பெரிய ஊடக நிறுவனங்கள் சொல்லாத எத்தனையோ விஷயங்களை வலைப்பூ எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் வலைப்பூ எழுத வந்த பின்னணியை எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

 

 

நான் முதல்முதலில் எழுதியது ஒரு சமையல் குறிப்பு தான்! நம்புவீர்களா?

மூவர்ண சாதம் என்ற பெயரில் எழுதி முதல் பரிசும் பெற்றேன். அதுவே நான் பத்திரிகைகளுக்கு எழுதி வாங்கிய முதல் மற்றும் கடைசி பரிசு. அதேபோல நான் எழுதிய முதல் மற்றும் கடைசி சமையல் குறிப்பும் அது!

 

 

2000 ஆம் ஆண்டு எனது முதல் கதை ‘மங்கையர் மலரி’ ல் வெளிவந்தது. மிகவும் உற்சாகமாக பல பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். அனுப்பிய சூட்டோடு பல கதை கட்டுரைகள் திரும்பி வந்தன. ஆனாலும் விடாமல் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். பல கதைகள், கட்டுரைகள் வெளிவந்தன. 2006 வரை இது தொடர்ந்தது. பிறகு என் கவனம் ஆங்கில மொழி பயிற்றுவிப்பதில் திரும்பியது. பகுதி நேர வேலை என்றாலும் அடுத்தடுத்து வகுப்புகள் எடுக்க வேண்டி வந்தது. சில நிறுவனங்களுக்கும் ஆங்கில மொழிப் பயிற்சியாளராக இருந்ததால் அதிகம் எழுத முடியவில்லை.

 

 

ஆனால் என் மாணவர்களுக்கு வகுப்பிற்கு நடுவே பல சம்பவங்களை கதை போல சொல்வேன். என் உறவினர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். மனதின் அடியில் எழுத வேண்டும் என்று ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

 

 

2010 ஆண்டு என் பிள்ளைக்கு கல்யாணத்திற்குப் பெண் பார்க்க ஆரம்பித்தேன். உறவினர்கள், நண்பர்கள் என்று ஒவ்வொருவரும் அவரவர்கள் அனுபவத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அறிவுரை கொடுத்து பயமுறுத்த ஆரம்பித்தனர்.

 

 

நல்லவேளை, வெகு சீக்கிரம் நல்ல பெண்ணாக எனக்கு மாட்டுப்பெண் வந்தாள். அவளுக்கு என் வீடு புதிது. எனக்கு மாமியார் பதவி புதிது. இருவரும் எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயன்றோம் என்பதை ஒரு கட்டுரையாக எழுதினேன். ஒரு பெண்கள் பத்திரிகைக்கு அனுப்பினேன். பிரசுரம் ஆகவில்லை.

 

 

இதற்கிடையில் என் பிள்ளை எனக்கு வாங்கிக் கொடுத்த மடிக் கணனியில் தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டேன். இந்தக் கட்டுரையை கணணி வழியே அந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.

 

அது பிரசுரம் ஆகாததனால் நாமே வெளியிட முடியுமா என்று ஆராய்ந்த போது வேர்ட்ப்ரஸ் தளம் வழி காட்டியது. எனது முதல் பதிவு ‘நானும் என் ஸ்னுஷாவும்’ (சம்ஸ்க்ருத மொழியில் ஸ்னுஷா என்றால் மாட்டுப்பெண்).

 

 

இணையத்திலே தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா என்று தேடிக் கொண்டே இருந்தேன். ஆங்கிலத்தில் சில தளங்களில் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனாலும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

 

 

ஒரு இணைய இதழில் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒன்று எழுதி அனுப்புவேன். வேர்ட்ப்ரஸ் தளத்தில் ஒரு பதிவுடன் நிறுத்தியிருந்தேன். ஒருநாள் யதேச்சையாகப் பார்த்த போது நிறைய பேர் வந்து படித்திருப்பது தெரிந்தது. மெல்ல மெல்ல பதிவு எழுதுவதின் சூட்சுமம் தெரிய வந்தது. நான் ஏற்கனவே எழுதி வெளிவந்திருந்த பதிவுகளை எனது தளத்தில் பதிய ஆரம்பித்தேன். எனது சொந்தக் கதையை படித்துவிட்டு கனடா நாட்டிலிருந்து வரும் ‘ஊர்’ இணைய இதழில் எழுத விருப்பமா என்று கேட்டு மின்னஞ்சல் வந்த அன்று நான் பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே!

எனக்கு பயனர் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து நானே எழுதி நானே வெளியிடும் வாய்ப்பையும் கொடுத்தனர். அவர்களுக்காக நிறைய மொழிபெயர்ப்புகளும் செய்ய ஆரம்பித்தேன்.

