ஒரு வயதுக் குழந்தை துருதுறுப்பின் மறு உருவம் என்று சொல்லலாம்.கை, கால்கள் முளைத்து சுதந்திரமாகத் திரிய கொஞ்சம் தைரியமும் வந்துவிட்டது. என்ன பண்ணலாம் என்று சுற்றிச்சுற்றிப் பார்க்கிறது.

 

சென்ற மாதம் என் தம்பியின் பேரனுக்கு ஆண்டு நிறைவு. ஆயுஷ் ஹோமம் காதுகுத்தல் முடிந்து குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தான் என் தம்பி பிள்ளை. ஒரு கையை மட்டும் வாசல் பக்கம் காண்பித்து ‘ஊம்…ஊம்…!’ என்றது. வெளியே போகலாம்… உலகத்தில் பார்க்க எத்தனையோ இருக்கிறதே, இப்படி உள்ளே உட்கார வைத்து என்னைப் போட்டு பாடாபடுத்தறேளே என்று சொல்லாமல் சொல்லிற்று குழந்தை. வெளியில் கூட்டிக் கொண்டு வந்தால் தெருவில் போகும் அத்தனை ஆட்டோக்களையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தது. ஒவ்வொரு ஆட்டோவும் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி போகும் வரை கழுத்தை திருப்பித் திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தது. அதன் விரிந்த கண்களுக்குள் இந்த உலகம் அடங்கவேயில்லை. அந்தக் குழந்தையை வெகுவாக ரசித்துக் கொண்டு நின்றேன். எத்தனை நேரம் வெளியில் நின்றாலும் அலுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. உள்ளே வந்தால் அழுகை!

 

வீட்டிற்குள்ளும் குழந்தை சும்மா இருக்காது. சும்மா இருந்தால் அது குழந்தை இல்லையே! கையில் எது அகப்பட்டாலும் வாயில் வைத்துக் கொள்ளும். அப்படித்தான் இத்தனை நாள் அதற்கு பொருள்களை அறிந்து பழக்கம். இப்போது ஒரு புது திறமை குழந்தைக்கு வந்திருக்கிறது. பொருட்களை கையில் பிடித்துக் கொள்ள முடிகிறது. ஒரு சமயம் கையில் பிடித்திருந்த பொருள் கீழே விழுகிறது. அட! இப்போது வேறு மாதிரியான சத்தம் வருகிறதே! ஓ! கீழே போட்டால் இப்படி சத்தம் வருமா? குழந்தை புது பாடம் கற்றுக் கொள்ளுகிறது. மறுபடி கீழே போடுகிறது.

 

இப்போது குழந்தை எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்கிறது. குழந்தையின் கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தவுடன், அம்மா ஓடிவந்து எடுத்துக் கொடுக்கிறாள். மறுபடி குழந்தை பொருளை கீழே போடுகிறது. மறுபடி அம்மா! குழந்தை இதை ஒரு விளையாட்டு என்று நினைக்கிறது. சில தடவைகள் எடுத்துக் கொடுத்த அம்மா, சோர்ந்து போய் அடுத்தமுறை எடுத்துக் கொடுப்பதில்லை. குழந்தை அழுகிறது. அம்மா எடுத்துக் கொடுக்காததற்காக இல்லை. விளையாட்டு பாதியில் முடிந்து விட்டதே என்று. எத்தனை முறை அம்மாவால் எடுத்துக் கொடுக்க முடியும்? ஒரு தடவை இந்த மாதிரி எடுத்துக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தை மறுபடி மறுபடி எதிர்பார்க்கும். அதனால் முதலிலிருந்தே எடுத்துக் கொடுக்காதீர்கள்.

 

சில விஷயங்களை குழந்தைக்கு நீங்கள் முதல் தடவையே தீர்மானமாகச் சொல்லி விடவேண்டும். பொருள்களைக் கீழே போட்டால், அல்லது வீசி எறிந்தால் நீங்கள் எடுத்துக் கொடுக்க மாட்டீர்கள்; குழந்தையே தான் வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பல தடவை எடுத்துக் கொடுத்துப் பழக்கிவிட்டு, பிறகு குழந்தையை அடம் பிடிக்கிறது என்று சொல்லக் கூடாது.

 

சென்ற சனிக்கிழமை திரு சுகிசிவம் ‘இந்தநாள் இனிய நாளி’ல் ஒரு கருத்து சொன்னார்.

