‘நீ யார் செல்லம்? அப்பா செல்லமா? அம்மா செல்லமா?’

நம்மில் 99% பேர் ஒரு குழந்தையிடம் கேட்கும் கேட்கக்கூடாத பைத்தியக்காரத்தனமான கேள்விகள் இவை!

குழந்தையை உருவாக்குவதிலிருந்து அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகி திருமணம் முடிக்கும் வரை இருவரின் கவனிப்பும் குழந்தைக்குத் தேவை. குழந்தையின் அறிவு, சாமார்த்தியம், ஆளுமை, உருவம், பேச்சு, நடவடிக்கை இவை எல்லாமே அப்பா, அம்மாவின் பாதிப்புடன்தான் இருக்கும். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானம் செய்வது ஆணின் குரோமோசோம் என்றாலும், மற்ற விஷயங்களில் அப்பாவின் பங்கு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் இருக்கும். இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் சந்தோஷமே!

இன்றைய இளைய தலைமுறை அப்பாக்கள் உண்மையில் குழந்தையின் வளர்ப்பில் அதிகம் பங்கு பெறுகிறார்கள். நன்றி: அவர்களது அமெரிக்க வாசம். அங்கு ஒரு பெண் தாயாகும் போதே கணவனுக்கும் குழந்தைக்கு டயபர் மாற்றுவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பயிற்சி அளித்துவிடுகிறார்கள்.

டயபர் என்றவுடன் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது என் மாமா ஒருவர் தில்லியிலும், ஒருவர் கோட்டா (ராஜஸ்தான்) விலும் இருந்தார்கள். . என் முதல் குழந்தைக்கு ஐந்து மாதம் இருக்கும் போது நாங்கள் குழந்தையுடன் முதலில் கோட்டா போனோம். என் மாமாவிற்கும் கைக்குழந்தை. என் குழந்தையை விட சின்னவன். எனக்கு இங்கு ஒரு வியப்பான விஷயம் காத்திருந்தது. என் மாமி அவ்வப்போது அந்தச் சின்னக் குழந்தையை பாத்ரூமிற்கு எடுத்துக்கொண்டு போய் ‘உஸ்ஸ்ஸ்…..உஸ்ஸ்ஸ்…’ என்று வாயால் சத்தம் செய்வார். அது சமத்தாக மூச்சா போய்விடும். எனக்கு ரொம்பவும் வியப்பு. எப்படி குழந்தைக்கு பயிற்சி அளித்தீர்கள் என்று கேட்டேன். அவ்வப்போது இப்படி செய்து கொண்டிருந்தால் பழகிவிடும் என்றார் மாமி. நானும் அப்படி செய்ய ஆரம்பித்தேன். ஊஹும்….! நான் ஏதோ விளையாட்டு காட்டுகிறேன் என்று என் குழந்தை ‘கிளு கிளு’ வென்று சிரிக்கும். இந்தக் காலம் மாதிரி டயபர் இல்லாத காலம் அது.

இப்போது கவலையில்லை டயபர் போட்டுவிடுகிறார்கள்.

ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் குழந்தைகளுக்கு ஒன், மற்றும் டூ பாத்ரூம் போக பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.

குழந்தைக்கு ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குள் அதன் சிறுநீர்ப்பை அதிகப்படியான சிறுநீரை நீண்ட நேரம் அடக்கிக் கொள்ளும் அளவிற்கு வலுவானதாக ஆகிவிடும். அதாவது இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும்படி இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொண்டால் குழந்தையை பாத்ரூமிற்கு அழைத்துப் போய் பழக்கலாம். இயற்கையிலேயே ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் இன்னும் இந்த விஷயத்தில் சீக்கிரம் தேறிவிடுகிறார்கள் என்கிறார் டாக்டர் ஸ்பாக். சில குழந்தைகளுக்கு சொல்ல வராது. குறிப்பாக ஆண் குழந்தைகள் அந்த உறுப்பைப் பிடித்துக் கொண்டே (அதாவது மூச்சாவை அடக்கிக்கொண்டு) விளையாடிக் கொண்டிருப்பார்கள். சட்டென்று அவர்களை பிடித்து பாத்ரூமிற்கு அழைத்துப் போகவேண்டும்.

ஓர் விஷயம்: இந்த விஷயத்திலும் குழந்தையை மிரட்டி, அடித்து எல்லாம் செய்யாதீர்கள். சில குழந்தைகள் ரொம்ப சீக்கிரம் பழகிக்கொண்டு விடுவார்கள். சில குழந்தைகளுக்கு கொஞ்சம் நாளாகும். ஒரு வயது வரை அவர்களுக்கு இந்த ஒன், டூ என்பதெல்லாம் தெரியவே தெரியாது. எப்போது ‘போக’ வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதே அங்கேயே போய்விடுவார்கள். மெல்ல மெல்லத் தான் இவைகளைப் பற்றிய உணர்வு வரும்.