 

 

 

இனி வரும் காலங்களில் வலைப்பூவிலிருந்து இணையதளங்களுக்கு, ஊடகங்களுக்கு எழுதும் வாய்ப்பு வலைப்பூ எழுத்தாளர்களுக்கு கிடைக்கக்கூடும். இதில் உங்களுக்கு அனுபவம் உண்டு. அதைப்பற்றிய வழிகாட்டுதலை மற்றவர்களுக்குச் சொல்லுங்களேன்.

 

 

நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. வலைப்பதிவாளர்களுக்கு ஊடகங்களில் எழுதும் வாய்ப்பு வருகிறது. இப்போதே பல வலைப்பதிவாளர்கள் பல ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். அங்கு வெளியாவதை தங்களது வலைப்பக்கங்களில் போட்டுக் கொள்ளுகிறார்கள்.

 

 

நம் வலைப்பூவில் நாம் எழுதுவதற்கும், ஒரு பத்திரிக்கைக்கு எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழி, நடை எல்லாமே மாறும். மொழி என்று நான் சொல்வது வலைப்பூவில் நாம் பயன்படுத்தும் பேச்சு தமிழ்/வட்டாரச் சொற்கள் போலில்லாமல் நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல நாம் எழுதும் பாணியும் மாறும்.

 

 

வலைப்பூவில் இருக்கும் சுதந்திரம் ஊடகங்களில் எழுதும்போது கிடைக்காது. நாம் எழுதி அனுப்பும் படைப்புக்களை அவர்களது பத்திரிக்கையின் கொள்கைகளுக்குத் தகுந்தாற்போல மாற்றி வெளியிட அவர்களால் முடியும். நம் விருப்பத்தையும் எழுத முடியாது. நாம் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் அவர்களுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு மற்றவற்றை வெட்டி விடுவார்கள்.

 

 

இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் ஊடகங்களுக்கு எழுதுவது சுலபம்தான்.

 

 

 

புத்தகங்கள் படிக்கும் வழக்கம் எனக்கு உண்டு. சில புத்தகங்களைப் படிக்கும் போது இதைத் தமிழ் படுத்தினால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். மொழிபெயர்ப்புக்கு முயலலாம் என்று முடிவு செய்தேன். கிழக்குப் பதிப்பகம் நிறைய மொழி பெயர்ப்புகள் வெளியிடுகிறார்கள் என்று பதிவுலக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்களுக்கு தொலைபேசினேன்.

 

 

என் அதிர்ஷ்டம் நேரடியாக திரு மருதனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் என் மொழிபெயர்ப்பு ஆவலைச் சொன்னேன். அவர் எனது ஆவலை பரிசீலிப்பதாகவும், என்னுடைய கட்டுரைகளின் இணைப்புகளை அனுப்பும்படியும் சொன்னார். அதற்கு முன் கிழக்குப் பதிப்பகத்தின் மாத இதழான ‘ஆழம்’ பத்திரிக்கைக்கு எழுத சொன்னார். கடந்த நாலு மாதமாக ஆழம் பத்திரிகையில் எழுதி வருகிறேன்.

 

 

எனது எழுத்து பயணத்தில் இது ஒரு மிகப் பெரிய திருப்பம். என் வலைப்பூவில் நான் எழுதுவதற்கும், ஆழம் இதழில் எழுதுவதற்கும் மொழி, நடை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். திரு மருதன் நிறைய உதவுகிறார். எதை முக்கியப் படுத்தி எழுத வேண்டும், எந்தெந்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.

 

 

நம்மைத் தேடி வாய்ப்பு வரும் என்று காத்திராமல் நாமே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

 

 

 

4பெண்களில் தொடர் எழுதுவதில் உங்களுக்கேற்பட்ட அனுபவம்…

 

 

முதல்முறையாக ஒரு தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது, நான்குபெண்கள் தளத்தின் மூலம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த குழந்தை வளர்ப்பு பற்றி.

 

 

அவர்கள் கொடுக்கும் சுதந்திரம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் எழுதுவதை எடிட் செய்யாமல் போடுகிறார்கள். இந்தத் தொடருக்கு வரும் கருத்துரைகளுக்கு நானே பதிலும் எழுதுகிறேன். இதை விட வேறென்ன வேண்டும் ஒரு எழுத்தாளிக்கு?

 

 

ஆரம்பத்தில் சில பயங்கள் இருந்தன. முதல் பயம்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவர வேண்டும். அதற்குள் நான் எழுதி அனுப்ப வேண்டும்.

 

 

ஏனோதானோ என்று எழுத முடியாது. எழுதுவதில் ஒரு உண்மை இருக்க வேண்டும். நான் படித்தவைகளுடன், என் அனுபவத்தையும் சேர்த்து எழுத முடிவு செய்தேன்.

