‘பூந்தளிர்’ என்ற வலைபதிவு எழுதிவரும் திருமதி தியானா தனது பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘நான் வேலை செய்யும்போது யாராவது என்னைக் கண்காணித்தால் எனக்குப் பிடிக்காது; ஆனால் என் குழந்தை, தண்ணீர் சிந்தியிருக்கிறது என்று சொன்னவுடன் துணியை எடுத்துக் கொண்டுவந்து துடைப்பதைப் பார்த்த போது சந்தோஷமாக இருக்கிறது’ என்கிறார். இளம் குழந்தைகள் இருக்கும் அனைவருமே படிக்க வேண்டிய குழந்தைகள் பற்றிய பதிவுகளை எழுதுகிறார் இவர். குழந்தைகளின் கற்பனைத்திறனை எப்படியெல்லாம் அதிகப்படுத்தலாம் என்று பல விஷயங்களைச் சொல்லுகிறார்.

ஒரு நல்ல வலைப்பதிவை தெரிந்து கொண்ட சந்தோஷத்துடன் நம் செல்வ களஞ்சியத்தைப் பார்ப்போம்.

அம்மா செய்வதை குழந்தை அப்படியே காப்பி அடிக்கிறது. இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல; தாய்மொழியை குழந்தை கற்பது கூட இப்படி காப்பி அடித்துத்தான். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

நல்ல விஷயங்களை மட்டுமல்ல, நம் தவறான செய்கைகளையும் குழந்தை காப்பி அடிக்கிறது.

என் உறவினரின் பெண் உப்புமா சாப்பிடும்போது அதில் தாளித்துக் கொட்டியிருக்கும் பருப்புகளையெல்லாம் தனியாக எடுத்து வைத்துவிடுவாளாம். அவளது குழந்தையும் இப்போது அதேபோல செய்ய ஆரம்பித்தவுடன்தான் அந்தப் பெண்ணிற்கு தான் செய்து வந்த செயல் தவறு என்று புரிந்திருக்கிறது.

நீங்கள் அலுவலகத்திலிருந்து வந்தவுடன், காலணிகளை ஒரு புறம் எறிந்துவிட்டு வந்தீர்களானால் நாளை உங்கள் குழந்தையும் அப்படியே செய்யும். நல்ல பழக்கங்களை குழந்தையிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். வாயால் சொல்லி, அடித்து பழக்கப் படுத்துவதைவிட உங்கள் செயலிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நீண்ட காலத்திற்கு அவர்களை நல்வழிப்படுத்தும்.

ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, விளையாடும் பொம்மைகளை விளையாடி விட்டு, திரும்பவும் கூடையிலோ, அல்லது அலமாரியிலோ வைக்கும்படி பழக்கப்படுத்துங்கள். ஒரு பொம்மையை நீங்கள் கொண்டுபோய் வைத்துவிட்டு மற்ற பொம்மைகளை எடுத்து வரும்படி குழந்தையை சொல்லுங்கள். அவற்றை நீங்கள் அடுக்கி வையுங்கள். சில நாட்களில் குழந்தை தனது பொம்மைகளை எடுத்து வர ஆரம்பிக்கும். இப்போது அவற்றை அடுக்கச் சொல்லிக்கொடுங்கள். உங்களுக்கும் வேலை குறையும். குழந்தையும் நல்ல ஒரு பழக்கத்தை கற்றுக் கொள்ளும்.

இதேபோல போட்டுக் கொள்ளும் உடைகளை மடித்து வைக்கக் கற்றுக் கொடுங்கள். அவிழ்த்துபோடும் உடைகளை அதற்குண்டான கூடைகளில் போட வேண்டும் என்று முதலில் நீங்கள் செய்து காண்பித்து விட்டு பிறகு குழந்தையை செய்யச் சொல்லுங்கள்.