டூ பாத்ரூம் போக எப்படிப் பழக்குவது? சில குழந்தைகள் காலையில் எழுந்தவுடனே போய் விடுவார்கள். அப்படி உங்கள் குழந்தை இருந்தால், காலையில் எழுந்தவுடன் potty மேல் உட்கார வைக்கலாம். அதற்கு முன் அந்த பாட்டியின் மேல் (என் மேல இல்லீங்கோ!) விளையாட்டாக உட்கார வைத்து பழக்குங்கள். போகிறார்களோ இல்லையோ, சும்மா உட்கார்ந்து பார்க்கட்டும்.

சில குழந்தைகள் சாப்பிட்டவுடனே டூ பாத்ரூம் போவார்கள். ஏற்றுமதி ஆனாவுடன் இறக்குமதி!

இது எதுவுமே நடக்கவில்லை என்றால், (சாப்பிட்டவுடன்) குழந்தையின் ஜட்டியை அவிழ்த்துவிட்டுவிட்டு பாட்டியின் உட்கார வையுங்கள். போகவில்லையே என்று நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். நிறைய நேரம் கொடுங்கள். சில குழந்தைகள் நீண்ட நேரம் பாட்டியின் மேல் உட்கார்ந்துவிட்டு, எழுந்தவுடன் தரையின் மேல் போகும்! இல்லை ஏதாவது ஒரு மூலைக்குப் போய் போகும்.

ஆனால் இரண்டு வயதுக்கு மேல் ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கும். முதல் குழந்தைக்குத் தான் இந்தப் பாடெல்லாம். இரண்டாவது முதல் குழந்தையைப் பார்த்து பார்த்து தானாகவே கற்றுக் கொண்டுவிடும்.

அதேபோல் இரவு படுக்கப் போகும் முன் ஒருமுறை ஒன் பாத்ரூம் போய்விட்டுப் படுக்க வேண்டும் என்பதை முறைப்படுத்துங்கள். சில குழந்தைகள் பத்து வயது வரை படுக்கையை நனைப்பார்கள். கோபப்படுவது, குழந்தையை மிரட்டுவது எதுவும் பயன்படாது. பொறுமை பொறுமை பொறுமை. இது ஒன்றுதான் குழந்தைகளிடம் செல்லுபடியாகும் ஒரே மந்திரம்.

தினமணிகதிர் பத்திரிகையில் திரு இரா.சோமசுந்தரம் என்பவர் எழுதியிருந்த ‘ஒன்று போதும்…’ என்கிற கதை இந்த விஷயத்தை வெகு அழகாகக் கையாளுகிறது.

ஏழு வயதான குழந்தை இரவில் படுக்கையை நனைக்கிறது. அம்மாவிற்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. உறவினர் வீடுகளில் இரவு தங்குவதை தவிர்க்கிறாள். தன்னுடன் படுக்க வைக்காமல் கீழே தனியாகப் படுக்க சொல்லுகிறாள் குழந்தையை. டாக்டர் மாற்றி டாக்டர் என்று அலைகிறாள். இப்படி இருக்கும்போது அம்மாவின் பெரியப்பா காலமாகிறார். குழந்தைகள் இல்லாத, தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியம்மாவை தன் வீட்டிற்கு கூட்டி வருகிறாள். பெரியம்மா குழந்தையை தன்னுடன் படுக்க வைத்துக் கொள்ளுகிறார்.

குழந்தை தயங்கியபடியே பாட்டியிடம் சொல்லுகிறது: ‘நான் ராத்திரில படுக்கையிலேயே உச்சா போயிடுவேன்’

‘நானும்தான் ராத்திரியிலே உச்சா போவேன்’ என்கிறார் பாட்டி.

‘நீயுமா பாட்டி?’

‘…….க்கும். நீ படுக்கையில போவ, நான் பாத்ரூம்ல போவேன். அவ்வளவுதான்’.

‘எல்லோரும் குழந்தையா இருந்தா படுக்கையில போவாங்க. படுக்கையை நனைக்காத குழந்தை எது?’

பாட்டியின் வருகை, அவள் பேச்சு எல்லாமே குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. குழந்தை தூங்க ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு, குழந்தையிடம். ‘எனக்கு உச்சா வருது’ என்பார். குழந்தை, ‘எனக்கும்…’ என்று போய்விட்டு வந்து படுக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் பழக்கம் மாறுகிறது என்று கதை முடிந்திருந்தது.

பாட்டியின் நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் இருந்து குழந்தைகளை பழக்க வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

செல்வக் களஞ்சியமே Copyright © 2015 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book