 

 

இன்னொரு பயம்: தொடராக எழுதுவதில் கொஞ்சம் தயக்கமும் இருந்தது. ஒரு கட்டுரை என்றால் சமாளிக்கலாம்; தொடராகத் தொடர்ந்து தொடர முடியுமா என்று மனதின் ஒரு மூலையில் சந்தேகம். ஆனால் எழுத ஆரம்பித்து சக பதிவாளர்களின் உற்சாகமான பின்னுரைகளும் வர, இதோ இன்று 25 வது வாரம்!

 

 

இந்தக் கட்டுரைத் தொடர் மருத்துவக் கட்டுரையாக ஒரு முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதுவரை மூன்று முறை இந்தக் கட்டுரைத் தொடர் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

 

 

இந்தத் தொடர் தந்த அனுபவத்தில் இப்போது மருத்துவக் கட்டுரைகள் எழுதச் சொல்லி வாய்ப்புக் கொடுத்த நான்குபெண்கள் தளத்திற்கு என்னுடைய அன்பு கலந்த நன்றி. இத்தொடர்கள் எனது எழுத்துக்களின் இன்னொரு பரிமாணம் என்றே நினைக்கிறேன்.

 

 

 

வீட்டிலிருந்தபடியே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய நேர மேலாண்மை பற்றி சொல்லுங்கள்..

 

வீட்டிலிருந்தபடியே எழுதுவதால் நேரம் என் கைகளுக்குள். காலை எழுந்தவுடன் கணணி அருகே வருவதில்லை.

 

 

வீட்டில் பிள்ளை, மாட்டுப்பெண் இருவருக்கும் அலுவலகம் போக வேண்டும். சமையல், கையில் எடுத்துக் கொண்டு போக சிற்றுண்டி எல்லாம் காலை 9.30 மணிக்குள் செய்துவிடுவேன். அவர்கள் இருவரும் கிளம்ப 10.30 மணி ஆகும். அதன் பிறகு 11 மணி அளவில் கணணி முன் உட்காருவேன். ஒருமணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போடுவேன். பிறகு யோகா வகுப்பு. திரும்பி வர மாலை 6.30 மணி ஆகும். காலையிலேயே எல்லாம் முடித்து விடுவதால் இரவு அதிகம் சமையல் வேலை இருக்காது. அதனால் அப்போது கணணி முன் அதிக நேரம் செலவு செய்வேன். முதலில் அந்த வாரத்திற்கு என்ன எழுத வேண்டுமோ அதை முடிப்பேன். பிறகு மற்ற பதிவாளர்களின் தளங்களை பார்த்து படித்து பின்னூட்டம் போடுவேன்.

 

 

 

தமிழ் இணையதளங்களை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்?

 

 

தமிழ் இணையதளங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பிரபல எழுத்தாளர்களும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.

மேம்போக்கான விஷயங்களை விட்டுவிட்டு நல்ல செய்திகளைத் தர இணைய தளங்கள் முன்வரவேண்டும். நல்ல பிறமொழிப் புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடலாம்.

உலகம் முழுவதும் நம் எழுத்தைப் படிக்கிறார்கள். நமது பொறுப்புகளும் அதிகம்.

சென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.

இணைய தளத்தில் எழுதுபவர்கள் எப்போதும் நல்ல பின்னூட்டங்களே வரும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எதிர்மறை கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

நான்குபெண்கள் தளத்தில் குழந்தை வளர்ப்பு தொடரில் பெண்கள் குழந்தை பிறந்த பிறகு வேலைக்குச் செல்லலாமா என்பதைப் பற்றி எழுதியதற்கு, காராசாரமான பின்னூட்டங்கள் வந்தன. ஒரு விஷயத்தைப்பற்றி விவாதிக்கையில் இருபக்கமும் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்வதுதான் ஒரு எழுத்தாளரின் கடமை. இந்த விவாதங்கள் எனக்கு பெரிய மனநிறைவைக் கொடுத்தன.

ஒருவரை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கக் கூடாது. அதேபோல சுதந்திரம் இருக்கிறது என்று வக்கிரமான முறையில் சொல்லக்கூடாத மொழியில் எழுதுவதும் தவறு.

இன்னும் நிறைய பேர்கள் இணையத்தில் எழுத முன்வரவேண்டும். அவரவர்கள் துறையில் அவர்களது அனுபவம், புது முயற்சிகள், செய்திகள் என்று பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் இருக்கும் அளவு விஷயங்கள் தமிழில் இல்லை. இந்தக் குறை போகவேண்டும்.

எதிர்கால திட்டங்கள்:

 

திட்டங்கள் என்று எதுவுமில்லை. நிறைய விஷயங்களை என் படைப்புகளின் மூலம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்புத் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். எப்படி, யார் மூலம் வாய்ப்பு கிடைக்குமென்று தெரியவில்லை.

 

நான் படித்த இரண்டு புத்தகங்கள் இரண்டுமே பெண்களுக்கு மிகவும் தேவையானவற்றை சொல்பவை. இவற்றை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.

 

நிறைய பேர் என் எழுத்தைப் படிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல என் எழுத்துக்களும் இருக்க வேண்டும்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book