 

ஒரு முறை அமிர்தானந்தமயி அன்னையிடம் ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு வந்தனர் பெற்றோர். நான்கு வயதுப் பையன். அன்னை அவனை அருகே அழைத்து ‘உன் பெயர் என்ன?’ என்கிறார். சிறுவன் ஒருமுறை அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறான். ஒருமுறை அப்பாவைத் திரும்பிப் பார்க்கிறான். பிறகு தயங்கியவாறே பெயர் சொல்லுகிறான். ‘பள்ளிக்கூடம் போகிறாயா?’ மறுபடி அம்மா அப்பாவை திரும்பிப் பார்த்துவிட்டு பதில் அளிக்கிறான் சிறுவன்.

 

அன்னை சொன்னாராம்: ’ஏன் குழந்தைக்கு இப்படி துளிக்கூட சுதந்திரம் கொடுக்காமல் வளர்த்திருக்கிறீர்கள்? பெயர் சொல்லக் கூட உங்களை கேட்கவேண்டும் என்றால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்’.

 

சில குழந்தைகள் பயம் என்பதே தெரியாமல் யார் வீட்டிற்குப் போனாலும் சோபாவில் ஏறிக் குதிப்பதும், அலைபேசியை எடுத்துப் பார்ப்பதும், மொத்தத்தில் ‘அக்குல ஏறி தொக்குல பாயும்.’ இன்னும் சில குழந்தைகள் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களிடம் பணம் கேட்கும். இந்தப் பழக்கங்களை முதலிலிருந்தே பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.

 

சில பெற்றோர் விசித்திரமாக பேசுவார்கள். கன்னாபின்னாவென்று விஷமம் செய்யும் குழந்தையைப் பார்த்து ‘இது நம்ம வீடு இல்லம்மா, இங்கெல்லாம் இப்படி பண்ணக்கூடாது’. அளவுக்கு மீறிய சேட்டை உங்கள் வீட்டிலும் செய்யக் கூடாது. பிறர் வீட்டிலும் செய்யக் கூடாது. குழந்தைக்குத் தெரியாது; ஆனால் உங்களுக்குத் தெரியும். குழந்தைக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுங்கள். ‘நான் சொன்னா கேக்கவே மாட்டான் இவன்’ என்று சொல்லாதீர்கள். அது உங்களுக்குத்தான் அவமானம். உங்கள் பேச்சை உங்கள் குழந்தையே கேட்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

 

வீட்டிற்கு யாராவது வந்தால் ‘வணக்கம்’ சொல்லக் கற்றுக் கொடுங்கள் முதலில்; பல வீடுகளில் குழந்தைகள் ‘பை’ சொல்லத்தான் பழகி இருக்கும். ஒரு வயதிலிருந்தே இந்தப் பழக்கங்களை ஏற்படுத்துங்கள். ‘மாமா கிளம்பறாரு, பாரு, சிரிச்சிகிட்டே பை சொல்லு’ என்பார்கள். மாமா கிளம்புவது சிரிப்பா சிரிக்கும் விஷயமா?

திரு சுகி சிவம் தொடர்ந்து கூறினார்:

முகமது அலி என்று குத்துச்சண்டை வீரர். ஒருமுறை குத்துச் சண்டையில் ஜெயித்தவுடன் ‘நான் கடவுள்’ என்று மார்தட்டிக் கொண்டவர்.

ஒருமுறை அவரது மகள் வெளியே செல்ல உடை அணிந்துகொண்டு அவர் முன் வந்து நின்றாளாம். மகளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சொன்னாராம்: ‘ மகளே! வைரம் எப்படிக் கிடைக்கிறது தெரியமா? பல ஆயிரம் அடிகள் பூமியில் தோண்ட வேண்டும். பாறைகளுக்கு இடையில் வைரம் கெட்டிப்பட்டு இருக்கும். அதை தோண்டி எடுப்பது என்பது அத்தனை சுலபமில்லை. ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டுமா என்றால் விலை உயர்ந்த பொருட்கள் சுலபத்தில் கிடைக்காது. வைரம் மட்டுமல்ல; தங்கமும் இப்படித்தான். வைர, தங்க சுரங்கங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவற்றை எடுப்பார்கள். உன் உடலும் அதைபோலத்தான். விலை மதிப்பற்றது. உன் உடையைப் பார்த்து யாரும் நீ சுலபத்தில் அடையக் கூடியவள் என்று நினைத்துவிடக் கூடாது. அதற்குத் தகுந்தாற்போல் உடை அணிந்து கொள்’

எத்தனை விவேகமான பேச்சு! அவரது மகள் அருகில் வரக் கூட எல்லோரும் பயப்படுவார்கள். உடை என்பது எப்படி உடம்பை மூடி ஒரு கவசம் போல இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பாருங்கள்.

குழந்தைகள் வளர்ப்பதிலும், குழந்தைகளுக்கு நல்லவற்றை அறிமுகம் செய்வதிலும் நாமும் விவேகமாக இருப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book