எந்த பொருளை எடுத்தாலும் எடுத்த இடத்தில் திரும்ப வைக்க வேண்டும் என்ற பழக்கத்தை முதலில் குழந்தையிடம் ஏற்படுத்துங்கள். நம்மில் பலர் தினமும் ‘தேடல் மன்னர்’ களாகவே இருக்கிறோம். சிலர் எல்லாவற்றையும் தேடுவார்கள். அலுவலக ஐடி கார்டிலிருந்து பர்ஸ் வரை அலுவகம் கிளம்பும் முன் தேடுவார்கள். இவர்களின் தேடலில் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் செமத்தியாக அர்ச்சனை வேறு கிடைக்கும். அதேபோல ஒரு தொலைபேசி எண்ணை எழுதி வைத்துக் கொள்ள ஒரு பேனாவை பல வீடுகளில் தேடி தேடி இளைப்பார்கள்.

ஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்?

 

• பொம்மைகளை அடுக்குவது – இதையும் ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

• படம் பார்க்கும் புத்தகங்களை அலமாரியிலிருந்து எடுத்து வந்து மறுபடி அங்கேயே வைப்பது

• சாப்பிட்டவுடன் வாய் துலக்குதல்

• குளித்துவிட்டு வந்தவுடன் கடவுளுக்கு நமஸ்காரம் செய்வது

• சின்ன சின்ன ஸ்லோகங்களை சொல்லுதல்

• ஒன், டூ பாத்ரூம் போய்வந்தவுடன் கால்களை அலம்புவது. இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு தயவு செய்து டிஷ்யூ பயன்படுத்த சொல்லிக் கொடுக்காதீர்கள்.

எதையுமே வற்புறுத்தாதீர்கள். நீங்கள் தொடர்ந்து இவற்றை செய்யுங்கள். குழந்தையும் தானாகவே செய்யும்.

இன்னொரு விஷயத்திலும் பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் உறவினர்கள், நண்பர்கள் சிலரை நாம் ‘செல்லப்பெயர்’ வைத்து அழைப்போம். குழந்தைகள் இருக்கும்போது இவற்றைச் சொல்லாதீர்கள்.

என் பிள்ளை ஒருநாள் என் பெண்ணிடம், ‘நம்ம அப்பா ஆபீசில் ‘கரடி’ என்று ஒரு மாமா இருக்கிறார், தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறான். எனக்கு ரொம்பவும் வியப்பு. அது யார் கரடி என்று விசாரிக்கையில் என் கணவர் சொன்னார். ‘அதாம்மா, பவுண்டரியில் வேலை செய்யும் என் நண்பரை நான் ‘கரண்டி’ என்று சொல்லமாட்டேனா?’ என்று. என்னவர் கரண்டி என்று சொன்னது குழந்தையின் சொல்லில் ‘கரடி’ ஆகிவிட்டது!

நாங்கள் முதலில் இருந்த வீட்டில் அனுராதா என்றொரு பெண்மணி. அவர் சற்று பருமனாக இருப்பார். அவருக்கு நாங்கள் வைத்த செல்லப்பெயர் ‘அணுகுண்டு’. கடைவீதியில் அவரை தூரத்தில் பார்த்துவிட்டு என் பேரன், ‘பாட்டி! அணுகுந்து மாமி, அணுகுந்து மாமி!’ என்று சத்தம் போட, அவன் வாயை அப்படியே பொத்தி, ‘சூ! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது’ என்று கோபித்துக் கொண்டோம். கோபிப்பதில் பலன் ஒன்றுமில்லை. நம் தவறுக்கு குழந்தைகள் என்ன செய்வார்கள்?

அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகளிடம், ‘ ஏண்டி! உங்க வகுப்பு ஆசிரியை யாரு? குண்டா, கண்ணாடி போட்டுண்டு போன வருடம் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தாளே, அவளா? என்று கேட்காதீர்கள்.

‘உங்க அம்மா சொன்னாளா, சரியான லூசு!’ என்றோ ‘உங்க பாட்டிக்கு வேறென்ன வேலை, கழுத்தறுப்பு என்றோ சொல்லாதீர்கள். குழந்தையின் இளம் உள்ளம் மாசுபடும்.

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது ரொம்பவும் உண்மை தான்.

ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான்.

அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book