவுடன் அவளை முகம் கழுவிக் கொள்ளக் கூட விடாது. அவளை காப்பி சாப்பிட விடாது. காரணம் அம்மா அந்தக் குழந்தைக்கு அபூர்வமாக கிடைக்கிறாள். அதனால் அவளை விட அதற்கு மனசு வருவதில்லை. காலையில் மறைந்து போகும் அம்மா இரவுதான் மறுபடி வருகிறாள். இப்போதும் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கிறது. குழந்தை அவளை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறது. அதுதான் அம்மாவைக் கண்டவுடன் அழுகைக்கு, பிடிவாதத்திற்குக் காரணம்.

கொஞ்சம் குழந்தைக்காக உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். அதனுடன் விளையாடுங்கள். அதன் வளர்ச்சியை ரசியுங்கள். மழலையை கேட்டு மகிழுங்கள். உங்கள் அலுவலகம், உங்கள் பாஸ் எல்லாமே எப்பவும் இருக்கும். ஆனால் குழந்தையின் இந்த விளையாட்டு, மழலை மறுபடி வராது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book